2023 National Awards Investiture Citations (Tamil)


THE ORDER OF TEMASEK (WITH HIGH DISTINCTION)
தெமாசெக் விருது (உயரிய தனிச்சிறப்புடன்)


1. திருவாட்டி ஹலிமா யாக்கோப்
சிங்கப்பூர்க் குடியரசின் எட்டாவது அதிபர்

புகழுரை

திருவாட்டி ஹலிமா யாக்கோப் நாற்பது ஆண்டுக்கும் மேலாக சிங்கப்பூருக்குத் தனித்துவம் வாய்ந்த உன்னத சேவையாற்றி வந்துள்ளார்.

தடைகள் பல தகர்த்தெறிந்து, பெண்களுக்கான ஒரு பாதையை வகுத்துக்கொடுத்த அவர், பல முதன்மைகளுக்கு உரியவர்: அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பின் நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சிங்கப்பூரர்; நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலாய் பெண்மணி; முதல் பெண் நாடாளுமன்ற நாயகர்; நாட்டின் ஆக உயரிய பதவியை – சிங்கப்பூர்க் குடியரசின் அதிபர் – வகித்த முதல் பெண்.

திருவாட்டி ஹலிமா 1978ஆம் ஆண்டில், தொழிலாளர் இயக்கத்தில் தமது வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கினார். அவர் உழைக்கும் மக்களின் தேவைகளுக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். காலப்போக்கில், அவர் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளர் ஆனார். 33 ஆண்டுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர், உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் தொழிலாளர்களுக்கான தரநிலைகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் அமல்படுத்துவதற்கும் பெருமளவில் பங்களித்தார்.

2001ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நான்கு தவணைக்காலத்திற்கு அப்பொறுப்பில் சேவையாற்றினார். சமூக மேம்பாடு, இளையர், விளையாட்டுத் துறை அமைச்சிலும் (2011 – 2012), பின்னர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிலும் (2012 – 13) துணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவர், பல சமுதாய நலன்களுக்கு அயராது குரல் கொடுத்தார். ஒற்றைத் தாய்மார்களுக்கும் குறைந்த வருமானக் குடும்பத்திலிருந்து வரும் பிள்ளைகளுக்குமான வாய்ப்புகள், மனநலச் சுகாதாரப் பிரச்சினை உடையவர்களுக்கான ஆதரவு, உடற்குறையுள்ளோருக்கும் மூத்தோருக்குமான சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை அவற்றுள் சில.

நாடாளுமன்ற நாயகராக நான்கு ஆண்டு (2013 – 2017) பணியாற்றிய பிறகு, திருவாட்டி ஹலிமா 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் அதிபராக, அவர் சிங்கப்பூரின் அனைத்துலக நன்மதிப்பை உயர்த்தினார்; அருகிலும் தொலைதூரத்திலும் உள்ள நட்பு நாடுகளுடனான சிங்கப்பூரின் நல்லுறவை வலுப்படுத்தினார்; சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் புதிய பொருளியல் வாய்ப்புகளையும் அமைத்துக்கொடுத்தார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். எல்லாச் சிங்கப்பூரர்களையும் ஒன்றிணைக்கவல்ல ஆற்றல்மிகு சின்னமாய், அவர் திகழ்ந்தார் - தமது பதவியேற்பில் அளித்த வாக்குறுதிக்கிணங்க‘அனைவருக்குமான ஓர் அதிபர்’ எனத் திகழ்ந்தார். அதிகாரபூர்வ கடமைகள் தவிர, பல அறக்கொடை, பொதுநல அமைப்புகளுக்கும் திருவாட்டி ஹலிமா புரவலராக இருந்துள்ளார். திறன் மேம்பாட்டையும் வேலைவாய்ப்புகளையும் ஊக்குவித்தல், அனைவரையும் உள்ளடக்கிய, இலகுநிலை மிகுந்த வேலையிடங்களை வலியுறுத்துதல், இளையர்தம் மனநலச் சுகாதாரத்திற்கு ஆதரவு நல்குதல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கும் வகையில் அதிபர் சவால் அறநிதியை அவர் விரிவுபடுத்தினார். சமயங்களுக்கும் பண்பாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் ஒன்றுபட்ட சமூகங்களுக்கான அனைத்துலக மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். பலதரப்பட்ட சமூகங்களுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றை வலுப்படுத்தவும், அனைத்துத் தரப்பு சிங்கப்பூரர்களை ஈடுபடுத்தவும் தமது அதிபர் பதவிக்காலம் முழுவதும் அயராது பாடுபட்டார், திருவாட்டி ஹலிமா.

