2024 National Awards Investiture Citations (Tamil)


THE ORDER OF NILA UTAMA (WITH HIGH DISTINCTION)
நீல உத்தம விருது (உயரிய தனிச்சிறப்புடன்)


1. திரு பீட்டர் ஹோ ஹக் ஈன்
தலைவர், நகரச் சீரமைப்பு ஆணையம்

புகழுரை

திரு பீட்டர் ஹோ ஹக் ஈன் 50 ஆண்டுக்கும் மேலாகத் தனிச்சிறப்புமிக்க சேவையாற்றி சிங்கப்பூருக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார்.

1973ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப்படை உபகாரச் சம்பளத்தைப் பெற்ற திரு ஹோ, புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர்க் கடற்படைக்கு, முதல் பிரதமர் திரு லீ குவான் யூ அவர்களால் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். அரசாங்கச் சேவையில் – குறிப்பாக தேசிய பாதுகாப்புத் துறையில் – நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். அடுத்தடுத்து தற்காப்பு, வெளியுறவு என இரண்டு அமைச்சுகளிலும் நிரந்தரச் செயலாளராகத் தனித்துவமிக்க வகையில் சேவையாற்றினார், திரு ஹோ. அதன்பின்னர், அவர் தேசிய பாதுகாப்பு, உளவுத்துறை ஒருங்கிணைப்பிற்கான நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 2005 முதல் 2010 வரை, அவர் அரசாங்கச் சேவைத் தலைவராகவும் திகழ்ந்தார். அவர் தம்முடைய தலைமைத்துவப் பொறுப்புகள் அனைத்திலும் தீர்க்கமான அறிவாற்றலைச் செயல்படுத்தினார். அவர்தம் அணுகுமுறைகள் அனைத்தும் தொலைநோக்கு சிந்தனையை எப்போதும் பறைசாற்றின. குறிப்பாக, சிங்கப்பூர்ப் பொதுச் சேவையில் எதிர்காலச் சூழமைவுகளுக்கான திட்டமிடல் பணிகளை அமைப்புசார் ஒன்றாக நிறுவ அவர் துணைபுரிந்தார்.

2010ஆம் ஆண்டில் பணி ஓய்வுபெற்ற பின்னர், அவர் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறார். தேசிய ஆய்வு அறநிறுவன வாரியத்தின் உறுப்பினராக, சிங்கப்பூரின் உத்திபூர்வ, பொருளியல் நலன்களை ஆதரிக்கும் முக்கியமான ஆய்வு, தொழில்நிறுவனக் களங்களில் திறனாற்றல்களை மேம்படுத்த அவர் உதவினார். நகரச் சீரமைப்பு ஆணையத் தலைவராக, சிங்கப்பூரின் நீண்டகால உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அவர் விலைமதிக்கத்தக்க வழிகாட்டுதலை வழங்கினார். சமூக அறிவியல் ஆய்வு மன்றத்தின் முதல் தலைவராக, சமூக அறிவியல், மானுடவியல் ஆகியவற்றில் ஆய்வுப்பணிகளை வலுப்படுத்த அவர் முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

திரு ஹோ, பணி ஓய்வுக்காலம் முதல் எதிர்கால உத்திகள் நிலையத்தின் மூத்த ஆலோசகராக இருந்து வருகிறார்; 2021 முதல் சிங்கப்பூர்த் தேசிய கலைக்கூடத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

பற்பல துறைகளில் தன்னிகரற்ற, எல்லையில்லா பங்களிப்புகளைச் சிங்கப்பூருக்கு ஆற்றியதன் பேரில், திரு பீட்டர் ஹோ ஹக் ஈன் அவர்களுக்கு நீல உத்தம விருது (உயரிய தனிச்சிறப்புடன்) வழங்கி கெளரவிக்கப்படுகின்றது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


2. திருவாட்டி ஜென்னி சுவா கெங் யெங்
தலைவர், மேம்பாட்டு வாரியக் கழகக் குழு
உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம்
தலைவர்,
வான்கார்ட் ஹெல்த்கேர்

புகழுரை

திருவாட்டி ஜென்னி சுவா கெங் யெங் சுகாதாரப் பராமரிப்பு, கலைகள், அறக்கொடை, கல்வி, அனைத்துலக உறவுகள் உள்ளிட்ட பல துறைகளில் சிங்கப்பூருக்குத் தன்னிகரற்ற பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.

2017 முதல் 2024 வரை, உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தின் மேம்பாட்டுக் குழுத் தலைவராக, கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளைச் சமாளித்து, அவர் அந்தப் புதிய வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகளை வழிநடத்தினார். 2023 பிற்பகுதியில் திறக்கப்பட்ட உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம், சிங்கப்பூரின் வடபகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு விரிவான சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது. 2017 தோற்றுவிக்கப்பட்ட வான்கார்ட் ஹெல்த்கேரின் முதல் தலைவரான திருவாட்டி சுவா, ஏழு ஆண்டில் ஐந்து தாதிமை இல்லங்களை நிறுவும் பொருட்டு, அந்த அமைப்பை வழிநடத்தியுள்ளார். கட்டுப்படியான, தரமான முதியோர் பராமரிப்புத் தேவைகள் அதிகரித்துவருவதைச் சமாளிக்க அவை துணைநிற்கின்றன. அலெக்ஸாண்ட்ரா சுகாதாரக் கட்டமைப்பின் தலைவராகவும், சுகாதார அமைச்சு ஹோல்டிங்ஸ் கழக உறுப்பினராகவும் திருவாட்டி சுவா சேவையாற்றியுள்ளார்.

திருவாட்டி சுவா இன்ன பிற துறைகளிலும் அளப்பரிய பங்காற்றியுள்ளார். சிங்கப்பூர்த் திரைப்பட ஆணையத்தின் முதல் தலைவராக, அவர் திரைப்படத் துறையை ஊக்குவித்து வளர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். அறநிறுவனங்களிடையே மிகுந்த மதிப்புடைய அவர், சமூக உண்டியலின் தலைவராகவும், பின்னர் ஆலோசகராகவும் சேவையாற்றியுள்ளார். தெமாசெக் அனைத்துலக அறநிறுவனத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 2015 முதல், அவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் தற்போது ஸ்பெயின் நாட்டுக்கான சிங்கப்பூரின் தொலைதூரத் தூதராக விளங்கி வருகிறார்.

