Minister for Trade and Industry (Industry) S Iswaran delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2016 in Tamil. The message was recorded at SAFRA Punggol and telecast on 8 August 2016.
என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம்.
நாம் நம் தேசப் பயணத்தைத் தொடங்கியபோது, நம்மால் “ஒரு மக்கள்” என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. நாம் தனியாக எப்படி உயிர்வாழப் போகிறோம் என்பதே முக்கிய கேள்வியாக இருந்தது. ஒன்றுசேர்ந்து முன்னேறுவது பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இருந்தாலும், தடைகளை மீறி நாம் வெற்றிகண்டோம். சென்ற ஆண்டு, SG ஐம்பதின்போது, நாம் கடந்துவந்த வெற்றிப் பாதையைக் கொண்டாடினோம். இன்று சிங்கப்பூரர்கள் தங்கள் அழகான சொந்த வீடுகளில் வசிக்கிறார்கள். நமக்கு நல்ல
வேலைகளும், மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகளும் உள்ளன. ஆண்டுக்கு ஆண்டு, வருமானங்களும், வாழ்க்கைத் தரமும் முன்னேறியுள்ளன. நம் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெறுகின்றனர்.
மிக முக்கியமாக, நம் வெவ்வேறு இனங்களும் சமயங்களும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்றன. பொதுவான இடங்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம். மற்றவருடைய விழாக்களைக் கொண்டாடுகிறோம். பொங்கல் பண்டிகை, சீனப் புத்தாண்டு, ரமலான் மாத நோன்புத்துறப்பு போன்றவற்றில் நாம் அனைவருமே கலந்துகொள்கிறோம்.
இந்த நல்லிணக்கம் அரிதானது, மதிப்புமிக்கது. இதை உருவாக்கத் துணிவும் கடின உழைப்பும் தேவைப்பட்டன. இந்த அற்புதத்தைத் தொடர்ந்து கட்டிக்காக்க பெரும் முயற்சி தேவை. இவற்றை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
புதிய சவால்கள்
நாம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளபோதிலும், புதிய சவால்கள் காத்திருக்கின்றன.
அவற்றில் 3 சவால்கள் முக்கியமானவை.
முதலாவதாக, தீவிரப் போக்குடைய பயங்கரவாதம் நம் சமுதாயத்தைச் சீர்குலைத்து விடக்கூடும். அண்மையில், ISIS அமைப்பின் தூண்டுதலால், பயங்கரவாதிகள் அமெரிக்கா, ஐரோப்பா, துருக்கி, பங்களாதேஷ், நமக்கு அருகிலுள்ள மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தாக்குதல்கள் நடத்தினர். இன்னும் நடத்துவார்கள். சிங்கப்பூரும் குறிவைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். சொந்தமாகப் பயங்கரவாதச் சிந்தனைகளை வளர்த்துக்கொண்ட சிங்கப்பூரர்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் நாங்கள் தடுத்து வைத்திருக்கிறோம். இங்கு ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், நாம் ஒற்றுமையாக நிற்போமா அல்லது சிதறி விடுவோமா?
இரண்டாவதாக, பொருளாதார வளர்ச்சி எல்லா சிங்கப்பூரர்களுக்கும் நன்மை அளித்துள்ளது. ஆனால் இப்போது நம் பொருளாதாரம் ஒரு திருப்புமுனையில் இருக்கிறது. உலகமயமாதலும் தொழில்நுட்ப ரீதியான மாற்றமும் நம்மைப் பாதிக்கின்றன. தொழில்துறைகள், புத்தாக்கத்தில் ஈடுபடாவிட்டால் அழிந்துபோகக்கூடும். நம் ஊழியர்கள் அவர்களின் வேலைகளைப் பற்றிக் கவலைப்படுகின்றனர். அவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமல்லாமல், இயந்திரங்களும் போட்டி அளிக்கின்றன. நம்மால் தொடர்ந்து ஒற்றுமையாக முன்னேறி, வளர்ச்சியின் பலனை அனைவரோடும் பகிர்ந்துகொள்ள முடியுமா? நம் பிள்ளைகளுக்கு மேலும் ஓர் ஒளிமயமான எதிர்காலம் இருக்குமா?
