Minister for Home Affairs and Law K Shanmugam delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2023 in Tamil. The message was recorded at SkyOasis@Dawson in Queenstown and telecast on 8 August 2023.
என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம்!
இவ்வாண்டு சிங்கப்பூரின் 58ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறோம். நாம் ஓர் இளம் நாடாக இருந்தாலும், பல சவால்களை இதுவரை சமாளித்து வந்துள்ளோம். சிங்கப்பூர் நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளது. இதற்குக் காரணம், நமது ஒற்றுமையே. இந்த ஒற்றுமை நம்மை ஒன்றாகப் பிணைக்கும். அதன் காரணமாக, எதிர்காலத்தில் சிரமமான காலங்களிலும்கூட, ‘நாம் வெற்றி அடைவோம்’ என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. விலைவாசிகள் உயர்ந்து வருகின்றன. குடும்பங்களையும் தொழில்களையும் அது பாதித்துள்ளது. அரசாங்கத்தால் முடிந்தளவு உங்களுக்கு உதவி செய்வோம். குறிப்பாக, நடுத்தர, குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உத்தரவாதத் தொகுப்புத்திட்டம் உதவும். மற்ற பல ஆதரவுத் திட்டங்களும் உள்ளன. இந்தச் சிறிது சிரமமான நிலைமை இன்னும் கொஞ்சம் காலத்திற்கு நீடிக்கலாம். இதனைச் சமாளிக்க அரசாங்கம் உங்களுக்குத் துணைநிற்கும். இந்த உரையில் அடுத்து, நான் அண்மையில் நடந்த சில விஷயங்களைப் பற்றிப் பேசுகிறேன்.
நல்ல அரசாங்கம், நம்பிக்கை, நாணயம்
அண்மையில், அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பற்றிய சில சர்ச்சைகள் எழுந்தன.
இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது எழத்தான் செய்யும். நாம் அவற்றை எவ்வாறு கையாள்கிறோம் என்பது முக்கியம். இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக, நேர்மையாக, கண்ணியமாகக் கையாளவேண்டும். நாம் அப்படித்தான் செய்தோம்.
முதல் சம்பவத்தில், இரு அமைச்சர்களுக்குப் பாரபட்சம் உள்ள வகையில் சில சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் கேள்விகள் எழுந்தன. நான் இரு அமைச்சர்களும் முழுமையாக விசாரிக்கப்பட ஆணையிட்டேன். இறுதியில் அவர்கள் தவறு எதுவும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது.
இரண்டாவது சம்பவத்தில், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைச்சர் ஒருவரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது. முழு விசாரணை இன்னும் தொடர்கிறது.
மூன்றாவது சம்பவத்தில், நாடாளுமன்ற நாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. அது சரியில்லை. இருவரும் பதவி விலகினர்.
நான் கூறியதுபோல், மூன்று விஷயங்களிலும் வெளிப்படையாக, நேர்மையாக, கண்ணியமாக நாம் செயல்பட்டுள்ளோம்.
நான் ஆணித்தரமாகக் கூறுகிறேன். நமது அரசாங்கம் ஊழலற்ற, நேர்மையான முறையில் நாட்டை நடத்தும். சிங்கப்பூரர்களும் நமது பங்காளிகளும் அதனை எதிர்பார்க்கிறார்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் ஆகியவற்றை நாம் உயரிய நிலையில் கட்டிக்காப்போம்.
பெரும்பாலான சிங்கப்பூரர்கள், அரசாங்கத்தின்மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனை நாம் கட்டிக்காப்போம். வலுப்படுத்துவோம்.
அரசாங்கத்தின்மீது மக்கள் கொண்ட நம்பிக்கையால், நாம் மூவாண்டு இருந்த கிருமிப்பரவலை ஓரளவு நல்ல முறையில் சமாளித்தோம். அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளிலிருந்து சீக்கிரத்தில் நாம் மீண்டுவிட்டோம். தற்போது, பிரச்சினைகள் சூழ்ந்த உலகில், நாம் வலிமையுடன் செயல்படும் நாடாகத் திகழ்வதற்கு அந்த நம்பிக்கையே மூலக்காரணம்.
வருங்காலத்தை நோக்கி
அடுத்து, நான் நம்முடைய எதிர்காலச் சவால்களைப் பற்றி சிறிது பேசுகிறேன். நமக்கு முன் ஏராளமான சவால்களும் பணிகளும் உள்ளன. துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நான்காம் தலைமுறைக் குழுவினரும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த ஓராண்டில், அவர்கள் பல்லாயிரக்கணக்கான சிங்கப்பூரர்களுடன் இந்தத் திட்டத்தைப் பற்றிக் கலந்துரையாடியுள்ளார்கள்.