பல துறைகளில் சிங்கப்பூருக்குத் தன்னிகரற்ற பங்களிப்புகளை ஆற்றியதன் பொருட்டு, திருவாட்டி ஜென்னி சுவா கெங் யெங் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகின்றது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


3. திரு சியெ ஃபு ஹுவா
தலைவர்,
தேசியப் பல்கலைக்கழகச்
சுகாதாரக் கட்டமைப்பு

தலைவர்,
சிங்கப்பூர்த் தேசியப்
பல்கலைக்கழக
அறங்காவலர் குழு

புகழுரை

திரு சியெ ஃபு ஹுவா, சிங்கப்பூரின் பல துறைகளுக்குத் தன்னிகரற்ற பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.

2019 முதல் தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பின் தலைவராக, பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் மருத்துவமனைக்கு அப்பால் சேவை வழங்குவதற்கான முயற்சிகளை அவர் வழிநடத்தியுள்ளார். மெய்நிகர் பராமரிப்பு நிலையங்கள், தொலைமருத்துவம், வீட்டு அடிப்படையிலான பராமரிப்பு முதலான புத்தாக்க முயற்சிகளின்வழி, தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பால் நோயாளிகளுக்கு மேலும் இலகுவான பராமரிப்புச் சேவைகளை வழங்க முடிந்துள்ளது. திரு சியெ சுகாதாரப் பராமரிப்பு வசதிகள், சேவைகள், நோயாளி அனுபவம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பெருந்திட்டத்தைத் துவக்கி வைத்தார். சிங்கப்பூரில் மனநலச் சுகாதாரத்திற்கான ஆதரவை மேம்படுத்தும் அடித்தள முயற்சிகளை ஊக்குவிக்கும் தன்னிகரற்ற பண்பாளர் அவர்.

2017 முதல் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக அறங்காவலர் குழுவின் தலைவராக, பல்கலைக்கழகத்தின் உத்திபூர்வ இலக்குகளை வகுப்பதில் திரு சியெ முக்கிய பங்காற்றியுள்ளார். அவருடைய தலைமைத்துவத்தின்கீழ், மாணவர்களை எதிர்காலத்திற்கு மேம்பட்ட வகையில் ஆயத்தப்படுத்தவும், ஆய்வுத்துறையின் பயன் விளைவுகளை மேம்படுத்தவும், தொழில்துறையுடன் கொண்டிருக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், பல்கலைக்கழகம் பல திட்டங்களை அமல்படுத்தியது.

திரு சியெ, 2013 முதல் 2021 வரையில் சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் தலைவராக விளங்கினார். அவர் தொடர்ந்து அதன் கெளரவ ஆலோசகராக சேவையாற்றி வருகிறார். 2012 முதல் 2018 வரை தேசிய சமூகச் சேவை மன்றத்தின் தலைவராகத் திகழ்ந்த அவர், சமூகச் சேவைகளுக்கான திறனாற்றல்களையும் அறக்கொடை ஆதரவையும் மேம்படுத்தினார்.

சிங்கப்பூருக்குத் தன்னிகரற்ற பங்களிப்புகளை ஆற்றியதன் பொருட்டு, திரு சியெ ஃபு ஹுவா அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகின்றது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


4. திரு பீட்டர் ஒங் பூன் க்வீ
முன்னாள் தலைவர்,
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்
அமைப்பு

முன்னாள் தலைவர்,
அரசாங்கச் சேவை

புகழுரை

திரு பீட்டர் ஒங் பூன் க்வீ, சிங்கப்பூர் அரசாங்கச் சேவையில் 40 ஆண்டுக்கும் மேலாகத் தனிச்சிறப்புடன் சேவையாற்றியுள்ளார். உயர் தலைமைத்துவப் பொறுப்புகள் பலவற்றில் அவர் முக்கியமான பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். போக்குவரத்து, நிதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல அமைச்சுகளில் அவர் நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2010 முதல் 2017 வரை அரசாங்கச் சேவைத் தலைவராகப் பணியாற்றிய அவர் பொதுத் துறையானது குடிமக்கள் சார்ந்த அம்சங்களையும் மின்னிலக்கமயமாதலையும் மேலும் கொண்டிருக்கும் வகையில், அதன் உருமாற்றத்தை வழிநடத்தினார். சிக்கலான, பலதுறை சார்ந்த அம்சங்களை மேலும் சிறப்பாகக் கையாளும் பொருட்டு, பிரதமர் அலுவலகத்தின் உத்திக் குழுமத்தையும் அவர் நிறுவினார்.

அரசாங்கச் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், திரு ஒங் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் முதல் தலைவராக 2018 முதல் 2024 வரை பொறுப்பேற்றார். சிங்கப்பூர்த் தொழில்நிறுவனங்களை முன்னிலைப்படுத்தும் வலுவான அமைப்பாக, அவர் அதனை உருவாக்கி, அதன் முதன்மைத் திட்டங்களையும் வழிநடத்தினார். மின்னிலக்கத் தொடக்கம் (Start Digital), தொழில் விரிவாக்கத்திற்கான எஸ்ஜி திட்டம் (Scale-Up), சிங்கப்பூர் அனைத்துலகத் தொழில்நிறுவனத் திட்டம் (Singapore Global Enterprises initiative) ஆகியவை அவற்றுள் அடங்கும். சிங்கப்பூரின் இருதரப்பு பொருளியல் உறவுமுறைகளை மேம்படுத்தி, பசுமைப் பொருளியல் போன்ற வளர்ச்சித் துறைகளில் புதிய ஆற்றல்களையும் உருவாக்கினார், திரு ஒங்.

திரு ஒங், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் தலைவராகவும், சிங்கப்பூர் நாணய ஆணையம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் பலவற்றின் வாரியக் குழுக்களில் உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார்.

சிங்கப்பூரின் பொதுச் சேவைக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புகளின் பேரில், திரு பீட்டர் ஒங் பூன் க்வீ அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகின்றது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


5. திரு சையது ஹசான் பின் சையது முகமது பின் சலீம் அல்-அட்டாஸ்
உறுப்பினர்,
சிறுபான்மையினரின்
உரிமைகளுக்கான
அதிபர் மன்றம்

புகழுரை

ஹபீப் ஹசான் என்று பரவலாக அழைக்கப்படும் திரு சையது ஹசான் பின் சையது முகமது பின் சலீம் அல்-அட்டாஸ் நாற்பது ஆண்டுக்கும் மேலாக சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தையும் சமூகப் பிணைப்பையும் வலுப்படுத்துவதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

நீண்டகாலமாக சேவையாற்றிவரும் இமாம்களில் ஒருவரும் பா-அல்வி பள்ளிவாசலின் தலைவருமான அவர், சிங்கப்பூரின் பல கலாசார நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் உயர்த்துவதற்கும், சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் பல முன்னெடுப்புகளை வழிநடத்தி வந்துள்ளார். பள்ளிவாசலின் சமயங்களுக்கு இடையிலான அரும்பொருளகத்திற்கு உள்ளூர், வெளியூர் வருகையாளர்களுக்கான கற்றல் பயணங்களைத் தனிப்பட்ட முறையில் ஏற்று நடத்தியிருக்கிறார், ஹபீப் ஹசான்.

