National Day Message 2010 (Tamil)

SM Lee Hsien Loong | 8 August 2010

Minister for Law K Shanmugam delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2010 in Tamil. The message was telecast on 8 August 2010.

 

என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம்.

கடந்த ஆண்டின் மந்த நிலையிலிருந்து நம் பொருளியல் தற்போது நன்றாக மீண்டுள்ளது. இவ்வாண்டின் முதல் பாதியில் ஆண்டுக்கு ஆண்டு எனும் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 17.9 விழுக்காடு வளர்ந்துள்ளது. நிறைய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் வேலையின்மை குறைந்திருக்கிறது. நமது ஊழியர்கள் நல்ல சம்பளம், overtime வேலை மற்றும் நல்ல போனஸ்கள் ஆகியவற்றை இவ்வாண்டு எதிர்பார்க்கலாம்.

ஆண்டின் இரண்டாம் பாதியில், வளர்ச்சி பெரும்பாலும் மிதமாகும். இருந்தாலும், வர்த்தக, தொழில் அமைச்சு இவ்வாண்டுக்கான வளர்ச்சி 13 முதல் 15 விழுக்காட்டுக்கு இடையில் இருக்கும் என எதிர்பார்க்கிறது. இந்த சிறப்பான நிலை, நெருக்கடியின்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து எடுத்த நடவடிக்கையின் பலனாகும். நமது முயற்சி, சூழ்நிலைகளை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கு உதவியுள்ளது.

எனினும், நாம் கவனமாக இருக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து ஆபத்துகள் இருக்கின்றன, குறிப்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும். உலக நிதி அமைப்புமுறை இன்னும் முழுமையாகச் சீர்செய்யப்படவில்லை. சிங்கப்பூர் ஒரு சிறிய திறந்த போக்குடைய நாடு. உலகப் பொருளியல் மோசமாக மாறினால், நாம் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். நாம் தொடர்ந்து விழிப்புடன் இருந்து உலக மாற்றங்களைக் கவனிக்க வேண்டும்.

இந்த ஆண்டின் மிகச் சிறந்த வளர்ச்சி மீண்டும் ஆண்டுக்கு ஆண்டு வரும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், நீடித்த முயற்சியுடன் நாம் தொடர்ந்து நம் பொருளியலை வளர்க்க முடியும். நாம் நமது மக்களை மேம்படுத்தி, நமது கட்டமைப்பைக் கூட்டி, நம் உற்பத்தித்திறனை உயர்த்த வேண்டும். அவ்வாறு செய்தால், துடிப்புடன் வளர்ந்து வரும் ஆசியாவில் உள்ள வாய்ப்புகளை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு செழிப்பு அடையலாம்.

வளர்ச்சியின் பலனை எல்லா சிங்கப்பூரர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதே நமது இலக்காகும். சிங்கப்பூர் செழிப்படையும்போது, நீங்கள் பல அரசாங்கத் திட்டங்கள் மூலம் பயனடைவீர்கள்: இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகள், இன்னும் உயர் தரமான பள்ளிகள், மற்றும் மருத்துவமனைகள், கூடுதலான MRT பாதைகள், மற்றும் பொழுதுபோக்குக்கான புதிய இடங்களையும் கட்ட முடியும். நாம் ஒவ்வொருவரும் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவரும் கற்பதில் ஆர்வம் கொண்டு, உங்களால் முடிந்த அளவுக்கு முன்னேற வேண்டும். ஒவ்வொரு ஊழியருக்கும் உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்தன்மையுடன் இருப்பதற்கான அறிவாற்றல் வேண்டும். மற்றும் அவர்கள் திறனாளிகளாகத் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு மேலாளரும் அவருடைய ஊழியர்களின் பங்களிப்பையும், ஆற்றலையும், உச்ச அளவை அடையச் செய்ய வேண்டும். அதற்கு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதன்மூலம் இன்னும் அதிக வாய்ப்புகள், நல்ல சம்பளமுடைய வேலைகளும் கிடைக்கும். பிரகாசமான, மனநிறைவான வாழ்க்கையையும் நாம் அனுபவிக்க முடியும்.

இதைச் செயல்படுத்த நம் இளையர்களுக்குத் தேவையான கல்வி, மற்றும் நம் ஊழியர்கள் மேம்படுவதற்குத் தொடர் கல்வி மற்றும் பயிற்சி (CET) திட்டங்கள் ஆகியவற்றை அரசாங்கம் உருவாக்கும்.