நம் சமுதாய இணக்கத்தை மேம்படுத்தவேண்டும். அதுவே ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் நோக்கம். நமது எதிர்காலத்தில், ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் அர்த்தமுள்ள பங்கு உள்ளது. நமது கனவுகளை நனவாக்க எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகிறோம்? – என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
வீடமைப்பு
இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், சிங்கப்பூரர்களுக்கு முக்கிய தேவைகளில் ஒன்று ‘வீடு’. முக்கியமாக, நல்ல, கட்டுப்படியான வீடுகள். வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், நமக்கு வெறும் வீடு மட்டுமல்ல. அவை, நாம் பெருமையுடன் உரிமை கோரும் இல்லம்; நமது குடும்பங்கள் வாழும் அக்கம் பக்கப் பேட்டை; நாம் ஒன்றிணைந்து உருவாக்கும் சமூகம்.
இன்று, நான் சிங்கப்பூரின் பழமையான வீடமைப்புப் பேட்டைகளில் ஒன்றான குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் உள்ள SkyOasis@Dawson கட்டடத்திலிருந்து உங்களுடன் பேசுகிறேன். 1950களில், குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில்தான் SIT கட்டிய முதல் சில வீடுகள் அமைந்திருந்தன. சுமார் 15 ஆண்டுக்கு முன், நாம் இப்பேட்டையைப் புதுப்பிக்கத் தொடங்கினோம்; புதிய கழக வீடுகளைக் கட்டினோம்; பொது இடங்களைப் பொலிவாக்கினோம். இப்போது, அழகான, மக்கள் விரும்பும் குடியிருப்புப் பேட்டைகளில் ஒன்றாக டாவ்சன் திகழ்கிறது - சிங்கப்பூர் வீடமைப்பு வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஆரம்பத்திலிருந்து, அரசாங்கம் வீடமைப்பில் பெரும் முதலீடு செய்துள்ளது. லட்சக்கணக்கான சிங்கப்பூர்க் குடும்பங்களுக்குக் கட்டுப்படியான, உயர் தரமான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.
இதுவரை, அரசாங்கம் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளிலும் முதிர்ச்சி அடையாத பேட்டைகளிலும் வீடுகளைக் கட்டி வந்துள்ளது. முதிர்ச்சி அடையாத பேட்டைகளிலுள்ள வீடுகளின் விலை குறைவாக இருக்கும். அதற்குக் காரணம், அவற்றைச் சுற்றியுள்ள வசதிகள் சற்று குறைவாக இருக்கலாம்; அல்லது அதன் அமைவிடம் சற்று தொலைவாக இருக்கலாம். அதேவேளையில், முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில், வீடுகளைச் சுற்றியுள்ள வசதிகளும் அவற்றின் அமைவிடமும் மேலும் சிறப்பாக இருக்கக்கூடும். அதனால், பலரும் அவற்றை விரும்புவர். அவற்றின் விலையும் முதிர்ச்சி அடையாத பேட்டைகளைவிட அதிகமாகவே இருக்கும்.
ஆனால், நம் வீடமைப்புச் சூழல் மாறி வருகிறது. நாம் தொடர்ந்து மேலும் அதிகமான வீடுகளைக் கட்டிவரும் வேளையில், முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் பயன்படுத்தப்படாத நிலப்பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேநேரத்தில், தற்போதைய முதிர்ச்சி அடையாத பேட்டைகளின் போக்குவரத்து வசதிகள் மேம்படும்போது, அவையும் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளுக்கு நிகராக மேம்பாடு காண்கின்றன.
எனவே, வருங்காலத்தில், டாவ்சன் போன்ற முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில், மேலும் அதிகமான வீடுகள் கட்டப்படும். அத்தகைய வீடுகளுக்கான தேவை இயல்பாகவே அதிகரிக்கும். அவற்றின் தொடக்க விலையும் மறுவிற்பனை விலையும் அதனைப் பிரதிபலிக்கும்.
