Minister for Law and Home Affairs K Shanmugam delivered Prime Minister and Minister for Finance Lawrence Wong's National Day Message 2024 in Tamil. The message was recorded at the Istana, and telecast on 8 August 2024.
என் சக சிங்கப்பூரர்களே.
இது என்னுடய முதல் தேசிய தினச் செய்தி.
இஸ்தானாவில் இருக்கும் ஸ்ரீ தெமாசெக்கிலிருந்து நான் உங்களுடன் பேசுகிறேன். இஸ்தானாவின் முக்கிய பகுதிகளில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், என்னுடைய அலுவலகம் இப்போதைக்கு இங்கு மாற்றப்பட்டுள்ளது.
1965ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவுப் பொழுதைத் திரு லீ குவான் யூவும் அவருடைய குடும்பத்தினரும் இங்குதான் கழித்தனர். அன்று காலை, மலேசியாவுடனான பிரிவினை ஒப்பந்தத்துடன் திரு லீ சிங்கப்பூர் திரும்பினார். பாதுகாப்புக் கருதி, அவர் ஸ்ரீ தெமாசெக்கில் தங்கினார். அன்றிரவு முழுவதும் ஒரு புது தேசத்தை எப்படி ஆரம்பத்திலிருந்து உருவாக்குவது என்ற கவலையில் திரு லீ மூழ்கியிருந்தார். அவர் அதுபற்றித் தம் புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெரும் சவாலை எதிர்கொள்ளத் திரு லீயும் அவருடைய சகாக்களும் நம் முன்னோடித் தலைமுறையினரின் ஆதரவோடு ஆயத்தமாகினர். அவர்கள் மனவுறுதியும் விடாமுயற்சியும் கொண்டு, பெரும் தடைகளைக் கடந்தனர். இன்று நாம் வாழும் இந்த நாட்டின் அடித்தளத்தை நிலைநாட்டினர்.
அதனால், இந்தத் தேசிய தினத்தில் நாம் மகிழ்வதற்கும் பெருமை கொள்வதற்கும் பல காரணங்கள் உள்ளன. சாதாரண நாடாகத் தொடங்கிய சிங்கப்பூரின் கதையை வெற்றிக் கதையாக மாற்றியமைத்துள்ளோம். ‘இயலாத நாடு’ என்ற நிலையைக் கடந்து, உலக அரங்கில் மிளிர்கின்றோம்.
ஆனால், புதிய சவால்கள் காத்திருக்கின்றன.
உலகம் அதிக அளவில் மாறியுள்ளது; மாறிக்கொண்டு வருகிறது.
ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் பூசல்கள் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
அமெரிக்க-சீனப் பூசல்கள் தொடர்கின்றன. இப்போதைக்கு அவை நேரெதிரே மோதிக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், அவற்றின் கொள்கைகள் இந்த வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் பாதிக்கக்கூடும்.
உலகம் முழுவதும் Populism - அதாவது ஜனரஞ்சகப் போக்கு, பொருளியல் தேசியவாதம், தன்னைப்பேணித்தனம் ஆகியவை அதிகரித்து வருகின்றன.
பல நாடுகளில் அரசியல் மோசமடைந்துள்ளது. அதன் காரணமாக, அவசர நெருக்கடிகளை – குறிப்பாக, பருவநிலை மாற்றத்தை - சமாளிப்பது மேலும் கடினமாகிவிட்டது.
இவை நம் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவை. இரவில் நம் தூக்கத்தைக் கலைப்பதும் அவைதான். நாம் நம் தேசத்தை மீண்டும் தொடக்கத்திலிருந்து உருவாக்கப் போவதில்லை. இருப்பினும் நாம் மெத்தனமாகக் கடந்தகால உத்திகளை மட்டுமே நம்பியிருக்க முடியாது.
நாம் துடிப்பாகவும் தீர்க்கமாகவும் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
நாம் புதிய தீர்வுகளை நாடவேண்டும்; நமக்கான புதிய பாதையை உருவாக்கவேண்டும்.
இன்று, மேலும் சிறந்ததொரு சிங்கப்பூரை உருவாக்க அரசாங்கம் உங்களோடு எவ்வாறு சேர்ந்து செயல்படும் என்பது பற்றி நான் எடுத்துக்கூறுகிறேன்.
முதலாவதாக, நாம் நம் மக்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவோம்.
