Member of Parliament K Shanmugam delivered Prime Minister's National Day Message 2006 in Tamil. The message was recorded at the Istana and telecast on 8 August 2006.
என் சக சிங்கப்பூரர்களே,
கடந்த சில ஆண்டுகளாக நாம் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் பலனாக சிங்கப்பூர் பொருளியல் முன்பை விட இப்போது வலுவான நிலையில் இருக்கிறது.நமது புதிய உத்திகளால் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இவ்வாண்டின் முதல் பாதியில் பொருளியல் வளர்ச்சி 9.4 விழுக்காடாக இருந்தது. ஆண்டு முழுவதுக்குமான வளர்ச்சி 6.5 லிருந்து 7.5 விழுக்காடு வரை இருக்கும் என்று வர்த்தகத் தொழில் அமைச்சு மதிப்பிட்டுள்ளது. வலுவான பொருளியல் முதற் பாதியில் எண்பத்து ஓராயிரத்து 500 வேலைகளை உருவாக்கியது. இது கடந்த பத்து ஆண்டுகளில் ஆகக் கூடுதல் எண்ணிக்கையாகும். இவற்றில் பாதிக்கு மேற்பட்ட வேலைகளை சிங்கப்பூரர்கள் பெற்றுள்ளனர். வேலைகள் மறு உருவாக்கம், ஊழியர்களுக்கு மறுதிறன் பயிற்சி அளித்தல் போன்ற திட்டங்களையும் நாம் அறிமுகம் செய்தோம். அதன் மூலம் மூத்த மற்றும் திறன் குறைந்த சிங்கப்பூரர்கள் தங்கள் நிலையை மேம்படுத்திக் கொண்டனர். அவர்கள் இன்னும் நல்ல வேலைகளைப் பெறவும், அதிக சம்பளம் பெறவும் அந்தப் பயிற்சிகள் உதவின.
அமெரிக்கப் பொருளியல் மெதுவடைந்து வருகிறது. ஜப்பானின் வலுவான வளர்ச்சியும் ஐரோப்பிய நாடுகளின் குறிப்பாக ஜெர்மனியின் படிப்படியான வளர்ச்சியும் அதனை சமப்படுத்தி வருகின்றன.
ஆசியாவில் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் வலுவான வளர்ச்சி இந்த வட்டாரத்தின் முன்னேற்றத்திற்குத் துணையாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளில் நம்பிக்கையையும்வளர்ச்சியையும் பாதிக்கும் பிரச்சினைகள் இருந்தாலும், இந்தியா, சீனா ஆகியவற்றின் வளர்ச்சியால் அவை பயனடைந்து வருகின்றன.
ஒட்டுமொத்த வாய்ப்பு வசதிகள் சாதகமாக நமக்கு உள்ளன. இருப்பினும், நம் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பாதிப்பாக இருப்பவற்றைக் கண்காணித்து அவற்றைச் சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
மத்திய கிழக்கில் நிலையற்ற அரசியல் தன்மை தொடர்கிறது. இஸ்ரேலுக்கும் Hezbollah, Hamas ஆகியவற்றுக்கும் இடையிலான சண்டையும், ஈராக் கிளர்ச்சி,
ஈரான் அணு ஆயுதப் பிரச்சினையில் உள்ள முட்டுக்கட்டை, ஆகியன எண்ணெய் விலையேற்றத்துக்கு வழி வகுத்துள்ளன.
இந்தப் பிரச்சினை தொடர்ந்தால் உலகின் எண்ணெய் உற்பத்தி தடைபடும். எண்ணெய் விலை மேலும் உயர்ந்து உலகப் பொருளியல் மந்தம் உருவாகும்.
உலக வர்த்தக நிறுவனத்தின்டோஹா பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. வர்த்தகப் பேச்சு தோல்வியடையும் பட்சத்தில் தன்னைப் பேணும் கொள்கைகள் வளர்ந்து விடும். அதனால், தாராள வர்த்தகம் மற்றும் முதலீடுகளைச் சார்ந்திருக்கும், ஒரு திறந்த பொருளியலைக் கொண்ட சிங்கப்பூர் எளிதாகப் பாதிக்கப்படும். ஆனால், நம் தாராள வர்த்தக உடன்பாடுகள் நம்மைக் காத்து முக்கியச் சந்தை வாய்ப்புக்களை எளிதில் அடைய வழி வகுக்கும்.