கொவிட்-19 பெருந்தொற்றுச் சமயத்தில், அதிபராக சிங்கப்பூரின் கடந்தகால நிதியிருப்புகளின்மீது தாம் கொண்டிருந்த அதிகாரத்தை முன்னெப்போதும் இல்லாத அளவில் பயன்படுத்தி, மொத்தம் $69 பில்லியன் வரை பயன்படுத்த ஒப்புதல் அளித்தார், திருவாட்டி ஹலிமா. அதிபர் ஆலோசகர் மன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஓர் அதிபர் எவ்வாறு நிதியிருப்புகளுக்குரிய இரண்டாவது சாவியைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கான உயரிய தரநிலையை அவர் வகுத்தளித்துள்ளார். அவர்தம் எழுப்பிய கடுமையான கேள்விகளாலும், அவருடைய தீர்க்கமான ஆதரவினாலும், அரசாங்கம் கடந்தகால நிதியிருப்புகளை மிகவும் நியாயமான முறையில் பயன்படுத்த முடிந்தது – உயிர்கள் காப்பாற்றப்பட்டன; வேலைகள் தக்கவைத்துக்கொள்ளப்பட்டன; பொருளியல் நிலைபெற இயன்றது. திருவாட்டி ஹலிமா தமது மக்களுக்காக ஆற்றிய மாபெரும் சேவையின் பேரில், அவர்களின் முதல் நெருக்கடிகால அதிபராக வரலாற்றில் நினைவுகூரப்படுவார்.

எளிமையான பின்னணியில் தொடங்கி, நாட்டின் முதல் சிறுபான்மையின பெண் அதிபராக உயர்ந்த திருவாட்டி ஹலிமாவின் மதிக்கத்தக்க பயணம், ஒவ்வொரு சிங்கப்பூரரும் இனம், மொழி, மதம், குடும்பப் பின்னணி என எதன் அடிப்படையிலும் அல்லாமல் தமது கனவை நனவாக்கிடலாம் என்பதற்குச் சான்று.

சிங்கப்பூர்க் கதையை முழுமையாகப் பறைசாற்றியதற்காகவும் – தமது வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்பும் தனிச்சிறப்பும் மிகுந்த மெச்சத்தக்க சேவைக்காவும் – திருவாட்டி ஹலிமா யாக்கோப்புக்கு தெமாசெக் விருது (உயரிய தனிச்சிறப்புடன்) வழங்கப்படுகிறது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


2. திரு பாபி சின் யோக் சூங்
முன்னாள் தலைவர்,
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

புகழுரை

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக, திரு பாபி சின் யோக் சூங், சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான, வசதியான கழக வீடுகளை வழங்கும் பொருட்டு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தை வழிநடத்தினார். அவரது பதவிக்காலத்தில், வீடமைப்புக் கொள்கைகளும் திட்டங்களும் மேம்படுத்தப்பட்டன; புதிய வகை வீடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

திரு சின், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நிறுவன மேம்பாட்டையும் ஆளுமைக் கட்டமைப்புகளையும் வலுப்படுத்தினார்; கழகத்தின் ஊழியரணி உருமாற்றத்தை வழிநடத்தினார்; நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் மேலும் வலுவான உறவுமுறைகளை ஊக்குவித்தார். அவருடைய தலைமைத்துவத்தின்கீழ், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பசுமை நிதியளிப்புக் கட்டமைப்பையும் புதிய பசுமைப் பத்திரங்களையும் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. நீடித்த நிலைத்தன்மை மிக்க மேம்பாட்டிற்கான கழகத்தின் கடப்பாட்டை அத்திட்டங்கள் உறுதிப்படுத்தின.

திரு சின், பல்வேறு வகைகளில் சிங்கப்பூரின் ஆளுமை நெறிகளுக்குப் பல்லாண்டு காலமாகப் பங்களித்துள்ளார்: அதிபர் ஆலோசகர் மன்றத்தின் உறுப்பினர்; நகரச் சீரமைப்பு ஆணையத்தின் தலைவர்; ‘மெடிஷீல்டு லைஃப்’ மறுஆய்வுக் குழுத் தலைவர். தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் நியாயவிலைக் கூட்டுறவு அமைப்பின் தலைவராக, சிங்கப்பூருக்கான உணவு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளின் தாக்கத்தைத் தணிப்பதில், திரு சின் முக்கியப் பங்காற்றி வந்துள்ளார்.

சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கும், அதன் பொது வீடமைப்புத் திட்டத்திற்கும், திரு பாபி சின் யோக் சூங் ஆற்றிய பல பங்களிப்புகளின் பேரில், அவருக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


3. திரு திமத்தி ஜேம்ஸ் டி சூஸா
உறுப்பினர், சிற்பிகள் நினைவகக் குழு

புகழுரை

சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தின் உறுப்பினராக, திரு திமத்தி ஜேம்ஸ் டி சூஸா சிங்கப்பூரின் இனம், சமயம் சார்ந்த சமூகங்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து அறிவார்ந்த ஆலோசனைகளை வழங்கினார்.

யுரேசியர் சங்கத்தின் தலைவராக (பின்னர், அறங்காவலராக) அவர் இருந்த காலத்தில், சங்கத்திற்கு ‘சுய உதவிக் குழு’ எனும் அங்கீகாரம் பிறப்பிக்கப்பட்டது. அதேசமயத்தில், சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகளின்மூலம் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை விரிவாக்கம் கண்டது; சமூகத்தை வலுப்படுத்தும் புதிய சமூக உதவித் திட்டங்களும் நிதிகளும் நிறுவப்பட்டன.

சிற்பிகள் நினைவகக் குழுவின் உறுப்பினராக, திரு டி சூஸா, நினைவகத்தின் உருவாக்கம், வடிவமைப்பு, மேம்பாடு ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றினார். நினைவகம் தொடர்பிலான சிங்கப்பூரர்களின் கருத்துகள் கேட்டறியப்படுவதை உறுதிசெய்வதில் அவர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார்.

முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கான மேல்முறையீட்டுக் குழுவின் முதல் தலைவராக, திரு டி சூஸா, 5,000க்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள் மறுஆய்வு செய்யப்படுவதை மேற்பார்வையிட்டார். ஒவ்வொரு கோரிக்கையும் முழுமையாகவும் முறையாகவும் பரிசீலிக்கப்படுவதை அவர் உறுதிசெய்தார்.

ஆளில்லா விமானக் கட்டமைப்புகளுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராக, திரு டி சூஸா சிங்கப்பூரின் ஆளில்லா விமானத்துறை மேலும் வலுப்பெற்றுத் திகழ்வதற்கு வழிவகுத்தார்.

கடந்த 30 ஆண்டுகளில், திரு திமத்தி ஜேம்ஸ் டி சூஸா பல்வேறு துறைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளின் பேரில், அவருக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


4. திருவாட்டி கே குவொக் ஊன் குவோங்
முன்னாள் தலைவர், தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம்
தலைவர், யேல் – சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கல்லூரி நிர்வாக வாரியம்

புகழுரை

தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைவராக (2009 – 2021), திருவாட்டி கே குவொக் ஊன் குவோங் குழுமத்தின் பல முக்கிய மைல்கல் நிகழ்வுகளைத் திறம்பட வழிநடத்தியுள்ளார். அலெக்ஸாண்ட்ரா சுகாதார அமைப்பைத் தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்துடன் ஒருங்கிணைத்தல், லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியுடனான குழுமத்தின் பங்காளித்துவம், மக்கள்தொகை சுகாதாரம் தொடர்பிலான முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவை அவற்றுள் அடங்கும். தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தை நிறுவுவதிலும், கொவிட்-19 பெருந்தொற்றுச் சமயத்தில் குழுமத்தின் செயல்பாடுகளை வழிநடத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

யேல் – சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கல்லூரிக்கான நிர்வாக வாரியத்தின் முதல் தலைவராகவும், திருவாட்டி குவொக் பொறுப்பு வகிக்கிறார். குடியிருப்புத் திட்டத்துடன் கூடிய சிங்கப்பூரின் முதல் பரந்துபட்ட கலைக் கல்லூரியாக அதன் வளர்ச்சியை அவர் வழிநடத்தியுள்ளார். தற்போது, பல்கலைக்கழகக் கல்விமான் திட்டத்துடன் இக்கல்லூரி இணையவிருக்கிறது. புதிய கல்லூரி தொடர்ந்து தரமான கல்வியை விரிவான அளவில் வழங்குவதை உறுதிசெய்ய, அவர் தொடர்ந்து பங்காற்றி வருகிறார்.

சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலைகள், சுற்றுப்புறம் எனப் பல்வேறு துறைகளில் திருவாட்டி குவொக் பங்களித்துள்ளார். சமூக அமைப்புகள், தொழில்துறை குழுக்கள், அரசாங்க அமைப்புகள் எனப் பலவற்றின் வாரியக் குழுக்களிலும் மன்றங்களிலும் அவர் தலைவராகவோ உறுப்பினராகவோ சேவையாற்றியுள்ளார். துணிவு நிதி, நார்த்லைட் பள்ளி, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு, சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், தேசியக் கலை மன்றம் ஆகியவை அவற்றுள் அடங்கும். ஒவ்வொரு பொறுப்பிலும், அவர் தமது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு, அறிவார்ந்த ஆலோசனைகளையும் சீரான தலைமைத்துவத்தையும் நல்கியுள்ளார்.

சிங்கப்பூருக்குத் தமது வாழ்நாள் முழுவதும் அளித்த தலைசிறந்த பங்களிப்புகளின் பேரில், திருவாட்டி கே குவொக் ஊன் குவோங் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது


5. திரு குவா சொங் செங்
முன்னாள் தலைவர்,
ST Engineering நிறுவனம்

புகழுரை

ST Engineering நிறுவனத்தின் தலைவராக, திரு குவா சொங் செங் சிங்கப்பூரின் தற்காப்புத் திறனாற்றல்களையும் ஆயத்தநிலையையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். சிங்கப்பூர் ஆயுதப்படையின் மூன்றாம் தலைமுறை உருமாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அதிநவீன செயல்முறைகள் வழங்கப்பட்டன. ஆயத்தநிலை, மீள்திறன் ஆகியவை உயரிய நிலையில் இருக்கும் வகையில், சிங்கப்பூர் ஆயுதப்படைக்கான செயல்பாட்டு, பராமரிப்பு ஆதரவு வலுப்படுத்தப்பட்டது. முக்கிய உள்நாட்டுத் தொழில்நுட்பத்தையும், பொறியல் மனிதவளம், நிபுணத்துவம் ஆகியவற்றையும் மேம்படுத்துவதில் திரு குவா முக்கியப் பங்காற்றினார். அவற்றின் பலன்கள் கொவிட்-19 பெருந்தொற்றின்போது பெருமளவு பயனளித்தன.