வளர்ச்சியடைந்த பொருளாதாரம் என்ற வகையில், நாம் முன்பு கண்ட அதிவேக வளர்ச்சியைத் தொடர்ந்து எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும் புத்தாக்கம், உற்பத்தித்திறன் ஆகியவற்றின்மூலம் நாம் தொடர்ந்து பொருளியல் வளர்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கவேண்டும்.
அதனால்தான் நாம் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறைகளிலும் இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களிலும், முதலீடு செய்து வருகிறோம்.
உலகளாவிய தளவாட மையமாக நம் போட்டித்திறனை அதிகரித்துக்கொள்ளவேண்டும். அதற்காக, நாம் பெரிய உள்கட்டமைப்புத் திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சாங்கி விமானநிலையத்தின் ஐந்தாம் முனையம், துவாஸ் துறைமுகம் அவற்றுள் சில.
இந்த உத்திகள் பயனளித்து வருகின்றன. அண்மை வாரங்களில், நான் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலரைச் சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரும் சிங்கப்பூர்மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிளவுபட்ட, பிரச்சினைக்குரிய ஓர் உலகில், அவர்கள் தங்கள் செயல்பாடுகளை ஆசியாவில் விரிவுபடுத்த விரும்புகின்றனர். அதற்குத் தேவையான நிலைத்தன்மையும் நம்பகத்தன்மையும் மிகுந்த ஓர் இடமாக, அவர்கள் சிங்கப்பூரைக் காண்கின்றனர்.
கடந்த ஓராண்டில், பல்வேறு தொழில்துறைகளைச் சார்ந்த பன்னாட்டுத் தொழில்நிறுவனங்கள் சிங்கப்பூரில் புதிய வசதிகளைத் திறந்துள்ளன. Pfizer, Hyundai, GlobalFoundries, Maersk முதலியவை அவற்றுள் சில. கூடிய விரைவில், BioNTech நிறுவனமும் ஒரு mRNA உற்பத்தித் தொழிற்சாலையை இங்கு திறக்க இருக்கின்றது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அத்தகைய முதல் தொழிற்சாலை அது. இந்த முதலீடுகள் நம் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதோடு, சிங்கப்பூரர்களுக்குப் புதிய வேலைகளையும் உருவாக்கித் தருகின்றன.
ஆனால், இத்தகைய வேலைகள் நம் ஊழியர்களுக்கும் புதிதானவைதான். அவற்றுக்குப் புதிய ஆற்றல்கள் தேவைப்படும்.
இந்த வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்ள, நாம் நமது ஊழியர்களை முனைப்புடன் ஆயத்தப்படுத்தவேண்டும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர்வழி, ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்கள் வாழ்க்கை முழுவதும் புதிய ஆற்றல்களைப் பெற உதவுவோம். கல்வி பள்ளியோடு நின்றுவிடும் ஒன்றல்ல. திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் புதியனவற்றைச் செய்து பார்க்கவும் நமது நடுத்தர வயது ஊழியர்களுக்கு இப்போது மேலும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
வருங்காலப் பொருளியலுக்கான ஆற்றல்களை ஊழியர் ஒவ்வொருவரும் பெறவேண்டும். அதற்காக நாங்கள் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸுடனும் முதலாளிகளுடனும் சேர்ந்து செயல்படுவோம்.
இரண்டாவதாக, வாழ்க்கைச் செலவினத்தைச் சீராக வைத்துக்கொள்ளும் முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம்.
பல நாடுகளில் பணவீக்கம் ஒரு பிரச்சினையாக உள்ளது. சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கல்ல.
விலைவாசி அதிகரிப்பு எல்லோரையும் பாதிக்கிறது.
உலகளாவிய விலைகளை நம்மால் கட்டுப்படுத்த இயலாது.
ஆனால், சிங்கப்பூர் வெள்ளி வலுவாக இருக்கிறது. அதனால், பணவீக்கத்தின் மோசமான விளைவுகளை நாம் தவிர்த்து வருகின்றோம்.