சமயங்களுக்கு இடையிலான அமைப்பின் மன்ற உறுப்பினர் என்ற முறையில் ஹபிப் ஹசான் சமயத் தலைவர்களுடனான உறவை வலுப்படுத்தி, சமய நல்லிணக்கத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இன்றைய நல்லிணக்க வட்டங்களுக்கு (Harmony Circles) முன்னோடியாய்த் திகழ்ந்த இனம், சமயங்களுக்கு இடையிலான நன்னம்பிக்கை வட்டங்களின் வழிகாட்டிக் குழுவில் அவர் சேவையாற்றினார். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின்கீழ் இயங்கும் ரஹ்மத்தான் லில் அலமின் அறநிறுவனம், நல்லிணக்க நிலையம் ஆகிய முக்கியமான இரு அமைப்புகளிலும் அவர் அறங்காவலராய் இருந்துள்ளார். உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற முஸ்லிம்கள் சித்திரிக்கப் பெற்றுள்ள “The Muslim 500” எனும் நூலில், ஹபீப் ஹசான் அவர்களின் சமயங்களுக்கு இடையிலான அளப்பரிய பணி அங்கீகரிக்கப்பட்டது. அவருடைய நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் கருத்தில்கொண்டு, 2021 முதல் அவர் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தையும் சமுதாய ஒற்றுமையையும் வலுப்படுத்த ஆற்றிய தலைசிறந்த பங்களிப்புகளின் பேரில், ஹபீப் ஹசான் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகின்றது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


6. திரு ஃபிலிப் டான் எங் சியோங்
தலைவர்,
சிங்கப்பூர் மஞ்சள் நாடா
அமைப்பின் வாரியம்

புகழுரை

திரு ஃபிலிப் டான் எங் சியோங், சிங்கப்பூரின் மறுவாழ்வு, மறு-ஒருங்கிணைப்புச் சேவைகள் உள்ளிட்ட சமூகச் சேவைத் துறையின் பரந்துபட்ட வளர்ச்சிக்குப் பெருமளவு பங்காற்றியுள்ளார்.

இருபது ஆண்டுக்கும் மேலாக, சிங்கப்பூரின் சீர்திருத்த, விடுதலைக்குப் பிந்திய பராமரிப்புச் சூழலை திரு டான் மேம்படுத்தியுள்ளார். சிங்கப்பூர் மஞ்சள் நாடா அமைப்பின் தலைவராக, முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கும் அவர்கள் மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைவதற்கும் உரித்தான கொள்கைகள் – உத்திகள் தொடர்பில் அவர் மதிக்கத்தக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சிறைக்கைதிகளின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை உருமாற்றி, விடுதலைக்குப் பிந்திய அவர்களுடைய வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளார். 2017 முதல் 2020 வரை சிங்கப்பூர்ச் சிறைச்சாலைகளுக்கான வருகையளிக்கும் நீதிபதிகள் கழகம், கண்காணிப்புக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும், 2006 முதல் 2014 வரை மஞ்சள் நாடா நிதியின் தலைவராகவும், திரு டான் பொறுப்பு வகித்துள்ளார்.

2013 முதல் 2022 வரை சமூக உண்டியலின் தலைவராக, சமூகப் பணிகளின் பேரில் அமைப்புகளும் தனிநபர்களும் அர்த்தமுள்ள, நிலையான வகையில் நன்கொடை அளிக்க அவர் வலியுறுத்தினார். அதன்மூலம், அடுத்தத் தலைமுறை நன்கொடையாளர்களை ஊக்குவிக்க அவர் முனைப்பு காட்டினார். தேசியச் சமூகச் சேவை மன்றத்தின் வாரிய உறுப்பினராக, வசதி குறைந்த சிங்கப்பூரர்களின் மாறிவரும் தேவைகளை ஈடுசெய்ய துணைநிற்கும் வகையில், சமூகச் சேவைத் துறையின் வளர்ச்சிக்குத் திரு டான் வழிகாட்டியுள்ளார்.

சிங்கப்பூரின் சமூகச் சேவைத் துறைக்கும் மறுவாழ்வுக் களத்திற்கும் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு ஃபிலிப் டான் எங் சியோங் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகின்றது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


7. திரு டியோ மிங் கியான்
தலைவர்,
சிங்கப்பூர் தொழில்நுட்பப்
பொறியியல் லிமிடெட்

முன்னாள் இயக்குநர்,
தெமாசெக் ஹோல்டிங்ஸ்
(பிரைவேட்) லிமிடெட்

புகழுரை

திரு டியோ மிங் கியான், சிங்கப்பூர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.

2006 முதல் 2022 வரை, தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினராக இருந்த அவர், தெமாசெக் நிறுவனத்தின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய பிரிவுகளின் வளர்ச்சிக்குப் பங்களித்தார். 2012 முதல் 2022 வரை அவர் தெமாசெக் உயிர் அறிவியல் ஆய்வுக்கூடங்களின் தலைவராகப் பணியாற்றினார். அப்போது அவர், திருப்புமுனைகளாகத் திகழவல்ல உயிர்வாழ்வு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும், பொருளாதார மதிப்புள்ள பயன்பாடுகளை உருவாக்கவும் – குறிப்பாக, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வேளாண்மை, மீன்வளத் தொழில்நுட்பம், மனித நல்வாழ்வு – ஆய்வாளர்களை ஈர்த்து அவர்களுக்குத் தக்க வாய்ப்புகளை வழங்கினார். 2012 முதல் வெர்டெக்ஸ் வென்ச்சர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிவரும் திரு டியோ, தொழில்நுட்பப் புதுத்தொழில்களை ஊக்குவிக்க, மூலதன முதலீடு, செயல்பாட்டு ஆதரவு போன்றவற்றை வழங்கும் முயற்சிகளை வழிநடத்தினார்.