பறவைக் காய்ச்சல் பிரச்சினை கவலைக்கு இடமாக இருக்கிறது. அது,இந்தோனேசியாவில் முக்கியப் பிரச்சினையாக வளர்ந்து வருகிறது. அந்நோய்க்கிருமி ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடியதாக மாறினால் பல மில்லியன் பேர் மரணமடையக் கூடும். அத்தகைய நோய்ப் பரவல்களைக் கையாளும் அவசரக்காலத் திட்டங்கள் நம்மிடம் உள்ளன. இருப்பினும், எந்தத் திட்டமும் எல்லாச் சூழ்நிலைகளையும் சமாளிக்கக் முடியாது.
பயங்கரவாதம் தொடர்ந்து கடுமையான மிரட்டலாக விளங்குகிறது. மலேசியாவிலும், இந்தோனேசியாவிலும் பயங்கரவாதக் கட்டமைப்புகள் கலைக்கப்பட்டிருக்கின்றன.
ஆயினும் ஆபத்தான பயங்கரவாதிகள் சிலர் இன்னும் பிடிபடவில்லை. சிங்கப்பூர் தொடர்ந்து பயங்கரவாதிகளின் ஓர் இலக்காக உள்ளது.
சவால்களை எதிர்கொள்ள நமக்கு ஒவ்வொரு துறையிலும் தகுதி வாய்ந்த, அர்ப்பணிப்பு மிக்கத் தலைவர்கள், வேண்டும். நாட்டை வழிநடத்த ஒரு நல்ல, திறன் மிகுந்த அரசாங்கம் வேண்டும். மேலும், நம் நாட்டை முன்னேற்ற சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஒரு சிறிய நாடு என்ற முறையில், நாம் இவ்வுலகத்தை அது எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, நாம் விரும்புவது போல் அது இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. நாம் நம்மைச் சுற்றி வேகமாக ஏற்படும் மாற்றங்களை அணுக்கமாகக் கவனித்து, வாய்ப்புகள் அல்லது மிரட்டல்கள் ஏற்படும் போது, சரியான நேரத்தில் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் நம் போட்டியாளர்களிடமிருந்து தனித்தன்மையுடன் விளங்கக் காரணம், மாறுகிற சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேகமாகவும், திறன்மிக்க வகையிலும், நாம் பதில் நடவடிக்கை எடுப்பது தான். மேலும், ஆசியானை ஆழமாகவும், வேகமாகவும் ஒன்றிணைத்து தென்கிழக்கு ஆசியாவை முதலீட்டாளர்கள் அலட்சியப் படுத்த முடியாத துடிப்பு மிக்க வட்டாரமாக்க வேண்டும். அதற்கு நாம் நம் அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். சிங்கப்பூர் உள் விவகாரங்களில் கவனம் செலுத்தும் அதேவேளையில், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களிலிருந்து நம் பார்வை அகலக் கூடாது, மேலும் அவற்றிற்கு ஏற்ற பதில் நடவடிக்கை எடுக்க விரைவாக இணைய வேண்டும்.
இந்த வழிமுறையால், சிங்கப்பூரர்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழிமுறைகளில் நாம் நமக்குப் பழக்கப்பட்டதை மட்டும் செய்யாமல் மற்ற புதிய ஆபத்தான அணுகுமுறைகளையும் ஆராய வேண்டியிருக்கும். இதில், மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நம்பிக்கை தேவைப்படும். இதில் வேகமான மாற்றங்களைச் சமாளிக்கும் ஆற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு நாம் உதவ வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு, எண்ணெய் விலைகள் உயரும் போது, மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிகச் செலவாகும்.பஸ்கள், டாக்சிகள் மற்றும் ரயில்கள் செயல்படுவதற்கு அதிகச் செலவாகும். மின்சாரம் மற்றும் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை நாம் ஒரே நிலையில் வைத்திருக்க முடியாது. ஆனால், உதவி தேவைப்படுவோருக்கு நம்மால் நேரடியாக உதவ முடியும், நாம் அதைச் செய்வோம். இதைத்தான், அரசாங்கம் யு சேவ் (U save), மற்றும் அண்மைய வளர்ச்சிப் பகிர்வுத் திட்டம் போன்றவற்றின் மூலம் செய்து வருகிறது.