இவ்வாண்டு, பொருளியல் வளர்ச்சி அதிகரித்திருப்பதால் சம்பளங்களும் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
இதற்கிடையே, தொடர்ந்து பணவீக்கத்தின் விளைவுகளைக் குறைக்க நாம் முற்படுவோம். குறிப்பாக, குறைந்த-நடுத்தர வருமானச் சிங்கப்பூரர்களுக்கு, சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள், ரொக்க வழங்குதொகைகள், பயனீட்டுத் தள்ளுபடிகள் முதலான ஆதரவுத் திட்டங்கள்வழி நாம் உதவுவோம்.
நீண்டகால அடிப்படையில், நமது பொருளியல் முழுவதிலும் புத்தாக்கத்தை ஊக்குவித்து, உற்பத்தித்திறனை மேம்படுத்தவேண்டும். அதுவே, வாழ்க்கைச் செலவினம் சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வு. அப்போது பணவீக்கத்தைவிடச் சம்பளங்கள் மேலும் அதிகம் உயரும் என நாம் எதிர்பார்க்கலாம். அதன்மூலம் எல்லாச் சிங்கப்பூரர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரமும் மேம்படும்.
அதேநேரத்தில், பலருக்கும் கட்டுப்படியான வீடுகள் கிடைக்குமா என்ற கவலை இருக்கிறது.
விலையேற்றத்தைத் தணிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளையும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் எண்ணிக்கையையும் நாம் அதிகரித்திருக்கிறோம்.
இந்த நடவடிக்கைகள் சொத்துச் சந்தையை நிலைப்படுத்த உதவும்.
அக்டோபர் மாதத்தில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதிய Standard, Plus, Prime வீட்டுத் திட்டத்தின்கீழ் முதல் தொகுதி வீடுகளை அறிமுகம் செய்யும். Plus, Prime வட்டாரங்களில் உள்ள வீடுகள் கூடுதல் நிதியுதவி பெற்று, மேலும் கட்டுப்படியான விலையில் விற்பனைக்கு விடப்படும். ஆனால், இந்தப் புதிய முறையை நியாயமானதாக வைத்திருக்க, இத்தகைய வீடுகள் விற்கப்படும்போது முன்னர் வழங்கப்பட்ட கூடுதல் நிதியுதவியும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் திரும்பக் கொடுக்கப்படவேண்டும்.
நமது வீடமைப்புக் கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், நாம் வீட்டு உரிமையாளர்கள் நிறைந்த நாடாக இருக்க உதவும். சிங்கப்பூரின் பொது வீடமைப்பு அனைவருக்கும் எளிதில் கிடைக்கப்பெறும், செலவு கட்டுப்படியான, நியாயமான ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.
மூன்றாவது, நமது சமூக ஆதரவுக் கட்டமைப்பை நாம் வலுப்படுத்துவோம்.
அதிவேகமான மாற்றமும் நிலையின்மையும் கொண்ட இந்தப் புதிய சூழலுக்குச் சிலரால் மாறமுடியும். சிலருக்கு அது சிரமத்தைக் கொடுக்கும்.
நமது மூப்படையும் மக்கள்தொகைக்குக் கூடுதலான சுகாதாரச் சேவைகளும் சமூக ஆதரவும் தேவை. நம்மில் பலருக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளன. பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும். வயதான பெற்றோரையும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இதனால்தான், அரசாங்கம் நமது சமூக உள்கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்துவருகிறது.
கடந்த இரண்டு வரவுசெலவுத் திட்டங்களில், குறைந்த வருமான ஊழியர்களைக் கைதூக்கிவிடவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும் ஓய்வுக்காலத்திற்குப் போதுமான தொகையை மேம்படுத்தவும் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
நமது மூத்தோரை இன்னும் சிறப்பாகக் கவனித்துக்கொள்ள தேசிய அளவிலான திட்டங்களையும் நாம் கொண்டு வந்திருக்கிறோம். மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டம், நலமாக மூப்படைதல் எஸ்ஜி செயல்திட்டம் அவற்றுள் அடங்கும்.
நாம் இன்னும் அதிகம் செய்யவிருக்கிறோம்.
முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தின்மூலம், நமது சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்த மேலும் முயற்சிகளை மேற்கொள்வோம். நம் குடும்பங்களுக்கான ஆதரவை மேம்படுத்துவோம். சிங்கப்பூரர்கள் வேலையின்மைப் பிரச்சினையிலிருந்து மீண்டுவர உதவி செய்வோம்.
இதற்கான சில யோசனைகள் உள்ளன. அவை பற்றி தேசிய தினக் கூட்டத்தின்போது நான் கூறுவேன்.