நமது கல்வித் துறை மாணவர்களுக்கு நல்ல பலனளித்து வந்துள்ளது. நமது மாணவர்களில் பெரும்பாலானோர் உயர்க்கல்வி நிலையங்களுக்குச் செல்கின்றனர். தொழில்நுட்பக் கல்வி கழகங்கள், பலதுறை தொழில்நுட்பக் கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பட்டதாரிகளாகி, எளிதில் நல்ல வேலைகளைப் பெறுகின்றனர்.

நமது கல்வித் துறை ஆகச் சிறந்த மாணவர்களை மட்டும் நோக்கவில்லை. அது எல்லா மாணவர்களையும் மேம்படச் செய்கிறது. நமது பள்ளிகள் ஏட்டுப்படிப்பை மட்டும் கற்பிக்கவில்லை. நமது மாணவர்கள் சுயசிந்தனை உள்ளவர்களாக, தீர ஆலோசிக்கும் திறன் உள்ளவர்களாக வளர்ச்சியடைவது நமது கல்விமுறையின் குறிக்கோளாகும். மேலும், மாணவர்களுக்கு நல்ல அறநெறிப் பண்புகளும் புகட்டப்படுகின்றன. வெவ்வேறு ஆற்றல் மற்றும் ஆர்வம் கொண்ட மாணவர்கள், முன்னேறுவதற்கு நாம் பல்வேறு பாதைகளை உருவாக்கி வருகிறோம். ஒவ்வொரு அக்கம்பக்க பள்ளிக்கூடமும் அதன் சொந்த சிறப்பு அம்சங்களுடன் விளங்கும். ஒவ்வொரு மாணவரின் திறமையையும் வளர்க்கிறோம், ஆதரிக்கிறோம். மேலும், மாணவர்கள் உன்னத நிலையை அடைவதற்கான எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறோம்.

நாம் நமது கல்வித் துறையைத் தொடர்ந்து மேம்படுத்துவோம். மேலும் சிறப்புமிக்க கல்வித் திறனை வழங்க, இன்னும் அதிகமான ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நல்ல பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியும் சிறப்பாக விளங்க மற்றும் மாணவர்கள் இன்னும் அதிக சிறப்பான விருப்ப பாடங்களை எடுத்துப் படிக்க வகைசெய்வோம். நமது மாணவர்கள் மேலும் முன்னேறுவதற்குத் தொழில்நுட்பக் கல்வி கழகங்கள், பலதுறை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், புதிய துறைகளின் மூலம் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவோம். நமது இளையர்களுக்கு வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தை வழங்குவதற்கு, பெற்றோர்களும் மாணவர்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

நாம் தொடர் கல்வி மற்றும் தொடர் பயிற்சியையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த முக்கிய முயற்சியில் அரசாங்கம் 5 ஆண்டுகளில் $5.5 பில்லியன் முதலீடு செய்யும். சிங்கப்பூரின் கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு தொடர்க் கல்வி மற்றும் பயிற்சி வளாகங்கள் அமைக்கப்படும். மேலும், நிறுவனங்களும் ஊழியர்களும் உற்பத்தித்திறனை உயர்த்திக்கொள்ள பல திட்டங்களைச் செயல்படுத்துவொம். தொடர் கல்வி, மற்றும் பயிற்சியை, முதலாளிகளும், தொழிற்சங்கங்களும் வலுவாக ஆதரிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முயற்சி வெற்றி பெற, அவர்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம்.

நாம் நமது மக்களின் திறனை மேம்படுத்த அதிக முதலீடு செய்வோம். எனினும், நாம் பன்னாட்டு மக்களை வரவேற்று சிங்கப்பூருக்குப் பலம் சேர்க்க வேண்டும். இது நமக்கு மிகவும் முக்கியமாகும். மற்ற நாடுகள் நம்மைவிட மிகப் பெரியன மட்டுமல்ல, நம்மைவிட அதிகமான திறன் வாய்ந்தவர்களையும் கொண்டுள்ளன. நம் பொருளியலில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையையும், நம் மக்கள்தொகையில் உள்ள குழந்தைகள் பற்றாக்குறையையும், நாம் ஈடுசெய்ய வேண்டும். புதிய சிங்கப்பூரர்கள் Immigration மூலம் குடியேறாவிட்டால், காலப்போக்கில் நமது பொருளியலும், சமுதாயமும் துடிப்பை இழந்துவிடும். நமது குடிமக்களுக்கு வாய்ப்புகள் குறையும்.

நிறைய வெளிநாட்டு ஊழியர்களும், குடியேறிகளும் நம் நாட்டுக்குள் வருவது குறித்து, சிங்கப்பூரர்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது. அது நம் சமுதாயத்தின் கலாசாரத்தை மாற்றுமா? நமக்கு வேலையிடங்களிலும், நம் பிள்ளைகளுக்குப் பள்ளிகளிலும் கூடுதல் போட்டி வருமா? புதிதாக வருபவர்கள் இங்கே நிரந்தரமாக இருப்பார்களா? அவர்கள் நமக்கு ஏற்றவாறும், நாம் அவர்களுக்கு ஏற்றவாறும் இருக்க முடியுமா?