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பொறியியல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக, திரு டியோ சிங்கப்பூரின் தற்காப்புத் தொழில்நுட்பத் திறனாற்றல்களை மேம்படுத்துவதிலும், நாட்டின் தற்காப்பையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகிறார். முன்னதாக, திரு டியோ மீடியாகார்ப் நிறுவனத்தின் தலைவராகவும் PSA கழகத்தின் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை மெருகேற்றுவதில் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளின் பேரில், திரு டியோ மிங் கியான் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகின்றது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


8. திரு எட்வர்ட் டி சில்வா
முன்னாள் தலைவர்,
பொதுச் சுகாதார மன்றம்

புகழுரை

திரு எட்வர்ட் டி சில்வா பொதுத் தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்தும் ஆர்வலர்களில் முதன்மையான ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 2015 முதல் 2023 வரை பொதுச் சுகாதார மன்றத்தின் தலைவராக, பொதுமக்களை ஈடுபடுத்துவதற்கும் பொதுச் சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்குமான மன்றத்தின் திட்டங்களை அவர் வழிநடத்தினார்.

திரு டி சில்வா ஏனைய துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். அவர் சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் ஆலோசகர் மன்றத்திலும் அரசாங்கச் சேவை ஆணையத்திலும் சேவையாற்றியுள்ளார். சமாதான நீதிபதி, மத்திய சிங்கப்பூர்ச் சமூக மேம்பாட்டு மன்றத்தில் மாவட்ட மன்ற உறுப்பினர், யூரேசிய சங்கத்தின் அறங்காவலர், ஆங்கிலிகன் சமூகச் சேவை அமைப்பின் வாரிய உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலும் அவர் பங்காற்றி வந்துள்ளார்.

சிங்கப்பூருக்கு அவர் ஆற்றிய பல்வேறு பங்களிப்புகளின் பொருட்டு, திரு எட்வர்ட் டி சில்வா அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகின்றது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


9. திரு லீ சுவான் செங்
தலைவர்,
தேசிய சுற்றுப்புற அமைப்பு

புகழுரை

திரு லீ சுவான் செங், சிங்கப்பூரில் சுற்றுப்புற நிலைத்தன்மை, கட்டடத்துறை, அறிவியல் – தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். 2019 முதல் தேசிய சுற்றுப்புற அமைப்பின் தலைவராக, அவருடைய தொலைநோக்கு சிந்தை மிகுந்த தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மையையும் சுற்றுப்புறத் தலைமைத்துவத்தையும் ஊக்குவித்து, சுழற்சி முறையிலான பொருளியலை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது.

அரசாங்க அறிவியல் ஆலோசகர்கள் குழுவின் தலைவராகத் திரு லீ உத்திபூர்வ அறிவியல், தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து மதிக்கத்தக்க ஆலோசனைகளை வழங்கி, தேசிய ஆய்வு, வளர்ச்சித் திட்டங்களை வடிவமைத்துள்ளார். கட்டட, கட்டுமான ஆணையத்தின் துணைத் தலைவராக, அவர் சிங்கப்பூரில் பசுமைக் கட்டடத் தரநிலைகளை மேம்படுத்துவதில் தலைமைத்துவத்தையும் புத்தாக்கத்தையும் வெளிப்படுத்தினார். மேலும், கட்டுமானத் தொழில்துறையின் மின்னிலக்கமயமாதலை அவர் முன்னின்று வழிநடத்தினார்.

பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு லீ சுவான் செங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகின்றது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


10. திரு ரிச்சர்ட் லிம் செர்ன்ங் யி
தலைவர், சினாப்ஸெ
பிரைவேட் லிமிடெட்

தலைவர், எரிசக்திச்
சந்தை ஆணையம்

புகழுரை

திரு ரிச்சர்ட் லிம் செர்ன்ங் யி சுகாதாரப் பராமரிப்பு, எரிசக்தி, போக்குவரத்து ஆகிய துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். 2019 முதல், சினாப்ஸெ நிறுவனத்தின் தலைவராக, அவர் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் செயல்திறன், மீள்திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தினார். நோயாளிகளுக்கு உகந்த, பாதுகாப்பான, செயல்திறம் மிகுந்த சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதை உறுதிசெய்வதில் அது முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது. சினாப்ஸெ நிறுவனத்தின் உருமாற்ற முயற்சிகளையும், அதன் தொழில்முறை, புத்தாக்க ஆற்றல்களை ஆழப்படுத்தும் முனைப்புகளையும் அவர் வழிநடத்தினார்.

2020 முதல் எரிசக்திச் சந்தை ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துவரும் திரு லிம், சிங்கப்பூரின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், 2050 ஆண்டுக்குள் தேசிய இலக்கான பூஜ்ஜியம் கரிம வெளியேற்றத்தை எட்டுவதற்கும், உத்திபூர்வ வழிகாட்டுதலை அளித்து வந்துள்ளார். 2016 முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் துணைத் தலைவராக, பொதுப் போக்குவரத்துத் துறைக்கான சொத்து நிர்வாகம், ஆளுமை, நீண்டகால உத்திகள் – திட்டங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் அவர் உதவி வந்துள்ளார்.

சுகாதாரப் பராமரிப்பு, எரிசக்தி, போக்குவரத்து ஆகிய துறைகளுக்கு ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு ரிச்சர்ட் லிம் செர்ன்ங் யி அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகின்றது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


11. திரு நியாம் சியாங் மெங்
தலைவர்,
கரையோரப் பூந்தோட்டம்

புகழுரை

திரு நியாம் சியாங் மெங் தமது 33 ஆண்டு பொதுச் சேவையில், பலதரப்பட்ட தலைமைத்துவப் பொறுப்புகளில் பெருமளவு பங்களித்துள்ளார். அப்போதைய தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சு, சட்ட அமைச்சு, சமூக மேம்பாட்டு, இளையர், விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய மக்கள்தொகை திறன் பிரிவு, தேசிய பருவநிலை மாற்றச் செயலகம் ஆகியவற்றின் நிரந்தரச் செயலாளராக அவர் பணியாற்றியுள்ளார்.