மூன்றாவதாக, நம் அரசியல்முறை இதுநாள் வரை நல்ல அரசாங்கம், நிலைத்தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றைத் தந்துள்ளது. ஆனால் நம் சமுதாயம் மாறி வருகிறது. நம் ஒற்றுமை பல புதிய சோதனைகளுக்கு உள்ளாகும். சிங்கப்பூர் தொடர்ந்து நேர்மையான, திறமையான, நிலையான, அரசாங்கத்தைப் பெற்றிருப்பதை நாம் எவ்வாறு உறுதிசெய்வது?
மற்ற நாடுகள் பிரச்சினைகளைச் சந்திக்கின்றன. அங்கு பயங்கரவாதத்தால் பரவலான நம்பிக்கையின்மை நிலவுகிறது. முன்னேறிய நாடுகளில், வளர்ச்சி ஒரு சிலருக்கே பயன் அளிக்கிறது. உலக நகரங்களில் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை; இளம் தம்பதியர் கட்டுப்படியான வீடுகள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
இந்தச் சவால்களால், பல நாடுகளில் அரசியல் பிளவுபட்டுள்ளது; மக்கள் சினம் அடைந்துள்ளனர். மிதவாதக் கட்சிகள்மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. தீவிரக் கருத்துகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பிரெக்ஸிட் வாக்கெடுப்பு இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
சிங்கப்பூர் எவ்வாறு வேறுபட முடியும்?
சிங்கப்பூர் எவ்வாறு வேறுபட முடியும்? மற்ற நாடுகளில், கூடுதலான நில, மனித வளங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு நீண்ட வரலாறுகளும் வலுவான அடையாளங்களும் உண்டு. இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும் அவை சிக்கல்களைச் சந்தித்துள்ளன. சிங்கப்பூரால் வேறுபட்டிருக்க முடியுமா?
நம்மால் முடியும் என நான் நம்புகிறேன். நாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு சவாலையும் முறியடிக்கும் திட்டங்களும், அவற்றை நிறைவேற்றும் ஆற்றலும் நம்மிடம் உள்ளன.
முதலில், பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, அந்த அச்சுறுத்தலை நாங்கள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் எதிர்கொள்கிறோம். முஸ்லிம் சிங்கப்பூரர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களையும் முரண்பாடுமிக்க சிந்தனைகளையும் வெளிப்படையாகக் கண்டிக்கின்றனர். முஸ்லிம் அல்லாத சிங்கப்பூரர்கள், ஜிஹாத் பயங்கரவாதிகளை நிராகரித்து, அமைதியை விரும்பும் முஸ்லிம் சிங்கப்பூரர்களை அரவணைக்கிறார்கள். எனவே, நாம் ஒன்றுபட்டு, நம் பலசமய சமுதாயத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துகிறோம்.
அடுத்ததாக, நம் மக்கள் அனைவரும் வளம்பெற, ஒவ்வொரு சிங்கப்பூரர் மீதும் முதலீடு செய்கிறோம். பாலர் பள்ளிகளை விரிவுபடுத்தி மேம்படுத்துகிறோம். நம் பள்ளிகள், வெவ்வேறு திறன்களுக்கு ஏற்பச் செயல்படுகின்றன. ஸ்கில்ஸ் ஃபியூச்சர் திட்டம், திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கிறது. நிறுவனங்கள் புத்தாக்கத்தின்வழி தங்களை உருமாற்றிக்கொள்ள ஆதரவு கொடுக்கிறோம். அப்படிச் செய்வதால், நாம் புதிய வேலைகளையும் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
நிச்சயமற்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க, நமது சமூகப் பாதுகாப்பு வலைகளை வலுப்படுத்தி இருக்கிறோம். அதனால்தான் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத்திட்டம், ஒர்க் ஃபேர், மெடிஷீல்ட் லைஃப், சி பி எஃப் லைஃப், சில்வர் சப்போர்ட் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். இந்தத் திட்டங்களுக்குப் போதுமான வளங்களை நாம் இப்போதே ஒதுக்கி வைக்கிறோம். ஏனென்றால் பிற்காலத்தில் நம் பிள்ளைகள் நிதிச் சுமைக்கு ஆளாகிவிடக்கூடாது.