சூழ்நிலை மாறி வந்தாலும், அனைத்து வருமானப் பிரிவுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கும் வீடு எளிதில் கிடைக்கும்படி நாம் செய்யவேண்டும். விலை கட்டுப்படியாக இருக்கவேண்டும். அதை நாம் தொடர்ந்து உறுதிசெய்யவேண்டும். எதிர்காலத்தில், நமது பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் நமது பொது வீடமைப்பு வலுவாய் இருக்கவேண்டும். இது எங்களுடைய வாக்குறுதி. நாங்கள் இதனைக் கட்டாயம் நிறைவேற்றுவோம்.
இந்த இலக்குகளை அடைவதற்கு, நாம் நம்முடைய வீடமைப்புத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யவேண்டும். தேசிய தினக் கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, இதைப் பற்றிக் கூறுவேன்.
நலமாய் மூப்படைதல்
பொது வீடமைப்புத் திட்டங்களை நாம் மாற்றி வருவதைப் பற்றிப் பேசினேன். அதேசமயத்தில், நம் மக்கள் விரைவாக மூப்படைந்து வருகின்றனர். அவர்களின் தேவைகளை ஈடுசெய்வதற்கான முறையில் நமது வீடமைப்புப் பேட்டைகளும் வீடுகளும் இருக்கவேண்டும். அதற்கான வேண்டிய முயற்சியை நாம் செய்து வருகிறோம்.
இன்று, ஐந்தில் ஒரு சிங்கப்பூரர் 65 வயதுக்கும் மேற்பட்டவர். 2030ஆம் ஆண்டுக்குள், நான்கு சிங்கப்பூரர்களில் ஒருவர் முதியோராக இருப்பார்.
இதனால், நம் பேட்டைகள் மூத்தோருக்கு உகந்ததாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, மூத்தோர் தங்கள் வழிப்பாதையை மேலும் எளிதில் கண்டறிய, கண்களுக்கு மேலும் எளிதில் புலனாகும் அறிவிப்புகள் இருக்கும். மூத்தோர் மேலும் எளிதாகப் பயணம் செய்யவேண்டும். அதற்குக் கூடுதலான ஓய்விடங்களையும் நடைபாதைகளையும் இதர வசதிகளையும் உருவாக்குவோம். நம் மூத்தோரின் சொந்த வீடுகளில் முதியோருக்கு உகந்த வகையில் கூடுதலான சாதனங்களையும் பொருத்துவோம்.
உள்கட்டமைப்பு மட்டுமல்ல. மூத்தோர், சமுதாயத்தில் ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும். அதற்கு, சமூக இடங்களை மேம்படுத்துவோம்; துடிப்பாக முதுமையடையும் நிலையங்களை அதிகரிப்போம்; மூத்தோருக்குத் தேவையான திட்டங்களை மேம்படுத்துவோம். நம் மூத்தோர் நல்ல உறவுகளை உருவாக்கிக்கொள்ளவும் நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோருடன் தொடர்பில் இருக்கவும் இந்த முயற்சிகள் உதவும் என நாங்கள் நம்புகிறோம்.
மூத்தோருக்கு முக்கியமான மற்றொன்று போதுமான நிதியிருப்பு. மக்கள் தாங்கள் வேலை செய்யும் காலத்தில், ஓய்வுக்காலத்திற்குப் போதுமான அளவு சேமிப்பதை நாம் உறுதிசெய்யவேண்டும். இதற்கு முக்கிய வழி, மத்திய சேமநிதி. நாம் மத்திய சேமநிதிக் கட்டமைப்பைப் படிப்படியாக மேம்படுத்தியுள்ளோம். குறைந்த வருமான ஊழியர்களுக்கும் உதவிகளையும் வழங்கி வருகிறோம். ‘Workfare’ எனப்படும் வேலை நலத்திட்டம், ‘Progressive Wages’ எனப்படும் படிப்படியாக உயரும் சம்பளத் திட்டம் ஆகியவை இதற்கு உதாரணம். ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட சில ஊழியர்களுக்கு, மத்திய சேமநிதிக் கணக்கில் அவர்களுடைய ஓய்வுக்காலத்திற்குப் போதுமான நிதியிருப்பு இல்லை. சிறிது கூடுதல் உதவி இருந்தால், அது சாத்தியமாகும். இதுபற்றியும் நான் தேசிய தினக் கூட்டத்தில் உரையாற்றுவேன்.