பொதுச் சேவையிலிருந்து பணி ஓய்வுபெற்ற பின்னர், திரு நியாம் பல அமைப்புகளில் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். கரையோரப் பூந்தோட்டத்தில், அதனை உலகின் தலைசிறந்த தோட்டக்கலைத் தலமாக உருமாற்றுவதற்கான முயற்சிகளை அவர் வழிநடத்தினார். சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தில், மேலும் அதிகமான கப்பல் குழுமங்களையும் வருமானத்தையும் கொண்டு, சிங்கப்பூரின் அனைத்துலகக் கடல்துறை நடுவத்தை விரிவுபடுத்த, திரு நியாம் துணைபுரிந்தார். மீடியாகார்ப் நிறுவனத்தில், மின்னிலக்கமயமாதல், புத்தாக்கம், பல தளங்கள்வழி மக்களை ஈர்த்தல் ஆகியன தொடர்பில் நிறுவனத்தின் உருமாற்ற முயற்சிகளுக்கு ஆதரவளித்தார். சிங்கப்பூர்க் குதிரைப்பந்தயச் சங்கத்தில், அதற்குரிய பங்காளி தரப்பினருடன் இணைந்து, சங்கத்தின் பணிகளை மதிக்கத்தக்க வகையில் நிறைவுசெய்யத் துணைபுரிந்தார்.

துறைகள் பலவற்றிலும் சிங்கப்பூருக்கு அவர் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு நியாம் சியாங் மெங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகின்றது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


12. திரு பாங் கின் கியோங்
நிரந்தரச் செயலாளர்
(உள்துறை)

புகழுரை

உள்துறை நிரந்தரச் செயலாளராக, திரு பாங் கின் கியோங், உலகின் ஆகப் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்வதற்குப் பெருமளவு பங்காற்றியுள்ளார். வலுவான கொள்கைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது மட்டுமின்றி, முக்கியமான – நுட்பமான பல செயல்பாடுகளில் அமைச்சின் நடவடிக்கைகளையும் அவர் வழிநடத்தியுள்ளார். அவற்றுள் நெருக்கடிகால நிகழ்வுகள் சிலவும் அடங்கும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெருமளவில் பெற்ற உள்துறைக் குழுவின் உருமாற்ற முயற்சிகளை திரு பாங் வழிநடத்தினார். அதன் விளைவாக, உள்துறை ஊழியர்களும் பொதுமக்களும் ஆக்ககரமான மேம்பாடுகளை உணர்ந்துள்ளனர்.

போக்குவரத்து அமைச்சின் முன்னாள் நிரந்தரச் செயலாளராக, அவர் முக்கியமான பல திட்டங்களை வழிநடத்தியுள்ளார். சாங்கி விமானநிலைய ஐந்தாம் முனையம், துவாஸ் துறைமுகம் ஆகியவை குறித்த திட்டமிடுதல், சிங்கப்பூர் ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் முதலியவை அவற்றுள் அடங்கும். சட்ட அமைச்சின் நிரந்தரச் செயலாளர், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இயக்குநர் ஆகிய முன்னைய தலைமைத்துவப் பொறுப்புகளிலும், அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.

சிங்கப்பூருக்கு ஆற்றிய பன்முகத்தன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்த பங்களிப்புகளின் பொருட்டு, திரு பாங் கின் கியோங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகின்றது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


13. பேராசிரியர் டான் எங் சாய்
தலைவர்,
சிங்கப்பூர்த்
தேசியப் பல்கலைக்கழகம்

புகழுரை

பேராசிரியர் டான் எங் சாய், 2018 முதல் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் தலைவராக, உலகின் தலைசிறந்த கல்விநிலையங்களில் ஒன்றாக அதனை வழிநடத்தியுள்ளார். அவருடைய தலைமைத்துவத்தின்கீழ், பல்கலைக்கழகம், கல்வித்துறையில் பல புத்தாக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளது; அதன் ஆய்வுகளின் பயன் விளைவுகளை அதிகரித்துள்ளது; புத்தாக்க, தொழில்முனைப்புச் சூழலை விரிவுபடுத்தியுள்ளது.

பேராசிரியர் டான் அவர்களுடைய பங்களிப்புகள் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்திற்கும் அப்பாற்பட்டவை. சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, ஆய்வு – மேம்பாடு ஆகிய துறைகளிலும் அவர் முத்திரை பதித்துள்ளார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பு, பொருளியல் வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கணித, அறிவியல் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றின் வாரிய இயக்குநர் பொறுப்புகளில் அவர் தம் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதற்கு முன்னர், அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு, தேசிய ஆய்வு அறநிறுவனம், தற்காப்பு சார்ந்த சமூக உறவுகளுக்கான ஆலோசனை மன்றம், எதிர்காலப் பொருளியல் மன்றம் ஆகியவற்றிலும் அவர் பெருமளவு பங்களித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், பேராசியர் டான் எங் சாய் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகின்றது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


14. திரு வோங் சியூ ஹூங்
கல்வித்துறை ஆலோசகர்
முன்னாள் தலைமை இயக்குநர்

புகழுரை

திரு வோங் சியூ ஹூங், கல்வித்துறைக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். 2015 முதல் 2022 வரை, கல்வித்துறைத் தலைமை இயக்குநராக அவர் நமது கல்விமுறையை மாற்றியமைத்து, முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்களை வழிநடத்தினார். தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டு முறைமையின் அறிமுகம் ஆகியவை அவற்றுள் அடங்கும். தகவல்தொடர்புத் தொழில்நுட்பப் பெருந்திட்டம், நற்குணம் – குடியியல் கல்வி, 21ஆம் நூற்றாண்டுக்கான திறன்களைக் கற்பித்தல் ஆகியவற்றை மேம்படுத்தி, மாணவர்கள் எதிர்காலத்திற்கு நன்கு ஆயத்தமாக இருப்பதை அவர் உறுதிசெய்தார்.

கல்விச் சேவையில் 38 ஆண்டு பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்னர், திரு வோங் கல்வி அமைச்சின் ஆலோசகராகவும், சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத்தின் தலைவராகவும், தேசியக் கல்விக் கழக மன்றத்தின் துணைத் தலைவராகவும் சேவையாற்றி வருகிறார்.

சிங்கப்பூரின் கல்விமுறைக்கு ஆற்றிய பல பங்களிப்புகளின் பொருட்டு, திரு வோங் சியூ ஹூங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகின்றது.