புதிய சுற்றுச் சூழலில் ஒரு முக்கிய வழிமுறை இருக்கிறது.ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு அரசாங்கத்தை எதிர்பார்ப்பதை விட, தாமாகவே சமாளிப்பதற்கான உறுதியை நம் மக்களிடையே அதிகமாக உருவாக்க வேண்டும். பல்வேறு கருத்துக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் துடிப்பு மிக்க விவாதங்கள் உள்ள, இன்னும் வெளிப்படையான சமுதாயத்தை நாம் ஊக்குவிக்கிறோம். தகவல் சாதனங்கள் அதிகமான விவகாரங்கள் பற்றியும் கண்ணோட்டங்களையும் ஒலிபரப்புகின்றன. கொள்கைகளை வகுப்பதிலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அரசாங்கத்துக்கு உதவுவதில் பொதுமக்கள் இன்னும் அதிகமாக ஈடுபட்டிருக்கின்றனர். சமூக அமைப்புகள் சிறப்புப் பள்ளிகளை நடத்துவதற்கு, அண்டைப் புறங்களின் நற்கூறுகளை பாதுகாப்பதற்கு அல்லது தகவலறிந்து விவாதங்களை ஊக்கப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன.
"Internet" எனப்படும் இணையம், இவ்வுலகை மாற்றிவரும் ஒரு மாபெரும் சாதனமாகும். உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கும், ஒருவர் மற்றவரோடு ஈடுபாடு கொள்வதற்கும், பொருளியல் உற்பத்தித் திறனுடன் இருப்பதற்கும், நாம் துடிப்பு மிக்க சமுதாயமாக விளங்குவதற்கும் இணையத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். ஆயினும், இணையம் புதிய பிரச்சினைகளையும் உருவாக்குகிறது.
இணையத்தில் உள்ள எல்லாமே உண்மையல்ல. இணையத்தில் உள்ளவற்றில் உண்மை எது கற்பனை எது எனப் பிரித்துக் கூறுவது எளிதல்ல. மேலும், தொடர்புகள் உடனடியாக கிடைப்பதால், ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால், மக்கள் யோசிக்காமல் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடிய முறையில் செயல்படத் தூண்டும். ஆகவே, இந்தப் புதிய தகவல் சாதனத்தோடு நாம் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக் கொண்டு, அதற்கேற்ப நம்மைச் சரி செய்து கொள்ள வேண்டும். இது சிங்கப்பூருக்கு மட்டுமல்லாமல் பல சமுதாயங்களுக்கும் ஒரு சவாலாக விளங்குகிறது.
முன்னோக்கிச் செல்லச் செல்ல, நாம் தொடர்ந்து கவனமாகவும், அளவாகவும் ஒரு வெளிப்படையான சமுதாயமாக விளங்குவோம். சிங்கப்பூரர்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகவும் அதே சமயத்தில் பொறுப்புடனும் கூற வேண்டும். அவை பிரச்சினைகளைத் தீர்த்து நம் நாட்டை உருவாக்க உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு நம் சமுதாயத் தூண்களைச் சிதைக்கக் கூடாது. நாம் அனைவரும் எப்போதும் ஒருவர் மற்றொருவர் கருத்தை ஆமோதிக்க முடியாது. ஆயினும், சிங்கப்பூருக்கான நமது பொது இலக்கை அடைவதில் நாம் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
மே மாதத்தில் மக்கள் அளித்த வாக்குகள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிங்கப்பூரை எந்தக் குழு வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதையும், சிங்கப்பூர் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்தது. ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்குப் பிந்திய ஆய்வை மேற்கொண்டு அடுத்த போட்டிக்கான பாடங்களை கற்றுக் கொண்டன. இப்போது நாம் தேர்தல் விவகாரங்களை விட்டு விட்டு நம் முன்னே இருக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தவணையின் இறுதியில், வாக்காளர்கள் அவர்களுடைய வாழ்க்கை மேம்பட்டிருக்கிறதா என்பதை நிர்ணயிப்பதற்கு, அரசாங்கம் அதன் செயல்பாட்டுக் குறிப்புகளை மக்கள் முன்னே வைக்கும். அவ்வாறு செய்வதன் மூலம், சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களைக் கடந்து நாம் போட்டியின் முன்னணியில் இருக்க முடியும்.