இவை கவனிக்கவேண்டிய கேள்விகள். புதிதாக வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய, நாம் குடியேறிகளின் Immigration-ஐ கட்டுப்படுத்துவோம். சிங்கப்பூருக்குப் பங்காற்றுபவர்கள் மட்டுமே நாட்டுக்குள் வரமுடியும். அவர்களை நம் சமுதாயத்துடன் ஒன்றிணைக்கவும், நாம் செயல்படுவோம். மேலும், குடிமக்களுக்கே முன்னுரிமை என்பதை நாம் தெளிவுபடுத்துவோம். இவை அனைத்தும் சிங்கப்பூரின் நன்மைக்கே நாம் செய்கிறோம்.

ஆனால், ஓரளவு வெளிநாட்டு ஊழியர்கள் இல்லாமல், புதிய குடிமக்கள், நிரந்தரவாசிகள் இல்லாமல் நம்மால் செயல்பட முடியாது. திறந்த மனதோடு நாம் அவர்களை வரவேற்க வேண்டும். சமுதாயத்தில் அவர்கள் ஒன்றிணைய உதவுவதோடு, குடிமக்கள் ஆகப் போகிறவர்களை இங்கு நிரந்தரமாக இருக்கும்படி ஊக்குவிப்போம். நாம் இதனை சிறப்பாகச் செய்தால், அடுத்த தலைமுறைக்குள், அவர்களுடைய பிள்ளைகள் நம் எல்லோரையும் போல் சிங்கப்பூரர்களாக இருப்பார்கள். நாமும் குடியேறிகளின் சந்ததிகள்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். புதிதாக வந்தவர்கள் இங்கு பிறந்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து, வேலை செய்தும் இருந்தால், சிங்கப்பூர் ஆற்றல் மிக்கதாக, பல்வேறு நாட்டு மக்களைக் கொண்டு, வெற்றிகரமாகத் திகழும்.

இளையர் ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது, அந்தத் தோற்றத்தைச் சிங்கப்பூர் உலகத்திற்குக் காட்ட வேண்டும். நமது நகரத் தோற்றம் வருபவர்களைக் கண்டிப்பாக வசீகரிக்கும். Marina Bay’ல் உள்ள வானளாவிய கட்டடங்களையும் நமது புதிய நகர்புறத்தையும்; நான் இப்போது இருக்கும் “The Pinnacle” போன்ற உயர்தரப் பொது வீடமைப்பையும்; மற்றும் தீவு முழுவதும் உள்ள அழகிய நகர்ப்புற இடங்களையும், இயற்கைப் பசுமையையும் அவர்கள் காண்பார்கள்.

ஆனால், இன்னும் முக்கியமாக, நம் மக்களின் இனிய மனதை அவர்கள் காண வேண்டும். இந்த முதல் இளையர் Olympic விளையாட்டுகளின் போது, சிங்கப்பூரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் உலகத்திற்குக் காட்டுவோம். நமது விளையாட்டாளர்கள் கடுமையாகப் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

20,000 பேர் உள்ள, நமது தொண்டூழியர் குழு நம் விருந்தாளிகளை வரவேற்பதற்குத் தயாராகக் காத்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் விளையாட்டாளர்களும், மற்றவர்களும் விரைவில் இங்கு வரப் போகிறார்கள். இந்தப் போட்டி நிகழ்ச்சி நல்ல விதமாக நடைபெறுவதற்கும், எல்லா வருகையாளர்களுக்கும் இந்த விளையாட்டுகள் மறக்க முடியாதவையாக அமைவதற்கும் எல்லா சிங்கப்பூரர்களும் உதவுவோம், என நான் நம்புகிறேன்.

நமது 45-வது தேசிய தினத்தில், ஒற்றுமை கொண்ட ஒரே மக்களாக நமது சாதனைகளைக் கொண்டாடுவோம். நம் முயற்சிகள் பெருமைக்குரியவை. அதே சமயத்தில் நாம் தொடர்ந்து மற்றவர்களிடமிருந்து கற்க வேண்டும், ஒவ்வொரு துறையிலும் மேம்பட வேண்டும். மற்றும் நமது எதிர்கால இலக்குகளை அடைவதற்கும் பாடுபட வேண்டும். நாளைய சிங்கப்பூர் இன்றைய சிங்கப்பூரைவிட இன்னும் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

நான் எல்லா சிங்கப்பூரர்களுக்கும் மகிழ்ச்சிகரமான தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம்.

 

TOP