THE PUBLIC SERVICE STAR (BAR)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை)



THE PUBLIC SERVICE STAR
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம்


புகழுரை

சக குடிமக்களின் நல்வாழ்வுக்காகப் பங்களித்தோருக்குப் பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை), பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் ஆகியன வழங்கப்படுகின்றன. அவர்கள் தங்கள் சமூகத்தின் நலனில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு, தங்கள் பொதுச் சேவையால் சிங்கப்பூரை மேம்பட்ட சமுதாயமாகப் பண்படுத்தியுள்ளனர்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (பதக்கப் பட்டை)


15. திரு கே வி வானு கோபால மேனன்
உயர் தூதர்,
சிங்கப்பூர் உயர் தூதரகம் –
கோலாலம்பூர்,
வெளியுறவு அமைச்சு

புகழுரை

திரு வானு கோபால மேனன் வெளியுறவு அரசதந்திரம், அனைத்துலக விவகாரங்கள் ஆகியவற்றில் சிங்கப்பூரின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். 2014 முதல் மலேசியாவுக்கான சிங்கப்பூரின் உயர் தூதராக, அங்கு மாறிவரும் அரசியல் சூழலைச் சிங்கப்பூர் புரிந்துகொள்ளவும், அதனைச் சமாளிக்கவும் அவர் துணைபுரிந்துள்ளார். மேலும், இருதரப்பு நல்லுறவை உறுதிசெய்து, மலேசியத் தலைவர்களுடனும் முக்கிய பங்குதாரர்களுடனும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை ஊக்குவித்துள்ளார். பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழும் திரு மேனன், அவரது உள்நாட்டு – வெளிநாட்டு சகாக்களிடையே பழுத்த அனுபவமுடைய அரசதந்திரியாகப் போற்றப்படுகிறார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (பதக்கப் பட்டை)


16. பேராசிரியர் ஐவி இங் சுவீ லியன்
மூத்த ஆலோசகர்,
SingHealth கழகம்

முன்னாள் குழுமத் தலைமை
நிர்வாக அதிகாரி,
சிங்கப்பூர்ச் சுகாதாரச் சேவைகள்
சுகாதார அமைச்சு

புகழுரை

பேராசிரியர் ஐவி இங் சுவீ லியன் சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். SingHealth கழகத்தின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாக 2012 முதல் 2024 வரை பொறுப்பு வகித்த அவர் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தை உருமாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். சுகாதாரப் பராமரிப்புத் துறையின் சேவைகள் சீரான முறையில் செயல்பட அவற்றை அவர் ஒருங்கிணைத்தார். அதன்மூலம் மருத்துவமனைகள், நிபுணத்துவ நிலையங்கள், முதன்மைப் பராமரிப்புப் பிரிவுகள், வட்டாரச் சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றின் கொள்ளளவை அவர் கணிசமாக விரிவுபடுத்தினார். தேசிய அளவில், பேராசிரியர் இங், பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கொள்கைகள், திட்டங்கள், தொழில்சார் பணிகள், மருத்துவக் கல்வி ஆகியவற்றின் இலக்குகளை நிர்ணயிக்கத் துணைபுரிந்துள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


17. திரு சியா வீ கியட்
துணைத் தலைமை நீதிபதி,
குடும்ப நீதிமன்றம்,
நீதித்துறை

புகழுரை

திரு சியா வீ கியட், குடும்ப நீதிமன்றத்தின் துணைத் தலைமை நீதிபதியாகவும், தலைமை மதியுரைஞராகவும் மிகச் சிறந்த சேவையை வழங்கியுள்ளார். குடும்ப நீதிமன்றத்தை நிறுவுவதில் அவருடைய பங்கு அளப்பரியது. சிங்கப்பூரில் குடும்பங்களுக்கான நீதி எளிதில் கிடைக்கப்பெறுவதற்கும், அதன் தரமும் சேவையும் மேம்படுத்தப்படுவதற்கும் அமல்படுத்தப்பட்ட சீர்திருத்த முயற்சிகள், திட்டங்கள் பலவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். திரு சியா, மேல்முறையீட்டு ஆணையராகவும், மதிப்பீட்டு மறு-ஆய்வுக் குழுவின் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


18. திருவாட்டி லியூ வெய் லி
கல்வித்துறைத் தலைமை
இயக்குநர்,
கல்வி அமைச்சு

புகழுரை

திருவாட்டி லியூ வெய் லி, நம் கல்விமுறையை வலுப்படுத்த கணிசமான பங்களிப்புகள் பல ஆற்றியுள்ளார். கல்வித்துறைத் தலைமை இயக்குநராக, அவர் சிங்கப்பூர்க் கல்விச் சேவைக்குத் தொழில்முறையிலான மிகச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். நம் மாணவர்கள் அவர்கள்தம் ஆற்றலை உணரவும், நல்ல விழுமியங்களை வளர்த்துக்கொள்ளவும், எதிர்காலத்திற்கான ஆயத்தநிலையை நன்கு மேம்படுத்திக்கொள்ளவும் புத்தாக்கம், மேம்பாடு, திறனாற்றல் ஆகிய துறைகளில் அவர் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, வழிநடத்தியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


19. பேராசிரியர் லிங் சான்
துணைத் தலைவர்,
வேந்தர்,
தலைவர் அலுவலகம்
நன்யாங் தொழில்நுட்பப்
பல்கலைக்கழகம்,
கல்வி அமைச்சு

புகழுரை

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, பேராசிரியர் லிங் சான் பல்கலைக்கழகத்தின் 2025 கல்வி வரைவுத்திட்டத்தின் கருத்தாக்க முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுசார் திறனாற்றல்கள், கற்பித்தல் திறம், முழுமையான கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பல்கலைக்கழக முயற்சிகளையும் அவர் வழிநடத்தியுள்ளார். தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைமை அறிவியல் ஆலோசகராக அவர் உத்திபூர்வ வழிகாட்டுதலை வழங்கி, அதன் அனைத்துலக, துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளித்தார். லீ கொங் சியான் மருத்துவப் பள்ளி நிர்வாக வாரியத்திலும் அரசாங்க அறிவியல் ஆலோசகர்கள் குழுவிலும் பேராசிரியர் லிங் சேவையாற்றி வருகிறார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


20. திரு ஔ ஃபூக் சுவென்
அரசாங்கத் தலைமைக் கணக்காளர்,
அரசாங்கத் தலைமைக் கணக்காளர் அலுவலகம்,
நிதி அமைச்சு