இறுதியாக, நல்ல அரசாங்கத்தை உறுதிசெய்ய, நம் அரசியல் முறையை மேம்படுத்தி வருகிறோம். இந்த முக்கியப் பணியில், சிங்கப்பூரர்களை அதிகமாக ஈடுபடுத்துகிறோம். தேர்தல் முறையைப் பொறுத்தவரை, குழுத் தொகுதிகளைச் சிறியதாக்கி, தனித் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறோம். அதிபர் தேர்தல் முறையில் என்ன முன்னேற்றங்களைச் செய்யலாம் என்பதை அரசமைப்புச் சட்ட ஆணைக் குழு ஆராய்கிறது. மக்களை ஐக்கியப்படுத்தி, அரசியல் சூழலை நிலைப்படுத்துவதே இவற்றின் நோக்கம்.
இவை அனைத்துக்கும் மேலாக, சிங்கப்பூரை வேறுபடுத்திக்காட்டு்ம் அடிப்படை அம்சம் என்ன? அது, நாம் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்கிறோமா இல்லையா என்பதுதான். நாம் ஒருமித்த மனவுறுதியுடன், சவால்களை ஒன்றாகச் சேர்ந்து சமாளிக்கவேண்டு்ம். அதுவே, நம் வெற்றியையும், நம் பிள்ளைகளுக்கு மேலும் பிரகாசமான எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
நாம் ஒற்றுமையாக இருந்து வெற்றியடைவோம் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. SG 50 நமக்கு வலுவான அடையாள உணர்வையும், தேசப்பற்றையும் அளித்திருக்கிறது. நம் அரசாங்கம், தொழிற்சங்கங்கள், வர்த்தகங்கள் ஆகியவை நம் ஊழியர்களையும் பொருளியலையும் மேம்படுத்த, நெருக்கமாய்ப் பணியாற்றுகின்றன. நம் வீடமைப்புப் பேட்டைகள், ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளும் ஒருங்கிணைந்த சமூகங்களாகத் திகழ்கின்றன.
இதுதான் ஒற்றுமை. சவால்கள் இருந்தாலும், தியாகங்களைச் செய்தாலும், ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நம் திடமான மனவுறுதிதான் ஒற்றுமை. “இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்ட மக்களாக” இருக்கவேண்டும் என்பது நம் முன்னோர்களின் மனவுறுதியாக இருந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிங்கப்பூரை உருமாற்ற அதுவே அவர்களுக்கு உந்துசக்தியாக விளங்கியது. இதே மனவுறுதிதான் நாம் அடுத்த ஐம்பது ஆண்டுகளையும் கடந்து செல்ல உதவும்.
இந்த தேசிய தினத்தில், நாம் ஒவ்வொருவரும், இந்த ஒற்றுமையின் அர்த்தம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கச் சிறிது நேரத்தை ஒதுக்கவேண்டும்.
நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த சஃப்ரா பொங்கோல் கிளப் ஹவுசில் இருந்து, நாம் ஒன்றுசேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் சிங்கப்பூரை நீங்கள் பார்க்கலாம். புதிய HDB வீடுகள், அழகான பொங்கோல் நீர்வழி, தேசிய சேவையாளர்கள், குடும்பங்கள், சமூகம் – இவை எல்லாம், நாம் ஒன்றாகச் செயல்பட்டால் எவ்வளவு சாதிக்கலாம் என்பதற்கான சான்று.
சிங்கப்பூருக்கும், சக சிங்கப்பூரர்களுக்கும் நமது கடப்பாட்டைப் புதுப்பிப்போம். இங்குதான் நம் குடும்பங்கள், நண்பர்கள், நம் கனவுகள், எதிர்காலம் அனைத்தும் உள்ளன. இவை நம் உயிரைக் கொடுத்துப் பாதுகாக்கும் அளவுக்கு மதிப்புமிக்கவை. நாம் ஒருமக்களாக துணிவுடனும், நம்பிக்கையுடனும் முன்னோக்கிச் செல்வோம்.
அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான தேசிய தின வாழ்த்துக்கள்!