நமது முதுமைக்காலத்தில், நமது தேவைகளுக்கு அரசாங்கம் ஓரளவு உதவி செய்யமுடியும். முடிந்தவரை ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நம் பங்கையாற்றவேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தில் பதிந்துகொள்வோம்; நமது உணவுப் பழக்கத்தைக் கண்காணிப்போம்; துடிப்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்போம்; முடியும்வரை தொடர்ந்து வேலை செய்வோம். குடும்ப உறுப்பினர்களும் உதவலாம்: உங்கள் அன்புக்குரியவர்களை நன்கு பார்த்துக்கொள்ளுங்கள்; அவர்கள் வெளியே செல்ல ஊக்குவியுங்கள்; அவர்களின் மன, உடல் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். நம் மூத்தோர் நீண்டகாலத்திற்கு நலமாக வாழ, நாம் ஒன்றிணைந்து உதவலாம்.
இன்றைய நமது சிங்கப்பூரை நம் மூத்தோர் உருவாக்கித் தந்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட எல்லா சிங்கப்பூரர்களுக்கும் ஏற்ற இடமாக நமது நாட்டை நாம் உருவாக்குவோம். இது நம் லட்சியம். இது நம் இல்லம்.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம்
வீடமைப்பு, மூப்படைதல் பற்றிப் பேசியுள்ளேன் – அவை இரண்டு முக்கிய அம்சங்கள். துணைப் பிரதமர் வோங்கும் நான்காம் தலைமுறைக் குழுவினரும் கவனித்துவரும் அம்சங்களில் அவையும் அடங்கும்.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தில் மேலும் பல அம்சங்கள் உள்ளன. வாழ்நாள் முழுவதும் எப்படி திறன்களை மேம்படுத்தி, வாழ்க்கையில் முன்னேறமுடியும்? எளிதில் பாதிக்கப்படுவோரை எப்படி மேலும் பார்த்துக்கொள்ளமுடியும்? ஒரு தேசமாக நமது ஒருமைப்பாட்டையும் கடப்பாட்டையும் எப்படி வலுப்படுத்தமுடியும்? – என்று பல குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.
இவ்வாண்டின் பிற்பகுதியில், நான்காம் தலைமுறைக் குழுவினர், ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்களை நிறைவுசெய்வர். துணைப் பிரதமர் வோங்கும் அவருடைய குழுவினரும் சிங்கப்பூரர்களுடன் இணைந்து பணியாற்றி, நமது முன்னேற்றத்திற்கான புதிய பாதையை வகுப்பார்கள். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
முடிவுரை
நான் வெளிநாட்டுத் தலைவர்களை அடிக்கடி சந்திக்கும்போது, சிங்கப்பூர் அவர்களை எவ்வாறு கவர்ந்துள்ளது என்று என்னிடம் பலரும் கூறுவார்கள். நீண்டகாலத்தைப் பற்றிச் சிந்தித்து, மிகச் சிறந்த இலக்குகளை வகுத்து, அவற்றை சாதித்துக்காட்டும் நமது திறனை அவர்கள் பாராட்டுகின்றனர்.
‘அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலுள்ள வலுவான நம்பிக்கை இல்லாவிடில், இவை எதுவுமே சாத்தியம் இல்லை’ என்று நான் அவர்களிடம் கூறுவேன். இதுதான் மற்ற நாடுகளுடன் ஒப்புநோக்க, சிங்கப்பூருக்கு உள்ள முக்கியமான பலம். இதுவே நம்மைத் தனிச் சிறப்புடன் விளங்கச் செய்கின்றது. நாம் இந்த நம்பிக்கையைக் கட்டிக்காக்கவேண்டும். அதனை ஒருபோதும் இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இந்தத் தேசிய தினத்தில், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். நமது கடந்தகாலத்தில் மிகச் சிறந்த அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. எனினும், சிங்கப்பூரின் இன்னும் மிகச் சிறந்த அத்தியாயங்கள் இனிவரும் காலத்தில்தான் எழுதப்படவுள்ளன என்று நான் நம்புகிறேன். நாம் தொடர்ந்து, பெரிய லட்சியங்களைக் கொண்டிருப்போம்; கடினமாக உழைப்போம்; ஒற்றுமையாக இருப்போம். ஒன்றுபட்டு, நாம் வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம்.
அனைவருக்கும் இனிய தேசிய தின வாழ்த்துகள்!
நாம் தொடர்ந்து, பெரிய லட்சியங்களைக் கொண்டிருப்போம்; கடினமாக உழைப்போம்; ஒற்றுமையாக இருப்போம். ஒன்றுபட்டு, நாம் வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம். பிரதமர் லீ சியன் லூங்