புகழுரை

திரு ஒள ஃபூக் சுவென் அரசாங்கத் தலைமைக் கணக்காளராக, சிங்கப்பூரின் கடந்தகால நிதியிருப்புகளைப் பாதுகாப்பதிலும், அரசாங்க நிதி அறிக்கைகளைத் தயார்செய்வதிலும், அரசாங்கத்தின் நிதி, கணக்கியல் கட்டமைப்புகளின் நன்மதிப்பை உறுதிசெய்வதிலும் அதிபருக்கு ஆதரவளித்து பெரும் பங்காற்றியுள்ளார். அரசாங்க நிதிக்கான தலைமை அதிகாரியாக, நிதிக் கொள்கைகள், செயல்முறைகள், கட்டமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துத் தரநிலைப்படுத்துவதற்கான தீர்க்கமான முயற்சிகளை அவர் வழிநடத்தினார். சீரான செயல்முறைக்கும் செயல்திறத்திற்கும் அவை வழிவகுத்தன. பொதுச் சேவைத் துறையின் நிதி, உள் தணிக்கை தொழிலர்களின் நிபுணத்துவம், ஆற்றல், சமூக உணர்வு ஆகியவற்றையும் திரு ஔ மேம்படுத்தியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


21. பேராசிரியர் லீ சியென் அன்
துணைக் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி (வட்டாரச் சுகாதாரக் கட்டமைப்பு)
சிங்கப்பூர்ச் சுகாதாரச்
சேவைகள், சுகாதார அமைச்சு

புகழுரை

பேராசிரியர் லீ சியென் அன், சிங்கப்பூர்ப் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். சுகாதாரம், சமுதாயப் பராமரிப்பு ஆகியவற்றை மேம்பட்ட வகையில் ஒருங்கிணைப்பதற்காக அவர் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டுள்ளார். SingHealth குழுமத்தின் வட்டாரச் சுகாதாரக் கட்டமைப்பு, மக்கள்தொகை சார்ந்த சுகாதார முயற்சிகள் ஆகியவற்றில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள பொது – சமூக மருத்துவமனைகளுக்குத் திட்டமிடும் முயற்சிகளையும் அவர் வழிநடத்தி வருகிறார். சாங்கி பொது மருத்துவமனையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பேராசிரியர் லீ, சிறந்த மதிப்புடைய பராமரிப்பு, நோயாளிகளுக்கான மேம்பட்ட அனுபவம் ஆகியவற்றை வழங்கும் பொருட்டு, மருத்துவமனையின் சிகிச்சை, சமூகப் பராமரிப்புச் சேவைகளை உருமாற்றியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


22. திரு டான் ஹங் ஹூய்
சுங்கத்துறைத் தலைமை இயக்குநர்
சிங்கப்பூர்க் காவல்துறை
(நிதி அமைச்சிற்குப் பணிமாற்றம்)

புகழுரை

திரு டான் ஹங் ஹூய், பொதுச் சேவைத் துறையில் 32 ஆண்டுகாலமாகப் பலதரப்பட்ட தலைமைத்துவப் பொறுப்புகளில் சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார். தொலைநோக்குச் சிந்தனையுடைய அவருடைய தலைமைத்துவம், அவர் வழிநடத்திய அமைப்புகளில் நிலையானதோர் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. முன்னதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், சிங்கப்பூர்க் காவல்துறை ஆகியவற்றின் துணை ஆணையராக அவற்றின் முன்னிலை ஆற்றல்கள், செயல்பாட்டுத் திறமை, அமைப்புசார் செயல்திறன் ஆகியவற்றை அவர் மேம்படுத்தினார். சுங்கத் துறையின் தலைமை இயக்குநராக, உலகளாவிய வர்த்தக நடுவமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்துவதற்கான உருமாற்றப் பணிகளை அவர் வழிநடத்தி வருகிறார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


23. திரு எரிக் யாப் வீ டெக்
ஆணையர், சிங்கப்பூர்க்
குடிமைத் தற்காப்புப் படை,
உள்துறை அமைச்சு

புகழுரை

திரு எரிக் யாப் வீ டெக், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையில் 33 ஆண்டு மதிக்கத்தக்க வகையில் சேவையாற்றியுள்ளார். அதன் ஆணையராகக் கடல் தீயணைப்பு, நெருக்கடிநிலைக்கான மருத்துவத் திறனாற்றல்கள் ஆகியவற்றை விரிவுபடுத்துவதிலும் அதன் அதிகாரிகளுக்கான பயிற்சியை மேம்படுத்துவதிலும் அவர் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையை வழிநடத்தினார். சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தொழில்நுட்பம் சார்ந்த உருமாற்றத்தை எதிர்கொண்டது. அதற்காக இயந்திரவியல், மின்னிலக்கமயமாதல் போன்ற அம்சங்கள் பின்பற்றப்பட்டு, குடிமைத் தற்காப்புப் படையின் செயல்திறனும் செயல்பாட்டுப் பாதுகாப்பும் உயர்த்தப்பட்டன. சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தமது உயிர்காக்கும் பணியைச் செவ்வனே ஆற்றும் இலக்கை இந்த முயற்சிகள் வலுப்படுத்தியுள்ளன.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


24. திரு ஃபெலிக்ஸ் லோ சீ வாய்
தலைமை நிர்வாக அதிகாரி, கரையோரப் பூந்தோட்டம்,
தேசிய வளர்ச்சி அமைச்சு

புகழுரை

திரு ஃபெலிக்ஸ் லோ சீ வாய் அவர்களின் தலைமைத்துவத்தில், கரையோரப் பூந்தோட்டமானது இன்று உலகத் தரம் வாய்ந்த தோட்டக்கலை நிலையமாகவும், சுற்றுலாத் தலமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பூந்தோட்டமானது, பொதுமக்களுக்கான தமது பல்வகை நிகழ்ச்சிகள், விழாக்கள், சமூக ஈடுபாட்டுத் திட்டங்கள், தொண்டூழிய முயற்சிகள் ஆகியவற்றின்வழி உள்ளூர்ச் சமூகத்தினரிடையே ‘மக்கள் தோட்டம்’ என்ற அபிமானத்தையும் பெற்றுள்ளது. பசுமைத் தொழில்நுட்பத்தால் சிறப்பம்சம் பொருந்திய நெடிதுயர் மரங்களும் பூங்கா மாடங்களும் நீடித்த நிலைத்தன்மை மிக்க பழக்கங்களை ஊக்குவிக்கின்றன.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


25. திரு நியாம் ஷி சுன்
துணைச் செயலாளர் (கொள்கை), உள்துறை அமைச்சு
முன்னாள் தலைமை நிர்வாகி, எரிசக்திச் சந்தை ஆணையம்