அரசாங்கம் அதிகமாகச் செய்தாலும்கூட, தனிப்பட்ட, சமூக முயற்சிகளையும் நாம் வலியுறுத்துவோம். ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கவும், கிடைக்கக்கூடிய ஆதரவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும், தங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்யவும், தங்கள் குடும்பங்களை மேம்படுத்தவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிறோம். நல்ல நிலையில் இருப்பவர்கள் மற்றவர்களுக்குக் கைகொடுக்க முன்வரவேண்டும். அப்படித்தான் நாம் நமது சமுதாயத்தை ஒற்றுமையாகவும் மீள்திறன் மிக்கதாகவும் வலிமையாகவும் வைத்திருக்கமுடியும்.
இந்தப் புதிய உலகை எதிர்கொள்வதற்கான நமது உத்திகள் சிலவற்றை நான் பகிர்ந்துகொண்டுள்ளேன். எதிர்வரும் சவால்கள் இதுவரை கண்டிராதவை.
அவற்றுக்கு விரைவான, எளிதான தீர்வுகள் என்று எதுவுமில்லை.
ஆனால், பிரச்சினைகள் பெரிதாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்கான நமது உறுதி அதனினும் பெரிதாக இருக்கவேண்டும்.
59 ஆண்டுக்கு முன், நாம் மூன்றாம் தர உலக நாடாக இருந்தோம். வாழ்வதற்காகப் பிழைப்பதா அல்லது தற்காத்துப் பிழைப்பதா என்ற ஒரு நிலையில் இருந்தோம். இன்று நாம் உலகின் மிகப் பரபரப்பான கடல் துறைமுகத்தையும் விமானநிலையத்தையும் கொண்டிருக்கிறோம்; உலகில் வாழ்வதற்குச் சிறந்த நகரங்களில் ஒன்றாக நாம் திகழ்கிறோம்; படிப்பறிவு அதிகம் உள்ள மக்களாக இருக்கிறோம்.
நாம் ஓர் இளம் தேசம். ஆனால், நாம் ஒன்றாகச் சேர்ந்து பல சவால்களைக் கடந்து வெற்றி பெற்றுள்ளோம். அதனால், நமது எதிர்காலம் குறித்து நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். சவால்கள் இருப்பினும் நாம் சிங்கப்பூரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம். நமது எதிர்காலம் வாய்ப்புகள் நிறைந்த ஒன்றாகப் பிரகாசிக்கும்.
எல்லோரும் மதிக்கப்படும் ஓர் இல்லம்.
இங்கு ஒவ்வொருவரும் தங்களுடைய மிகச் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தமுடியும்.
இங்கு நாம் ஒருவருக்கொருவர் வெற்றிபெற எப்போதும் ஒன்றிணைந்து உதவி செய்வோம்.
முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டத்தில், சிங்கப்பூரர்கள் நமது சமூக இணக்கத்தை வலுப்படுத்தவும் புதிய உயரங்களை எட்டுவதற்கு ஒன்றிணைந்து செயல்படவும் கடப்பாடு தெரிவித்தனர். அந்த லட்சிய உணர்வு இவ்வாண்டுக்கான தேசிய தின அணிவகுப்பின் கருப் பாடலில் எதிரொலிக்கிறது. “நாம் ஒருவரையொருவர் சார்ந்திருந்தால் மட்டுமே, இந்த வீடு ‘நமது இல்லம்’ என்ற உணர்வை ஈன்றெடுக்கும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஒன்றாய் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக முன்னேறிச் செல்வோம்.”
என் சக சிங்கப்பூரர்களே, நாம் இந்தப் பயணத்தில் ஒன்றாக இருக்கிறோம். ஒருவர் மற்றொருவருக்காக இருக்கிறோம். வாருங்கள், ஒன்றுபட்ட மக்களாய் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்வோம்.
எனது இனிய தேசிய தின வாழ்த்துகள்!
என் சக சிங்கப்பூரர்களே, நாம் இந்தப் பயணத்தில் ஒன்றாக இருக்கிறோம். ஒருவர் மற்றொருவருக்காக இருக்கிறோம். வாருங்கள், ஒன்றுபட்ட மக்களாய் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்வோம். பிரதமர் லாரன்ஸ் வோங்