எல்லா மாற்றங்களுக்கும் இடையே, சில விஷயங்கள் மாறவில்லை. நாம் இன்னும் ஒரு நிலையற்ற உலகில் சிறிய நாடாகவே இருக்கிறோம். மற்ற நாடுகள் நம்மை விட பெரியதாகவும் கூடிய வளங்களுடனும் இருக்கின்றன. இன்னும், நாம் அவர்களை விட கடினமாகவும், அதிகத் திறமையுடனும் செயல்பட வேண்டும். ஆகவே, நாம் பல்வகைத் தன்மையை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், நமது முக்கிய பண்புக் கூறுகளை வலுப்படுத்தி ஒரே சமுதாயமாக விளங்க வேண்டும்.
இது இளைய தலைமுறையினருக்கு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர்கள் இணையம் மற்றும் உலகத் தொடர்புடன் வளர்கின்றனர். இந்தப் புதிய சூழ்நிலை அவர்கள் வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதியாகும். இளைய சிங்கப்பூரர்கள் முதல்தரக் கல்வியைப் பெறுகின்றனர். அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், செல்வங்களைச் சேர்ப்பதற்கும், சிங்கப்பூர், வெளிநாடு ஆகிய இரண்டிலுமே அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நமது இளையர்கள் சிங்கப்பூரில் ஈடுபாட்டுடன் இருப்பதற்கும், அவர்களின் வேர்களை இங்கு வலுப்படுத்துவதற்கும் நாம் இன்னும் அதிகம் பாடுபட வேண்டும். சிங்கப்பூர் ஏன் அவர்களுக்குரிய ஒரு சிறப்பு மிக்க, தனித்துவம் வாய்ந்த இடம் மற்றும் சிங்கப்பூரின் எதிர்காலம் ஏன் அவர்களை நம்பி இருக்கிறது என்பதற்கான காரணங்களை அவர்களை உணரச் செய்ய வேண்டும். சமுதாயத்திற்குத் திருப்பித் தர வேண்டும் என்ற கடமையுணர்வு தானாக அவர்களுக்கு ஏற்பட்டு, அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் மேலும் பல சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கும் படி அவர்கள் செயல்பட வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் சாதாரண ஒரு மீன்பிடிக் கிராமமாக இருந்த போது, இன்னும் சிறப்பான வாழ்க்கையைத் தேடி நம் முன்னோர்கள் இங்கு வந்தனர்.
கம்யூனிஸ்ட் காலக்கட்டம், சமூகப் பூசல்களுக்குப் பிறகு சுதந்திரம் 1965-ல், நம் மீது திணிக்கப்பட்டது. திடீரென்று நாம் சொந்தக் காலில் நிற்க வேண்டியிருந்தது. ஆயினும் நாம் கடுமையாகப் பாடுபட்டு நவீன சிங்கப்பூரை அடிப்படையிலிருந்து உருவாக்கினோம்.அனைவருக்கும் இன்னும் ஓர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் அதே நேரம், நம்மை நாமே நம்பியிருக்கும், மாற்றங்களை வரவேற்று, வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற உணர்வைக் காப்போம்.
எல்லா சிங்கப்பூரர்களுக்கும் மகிழ்ச்சியான தேசிய தின வாழ்த்துகள்.