புகழுரை

திரு நியாம் ஷி சுன், எரிசக்திச் சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகியாக, சிங்கப்பூர் எரிசக்திச் சூழலின் உருமாற்றத்தை வழிநடத்தி, எரிசக்தித் துறையின் கரிமமற்ற செயல்பாட்டுக்கான அடித்தளத்தை நிறுவினார். 2021-2022 ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின்போது, அவர் சிங்கப்பூரின் எரிசக்தி மீள்திறனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய புதிய கொள்கைகளையும் திட்டங்களையும் முன்வைத்தார். பொதுச் சேவை முழுவதும் தாம் முன்னர் கொண்ட தலைமைத்துவப் பொறுப்புகள் அனைத்திலும், திரு நியாம் முக்கியத்துவம் வாய்ந்த பல பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


26. திருவாட்டி தியோ ஸின் வூன்
நிரந்தரச் செயலாளர் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு
முன்னாள் நிரந்தரச் செயலாளர் (மேம்பாடு), அரசாங்கச் சேவைப் பிரிவு & தேசிய வளர்ச்சி அமைச்சு

புகழுரை

திருவாட்டி தியோ ஸின் வூன் அரசாங்கச் சேவைப் பிரிவு, தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகியவற்றின் நிரந்தரச் செயலாளராக (மேம்பாடு), அரசாங்கச் சேவை, நகராட்சி சேவை ஆகியவற்றின் வழங்குமுறைகளை உருமாற்றுவதில் முக்கிய பங்காற்றினார். அத்தகைய சேவைகள் ஒருங்கிணைந்த முறையில், குடிமக்களை மையமாகக் கொண்டு வழங்கப்படவேண்டும் என்பதை அவர் உறுதிசெய்தார். மனிதவளக் கொள்கைகளை மேம்படுத்துதல், திறன்மிக்க ஊழியர் அணியை உருவாக்குதல், மேலும் பரிவான வேலையிடத்தை ஊக்குவித்தல் ஆகியன தொடர்பில் பல உருமாற்ற முயற்சிகளை அவர் பொதுச் சேவை முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். தேசிய வளர்ச்சி அமைச்சில், மூத்தோர் தங்கள் வாழ்விடங்களிலேயே சீராக மூப்படைய உதவும் பொருட்டு, புதிய வீட்டு வகைகளையும் திட்டங்களையும் அவர் வழிநடத்தினார். கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சில் குடிமக்களுடனான ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கும், கலை – விளையாட்டுமூலம் சமூகப் பிணைப்பை வளர்ப்பதற்கும் உரிய முயற்சிகளை அவர் வழிநடத்தி வருகின்றார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


27. திரு சியா டர் ஜியுன்
நிர்வாக இயக்குநர்,
சிங்கப்பூர் நாணய ஆணையம்

புகழுரை

திரு சியா டர் ஜியுன் தமது 31 ஆண்டு பொதுச் சேவையில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகள் பலவற்றை ஆற்றியுள்ளார். மனிதவள அமைச்சின் நிரந்தரச் செயலாளராக (மேம்பாடு), குடிபெயர்ந்த ஊழியர்களின் மருத்துவப் பராமரிப்பு, தங்கும் விடுதிகளுக்கான தரநிலைகள் ஆகியவற்றை அவர் வலுப்படுத்தினார். மேலும், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்திய அவர், வேலையிட நியாயத்தன்மை சார்ந்த முயற்சிகளை மேம்பாட்டையும் மேற்பார்வையிட்டார். சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக, சிங்கப்பூர்ப் பொருளியலை பணவீக்கமற்ற வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் சென்ற அவர், நிதித் துறையின் ஆற்றல்களை அதிகரித்து, திடமான நிதிக் கட்டமைப்பை மேற்பார்வையிட்டார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை)


28. மேஜர் ஜெனரல் லீ யி-ஜின், PPA(G)
தலைவர், மின்னிலக்க, உளவுத்துறைப் படை /
இயக்குநர், ராணுவ உளவுத்துறை
மின்னிலக்க, உளவுத்துறைப் படை

புகழுரை

மேஜர் ஜெனரல் லீ யி-ஜின் தம்முடைய ராணுவச் சேவை முழுவதிலும் பல்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளில் சிறந்து விளங்கியுள்ளார். மின்னிலக்க, உளவுத்துறைப் படையின் முதல் தலைவராக, மேஜர் ஜெனரல் லீ சிங்கப்பூர் ஆயுதப்படையின் புதிய சேவையை வழிநடத்தி, அதன் தலைமைத்துவக் குழு, அமைப்புமுறை, செயல்பாட்டுக் கட்டமைப்புகள், திறனாற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை ஒருசேர நடைமுறைபடுத்தினார். தற்காப்பு அமைச்சின் கொள்கை, உத்திக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் லீ வட்டாரப் பாதுகாப்பு ஒத்துழைப்புகள், வழக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் தற்காப்பு சார்ந்த அரசதந்திர முறைகளையும் உத்திகளையும் மேற்பார்வையிட்டார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (பதக்கப் பட்டை)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (படைத்துறை)


புகழுரை

அரசு நிர்வாகத்தில் கொள்கை உருவாக்கத்திற்கும் அமலாக்கத்திற்கும் இடையிலான உயிர்த்துடிப்பாய் விளங்கும் நடுத்தர மேலாளர்கள் பலரும் பின்னணியில் இயங்கிவரும் செயல்வீரர்கள். அவர்கள்தம் அதிகாரிகள் அமைப்புசார் இலக்குகளை அடையவும் ஆக உயரிய நிலையிலான அரசுச் சேவைகளை வழங்கவும், ஊக்கக் காரணிகளாகத் திகழ்வது அவர்களுடைய விடாமுயற்சியும் அர்ப்பணிப்பு உணர்வுமே ஆகும். தத்தம் கடமைகளைத் தனிச்சிறப்புடன் ஆற்றிய அதிகாரிகள், பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (பதக்கப் பட்டை)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (படைத்துறை)


புகழுரை

எந்தவோர் அரசாங்கக் கொள்கையின் தார்மீக வெற்றியும் அதன் செயல்திறன்மிக்க அமலாக்கத்தைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றது. இக்கொள்கைகளை நடைமுறைபடுத்த களம் காணும் அரசு அதிகாரிகள் யாவரும் அதற்கு உரித்தான திறன், திறமை, தைரியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். கொள்கை அமலாக்கத்தில் உள்ள நுணுக்கங்கள் சார்ந்த புரிந்துணர்வையும் நெகிழ்வுத்தன்மையையும் பறைசாற்றும் அதேவேளையில், உன்னத நிலைகளை அடையும் இலக்கில் எவ்விதக் குறைபாடுகளையும் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. அத்தகைய அதிகாரிகளின் சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு, அவர்கள் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர்.

TOP