பொதுச் சேவை ஆணையத்தின் துணைத் தலைவராக, பொதுச் சேவைக்கான திறனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் வழிகாட்டினார், திரு குவா. முக்கியப் பொறுப்புகளைத் தகுதிவாய்ந்த, பண்புமிக்க தலைவர்கள் தொடர்ந்து வகிப்பதை உறுதிசெய்ய அவரது வழிகாட்டுதல் துணைநின்றது. பொதுச் சேவையின் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு அதன் விதிமுறைகள், கொள்கைகள், செயல்முறைகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்வதற்கும் அவர் வழிகாட்டுதல் வழங்கினார். ஒழுங்குமுறை சார்ந்த வழக்குகள் தீர்க்கமாகவும் விரைவாகவும் பரிசீலிக்கப்படுவதற்கும் அது வழிவகுத்தது. சட்டச் சேவை ஆணையத்தின் உறுப்பினராகச் சேவையாற்றிய திரு குவா, தற்போது நீதிச் சேவை ஆணையத்தில் சேவையாற்றுகிறார்.

சிங்கப்பூரின் தேசிய தற்காப்புக்கும் பொதுச் சேவைக்கும் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புகளின் பேரில், திரு குவா சொங் செங்கிற்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


6. நீதிபதி சான் செங் ஒன்
ஆக அண்மைய முன்னாள் தலைவர்,
தொழில்துறை நடுவர் மன்றம்

புகழுரை

தொழில்துறை நடுவர் மன்றத் தலைவராக அக்டோபர் 2007 முதல் ஜனவரி 2021 வரை, சேவையாற்றிய நீதிபதி சான் செங் ஒன் பல உயர்மட்ட வழக்குகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். அவருடைய தீர்ப்புகள், பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் மேற்கோள்களாக அமையப்பெற்றுள்ளன.

நீதிபதி சானின் தீர்ப்புகள் வேலையிடத்தில் தொழில்துறை உறவுகளுக்கான நிலைப்பாட்டை அமைத்துக்கொடுத்தன. சட்டத்துறை தாண்டி, தம்முடைய முடிவுகள் தொழில்துறை உறவுமுறைகள், போக்குகள், நடைமுறைகள் ஆகியவைமீது கொண்டிருக்கவல்ல விரிவான தாக்கங்கள் குறித்தும் அவர் பரிசீலிப்பார். தொழில்துறை சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பது மட்டுமல்லாமல், தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையில் நல்ல, இணக்கமிக்க வேலையிட உறவுமுறைகள் பேணிக் காக்கப்படுவதிலும் அவர் கவனம் செலுத்தினார்.

வேலையிடத்தில் தொழில்துறை சர்ச்சைகளைக் குறைப்பதற்கும், சிங்கப்பூரில் நல்லிணக்கம் மிகுந்த தொழில்துறை உறவுகளைப் பேணுவதற்கும் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளின் பேரில், நீதிபதி சான் செங் ஒன்னுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


7. திரு லீ ஃபூக் சன்
தலைவர், Ensign InfoSecurity நிறுவனம்
துணைத் தலைவர், SMRT நிறுவனம்

புகழுரை

Ensign InfoSecurity நிறுவனத்தின் முதல் தலைவராக, சிங்கப்பூரின் இணையப்பாதுகாப்புச் சூழலின் வளர்ச்சிக்குத் திரு லீ ஃபூக் சன் முக்கியப் பங்காற்றியுள்ளார். தேசிய அளவிலான இணையத்திறன்களையும் திறனாளர்களையும் மேம்படுத்தும் Ensign நிறுவனத்தின் முயற்சிகளை அவர் வழிநடத்தினார். மேலும், Ensign நிறுவனம் ஆசியாவின் முன்னணி இணையப்பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளார்ச்சி காண்பதையும் அவர் மேற்பார்வையிட்டார்.

SMRT நிறுவனம், SMRT ரயில்கள் ஆகியவற்றின் துணைத் தலைவராக, நிறுவனம் அதன் ரயில் சேவைகளின் தொடர்பில், உயர்தர நம்பகத்தன்மையை அடைய அவர் வழிகாட்டினார். கட்டட, கட்டுமான ஆணையத்தின் முன்னாள் தலைவராக, நீடித்த நிலைத்தன்மை, உற்பத்தித்திறன், மின்னிலக்கமயமாதல் ஆகிய அம்சங்களில் மனிதரால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் துறையின் உருமாற்ற முயற்சிகளையும் அவர் வழிநடத்தினார்.

தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்புமிக்க சேவையைத் தொடர்ந்து, ST Engineering குழுமத்தில் உலகளாவியப் போட்டித்திறன்மிக்கத் தொழில்களை நிறுவும் முயற்சிகளுக்குத் திரு லீ தலைமை தாங்கினார்.

சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளின் பேரில், திரு லீக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


8. திரு மோசஸ் லீ கிம் பூ
தலைவர், Special Needs Trust நிறுவனம்
தலைவர், SG Enable Limited அமைப்பு

புகழுரை

Special Needs Trust நிறுவனம் (2019 முதல்), SG Enable Limited அமைப்பு (2022 முதல்), சிங்கப்பூர்ப் பந்தயப்பிடிப்புக் கழகம் (2013 – 2020) ஆகிய அமைப்புகளின் தலைவராக, சமுதாயச் சேவைத் துறையை வலுப்படுத்துவதற்கும், சிறப்புத் தேவையுடையோரின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தி, அவர்களுடைய லட்சியங்களை ஆதரிப்பதற்கும், திரு மோசஸ் லீ கிம் பூ பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இஸ்லாமியச் சமய மன்றத்தின் நிதியாதரவுத் திட்டம், ‘Gift of a Lifetime’ நிதியாதரவுத் திட்டம், பந்தயப்பிடிப்புக் கழக இயல்பு வாழ்க்கையை ஆதரிப்பதற்கான திட்டம், கோ சோக் தோங் துணைபுரியும் நிதி ஆகியவை அவற்றுள் அடங்கும்.

திரு லீ செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் (2013 – 2019) சேவையாற்றியுள்ளார். பல அமைச்சுகளின் – மனிதவளம், சமூக மேம்பாடு, சுகாதாரம் – நிரந்தரச் செயலாளராகவும், உள்நாட்டு வருவாய் ஆணையராகவும் தனிச்சிறப்புமிக்க வகையில் சேவையாற்றிய திரு மோசஸ், 2012ஆம் ஆண்டில் பொதுச் சேவையிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.

சிங்கப்பூரின் சமுதாயச் சேவைத் துறைக்கும் பொதுச் சேவைக்கும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளின் பேரில், திரு மோசஸ் லீ கிம் பூவிற்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


9. திருமதி ஒள ஃபூங் பெங்
நிரந்தரச் செயலாளர், தேசிய வளர்ச்சி அமைச்சு

புகழுரை

தேசிய வளர்ச்சி அமைச்சின் நிரந்தரச் செயலாளராக, திருமதி ஒள ஃபூங் பெங் முக்கிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில், தேசிய வளர்ச்சி அமைச்சையும் அதன்கீழ் இயங்கும் அரசாங்க அமைப்புகளையும் வழிநடத்தியுள்ளார்.

அடுத்த 50 ஆண்டில் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் மேம்பாட்டை வழிநடத்துவதற்கான நீண்டகாலத் திட்ட மறுஆய்வை அவர் மேற்பார்வையிட்டார். கட்டுப்படியான, தரமான கழக வீடுகளை வழங்குதல், கட்டுமானத் தொழில்துறையை உருமாற்றுதல் உள்ளிட்ட முயற்சிகளை அவர் மேற்கொண்டார். மேலும், சிங்கப்பூரை இயற்கையில் ஒரு நகரமாக மாற்றியமைக்கும் பொருட்டு, அவர் கணிசமான பங்காற்றினார். குடியிருப்பாளர்களுக்கு நகராட்சி சேவைகள் வழங்கப்படுவதை மேம்படுத்தவேண்டி, திருமதி ஒள நகராட்சி சேவைகள் அலுவலகத்தையும் வழிநடத்தினார்.

முன்னதாக, வர்த்தக, தொழில்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளராகவும் ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய திருமதி ஒள, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். சிங்கப்பூர் பல நாடுகளுடன் கொண்டிருந்த பொருளியல் தொடர்புகளை வலுப்படுத்தும் பொருட்டு, அவர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கையெழுத்திட துணைபுரிந்தார். மேலும் ஆற்றல் மிகுந்த தொழில்துறைச் சூழலை உருவாக்கும் வகையில், அவர் ஜூரோங் நகராண்மைக் கழகத்தையும் வழிநடத்தினார்.

சிங்கப்பூரின் பொருளியல், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்குத் திருமதி ஒள ஃபூங் பெங் ஆற்றிய பல பங்களிப்புகளின் பேரில், அவருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


10. திரு குவெக் சீ தியட்
தலைவர், சொத்து முகவை மன்றம்

புகழுரை

சொத்து முகவை மன்றத்தின் தலைவராக, திரு குவெக் சீ தியட், சொத்து முகவை நிறுவனங்களுக்குச் செயல்திறன்மிக்க ஆலோசனை வழங்கி, அத்துறையை நெறிப்படுத்தும் அமைப்பாக மன்றத்தின் ஏற்புடைத்தன்மையை உறுதிசெய்துள்ளார். அவரது தலைமைத்துவத்தின்கீழ், சொத்துத் தொழில்துறையின் நிபுணத்துவம் மேம்படும் பொருட்டு, சொத்து முகவை மன்றம் அதன் கட்டுப்பாட்டு ஆற்றலையும், இதர பங்காளிகளுடனான உறவையும் வலுப்படுத்தியது. சொத்துத் தொழில்துறையின் தொடர் நிபுணத்துவ மேம்பாட்டை வளப்படுத்துவதற்கும் அத்துறையின் உருமாற்ற வரைவுத்திட்டத்தை உருவாக்குவதற்கும் சொத்து முகவை மன்றத்திற்கும் தொழில்துறைக்கும் இடையிலான கூட்டுப் பணிக்குழுவை அவர் வழிநடத்தினார்.

திரு குவெக், கட்டட, கட்டுமான ஆணையத்தின் வாரிய உறுப்பினராகவும் பின்னர், தலைவராகவும் இருந்தார். வாழத்தகு நகரங்கள் மையத்தின் வாரிய உறுப்பினராகவும் இருந்த அவர், தற்போது அதன் உத்திபூர்வ இலக்குகளையும் முக்கிய நடவடிக்கைகளையும் மறுஆய்வு செய்யும் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

மதிப்பிற்குறிய கணக்கியல் நிபுணராகப் போற்றப்பட்ட திரு குவெக், தமது அனுபவத்தினால், கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கணக்கியல் தரங்கள் குழுவின் தலைவராகவும், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் வாரிய உறுப்பினராகவும் தணிக்கைக் குழுத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.

பொதுச் சேவைக்குத் திரு குவெக் சீ தியட் ஆற்றிய பங்களிப்புகளின் பேரில், அவருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்


11. பேராசிரியர் டான் தியாம் சூன்
கல்விக்கழகப் பேராசிரியர் / முன்னாள் தலைவர், சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
துணைத் தலைவர், கட்டட, கட்டுமான ஆணையம்
வாரிய உறுப்பினர், நிலப் போக்குவரத்து ஆணையம்

புகழுரை

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக (2013 – 2021), பேராசிரியர் டான் தியாம் சூன் சிங்கப்பூரின் ஐந்தாவது தன்னாட்சிப் பல்கலைக்கழகம் நிறுவப்பெற்று, மேம்பாடு காண்பதை வழிநடத்தியுள்ளார். வேலையிடக் கற்றலையும் பெரியவர்களுக்கான புத்தாக்கம் மிகுந்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தின்மூலம் முன்னெடுத்துச் செல்வதில் பல்கலைக்கழகத்தின் பங்கை அவர் நிலைநாட்டினார். அவர் தொடர்ந்து சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கல்விக்கழகப் பேராசிரியராகப் பங்களித்து வருகிறார்.

பேராசிரியர் டான், கட்டட, கட்டுமான ஆணையத்தின் துணைத் தலைவராகவும், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வாரிய உறுப்பினராகவும் சேவையாற்றி வருகிறார். நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பாதுகாப்பு ஆளுமைக்கான ஆலோசனைக் குழு, அனைத்துலக ஆலோசகர் குழு ஆகியவற்றின் தலைவராக விளங்கும் திரு டான், பொறியல், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கு உத்திபூர்வ ஆலோசனைகளை வழங்குகிறார்.

பேராசிரியர் டான், தற்காப்பு அமைச்சின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ஆலோசனைக் குழுவின் முதல் தலைவராகவும் சேவையாற்றி வருகிறார்.

சிங்கப்பூரின் கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு அளித்த முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், பேராசிரியர் டான் தியாம் சூனுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.


THE PUBLIC SERVICE STAR (BAR)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை)



THE PUBLIC SERVICE STAR
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம்


புகழுரை

சமூகத்திற்குச் சேவையாற்றவும் பிறர் வாழ்க்கையை மேம்படுத்தவும் முன்வந்தோரை, இன்று நாம் கெளரவிக்கின்றோம். சிங்கப்பூரை மேலும் சிறந்ததோர் இடமாக உருமாற்ற உதவிய அத்தனை பேரின் முயற்சிகளையும் அங்கீகரிக்கும் பொருட்டு, அத்தகையோருக்குப் பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை), பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் ஆகியன வழங்கப்படுகின்றன. அவர்களுடைய தன்னலமற்ற சிந்தனைகளுக்கும் பங்களிப்புகளுக்கும் நம் நாடே தலைவணங்குகிறது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


12. திருவாட்டி டான் கீ கியோவ்
நிரந்தரச் செயலாளர்,
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு

புகழுரை

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளராகத் திருவாட்டி டான் கீ கியோவ், தலைசிறந்த பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். ‘ஒன்றிணைந்த சிங்கப்பூர்’, ‘முன்னேறும் சிங்கப்பூர்’ ஆகிய இயக்கங்களுக்கு ஆதரவாக அவர், கலை – பண்பாடு, விளையாட்டு, இளையர், அறக்கொடை, குடிமக்கள் ஈடுபாடு ஆகிய துறைகளில், பரிவு, ஒற்றுமை, தன்னம்பிக்கை மிகுந்த ஒரு சிங்கப்பூரை உருவாக்க அரசாங்கம் முழுவதுமான முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றார். கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சில் உன்னதத்திற்கான உருமாற்றத்தை வழிநடத்துவதில், அவர் தீர்க்கமாகச் செயல்பட்டார். சிங்கப்பூரர்களுக்கு மேம்பட்ட வகையில் சேவையாற்றும் பொருட்டு, கடினமான மாற்றங்களைக் கடந்து செல்லவும், தெளிவற்ற, புதிய சூழல்களில் சிறப்பாகச் செயல்படவும், புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்படுத்தவும் அவர் தமது அதிகாரிகளை ஊக்குவித்தார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


13. திருவாட்டி இலேன் நியோ போ சூ
துணைச் செயலாளர் (நிர்வாகம்),
தற்காப்பு அமைச்சு

புகழுரை

திருவாட்டி இலேன் நியோ போ சூ தமது பொதுச் சேவை பணிக்காலம் முழுவதும் வலுவான தலைமைத்துவப் பண்புகளையும் உன்னதத்திற்கான கடப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். தற்காப்பு அமைச்சில், தேசிய சேவை, மனிதவளம், நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் கொள்கைகள், கட்டமைப்புகள், செயல்முறைகள் ஆகியவற்றை அவர் உருமாற்றினார். மின்னிலக்கமயமாதல், சேவை மேம்பாடு ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களையும் அவர் வழிநடத்தினார். முன்னதாக, தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நூலக வளாகங்களுக்குப் புத்துயிர் அளித்தல், நூலகங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை அவர் வழிநடத்தினார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


14. பேராசிரியர் ஹோ டெக் ஹுவா
தலைவர், மதிப்பிற்குரிய பல்கலைக்கழகப் பேராசிரியர்,
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

முன்னாள் மூத்த துணைத் தலைவர், வேந்தர்,
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்,
கல்வி அமைச்சு

புகழுரை

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் மூத்த துணைத் தலைவராகவும் வேந்தராகவும் 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை பணியாற்றிய காலத்தில், துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, புத்தாக்கம் மிகுந்த கற்றல் – கற்பித்தல், வாழ்நாள் கல்வி ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தும் வகையில், பல்கலைக்கழகத்தை வழிநடத்தினார், பேராசிரியர் ஹோ டெக் ஹுவா.

பேராசிரியர் ஹோ, ஏஐ எஸ்ஜி நிறுவனத்தின் முதல் நிர்வாகத் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார். தேசியச் சுற்றுப்புற அமைப்பு, அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு, தேசியப் பல்கலைக்கழகச் சுகாதார அமைப்பு ஆகியவற்றின் வாரிய உறுப்பினராகவும் அவர் துடிப்பாகச் செயல்பட்டுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


15. திருவாட்டி லாய் வெய் லின்
நிரந்தரச் செயலாளர(போக்குவரத்து மேம்பாடு),
இரண்டாம் நிரந்தரச் செயலாளர் (நிதி),
நிதி அமைச்சு

புகழுரை

திருவாட்டி லாய் வெய் லின் சிங்கப்பூரின் அரசாங்க நிதித்துறை, நிலப் போக்குவரத்து, சட்டச் சூழல், கல்வி ஆகியவற்றுக்குப் பங்களித்துள்ளார். மாறிவரும் அரசியல் சூழல்களாலும் அனைத்துலக வரிக் கட்டமைப்புகளாலும் அதிகரித்துவந்த போட்டித்தன்மையைச் சமாளிப்பதற்கான சிங்கப்பூரின் நிதியியல் கொள்கைகளை அவர் வழிநடத்தினார். மேலும், கணக்கியல் துறையின் மேம்பாட்டையும் அவர் ஊக்குவித்தார்.

நீண்டகால அடிப்படையில், பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு, நிதியளவில் நீடித்த நிலைதன்மைப் பெற்றிருக்கத் தேவையான முறைமைகளைத் திருவாட்டி லாய் வகுத்துக்கொடுத்தார். பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தை மேம்படுத்தவும், சட்டத் தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர திட்டங்களை நமது சட்ட நடுவத்திற்காக முன்னெடுத்துச் செல்லவும் அவர் துணைபுரிந்தார். மாணவர்களுக்கான ஆதரவுக் கட்டமைப்பையும், உயர்கல்விக்கான வாய்ப்புகளை மேம்படுத்திய அவர், பாலர் பருவ மேம்பாட்டுக்கான தேசியக் கல்விக்கழகத்தையும் துவக்கி வைத்தார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


16. திரு ஜெர்ரி சீ பக் தை
காவல்துறை துணை ஆணையர் (கொள்கை),
சிங்கப்பூர்க் காவல்துறை,
உள்துறை அமைச்சு

புகழுரை

திரு ஜெர்ரி சீ பக் தை, 36 ஆண்டுகளுக்கும் மேலாக உள்துறை அமைச்சில், பல உயர் பொறுப்புகளில் சேவையாற்றியுள்ளார். அவர் சிங்கப்பூர்க் காவல்துறையின் துணை ஆணையராக அதன் தொழில்நுட்ப உருமாற்றத்தை மேற்பார்வையிடுகிறார். மேலும், உலகில் ஆகப் பாதுகாப்பான இடமாகச் சிங்கப்பூர் திகழவேண்டி, குற்றச்செயல்களைச் சமாளிப்பதற்கான காவல்துறையின் செயல்முறைகளையும் கட்டமைப்புகளையும் வலுப்படுத்தவும் அவர் முனைந்துள்ளார்.

அவர், அப்போதைய சூதாட்டக்கூடக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார். சூதாட்டக்கூடங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகளில் சூதாட்டக்கூடக் கட்டுப்பாட்டு ஆணையத்தை ஒரு முன்னணி அமைப்பாக நிலைநாட்டுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


17. திருவாட்டி ரினா லீ
பெருங்கடல், கடல்சார் சட்ட விவகாரங்களுக்கான தூதர்
தலைமை நிர்வாகி, சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகம்

புகழுரை

சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகத் தலைமை நிர்வாகியாக, திருவாட்டி ரினா லீ சிங்கப்பூரின் மதிநுட்பச் சொத்து உத்தி 2030 திட்டத்தை மேற்பார்வையிடுவதுடன், இருதரப்பு ஈடுபாடுகள்வழி நாட்டின் அனைத்துலக மதிநுட்பச் சொத்துக் கட்டமைப்புகளை விரிவுபடுத்தி, வலுப்படுத்தியுள்ளார். 2018ஆம் ஆண்டு முதல், அரசாங்கங்களுக்கு இடையிலான மாநாட்டின் தலைவராகத் திருவாட்டி லீ செயல்பட்டு வருகிறார். அதன்மூலம் தேசிய எல்லைகளைத் தாண்டிய பகுதிகளில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின் பன்முகத்தன்மை குறித்த பேச்சுவார்த்தைகளை 4 மார்ச் 2023இல் நிறைவுசெய்தார் திருவாட்டி லீ. கடல்சார் விவகாரங்கள் தொடர்பிலான சட்டம் குறித்த அறிவார்ந்த தலைவராக அனைத்துலகச் சமூகத்தில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை அவர் மேம்படுத்தியுள்ளார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


18. திரு டான் சூன் ஷியான்
முன்னாள் தலைமை நிர்வாகி,
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு

புகழுரை

சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பில் உத்திபூர்வ திட்டங்களை அமல்படுத்தி, புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கியப் பணியாற்றியுள்ளார், திரு டான் சூன் ஷியான். வேலை தேடுவோரும் தொழில்நிறுவனங்களும் ஊழியரணி சவால்களை எதிர்கொள்வதற்குத் துணைபுரியும் வகையில் அவை அமையப்பெற்றன. ஊழியரணியிலும் தொழில்துறைகளிலும் உள்ள வெவ்வேறு பிரிவுகளில், தரவு – நுண்ணறிவு அடிப்படையிலான முடிவெடுக்கும் போக்கை அவர் வலியுறுத்தினார். அதன்மூலம் வாழ்க்கைத்தொழில் சேவைகள் வழங்கப்பெறும் முறைமைகள் உருமாற்றம் கண்டன. தேசிய வேலைகள் மன்றத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக, கொவிட்-19 பெருந்தொற்றுச் சமயத்தில், பல்வேறு அமைப்புகளுக்கும் முத்தரப்புப் பங்காளிகளுக்கும் இடையில் வேலை இணைப்புச் செயல்முறைகள் திறம்பட அமலாக்கம் பெறுவதை அவர் உறுதிசெய்தார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


19. திரு லிம் எங் ஹ்வீ
தலைமை நிர்வாக அதிகாரி,
நகரச் சீரமைப்பு ஆணையம்

புகழுரை

சிங்கப்பூரின் எதிர்காலச் சுற்றுச்சூழல் மேம்பாட்டை வழிநடத்துவதற்கான நகரச் சீரமைப்பு ஆணையத்தின் நீண்டகாலத் திட்ட மறுஆய்வைத் திரு லிம் எங் ஹ்வீ வழிநடத்தினார். ஜூரோங் லேக் வட்டாரம், ரயில் பாதை ஆகியவற்றுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை வழிநடத்தியதன்மூலம், சிங்கப்பூரை ஒரு துடிப்பான, நீடித்த நிலைத்தன்மை மிக்க, உளமார்ந்த நகரமாக நிலைநிறுத்த அவர் துணைபுரிந்தார். மேலும், கொவிட்-19 பெருந்தொற்றின்போது, தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, நகரச் சீரமைப்பு ஆணையத்தைத் திரு லிம் வழிநடத்தினார். முக்கியச் சுகாதாரப் பராமரிப்பு, தங்குமிட வசதிகளை அடையாளம் காணுதல், சுற்றுலாத்துறையின் மீட்சி தொடர்பில் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவை அவற்றுள் அடங்கும்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


20. திரு கென்னத் எர் பூன் ஹுவீ
துணைச் செயலாளர் (திட்டமிடல்),
தேசிய வளர்ச்சி அமைச்சு
முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி,
தேசியப் பூங்காக் கழகம்

புகழுரை

தேசியப் பூங்காக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரு கென்னத் எர் பூன் ஹுவீ, சிங்கப்பூர் இயற்கையில் ஒரு நகரமாக உருமாறுவதற்கு வழிவகுத்துள்ளார். இயற்கைப் பூங்காக் கட்டமைப்புகளின் உருவாக்கம், தீவு முழுவதும் இயற்கை வழித்தடங்களின் மேம்பாடு ஆகியவற்றின்மூலம், இயற்கை வனப்பகுதிகளின் பாதுகாப்பை அவர் மேம்படுத்தினார். இயற்கையுடன் இணைந்து வாழும் நமது அனுபவத்தை மேம்படுத்த அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை அவர் ஊக்குவித்தார். அவர், மரம் – விலங்கு நிர்வாக முறைமைகளை வலுப்படுத்தினார்; மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைக் களைந்தார்; நமது சுற்றுச்சூழலில் சமூகம் பெருமிதம் கொள்ளச் செய்தார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


21. திரு டெனிஸ் டெங் சியூ டேங்
இயக்குநர்,
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு,
பிரதமர் அலுவலகம்

புகழுரை

திரு டெனிஸ் டெங் சியூ டேங், சிங்கப்பூரின் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவை மின்னிலக்க, அறிவுசார் அமைப்பாக உருமாற்றி, அதன் செயல்பாட்டுத் திறன்களையும் எதிர்கால ஆயத்தநிலையையும் மேம்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். தனியார் துறையுடன் பங்காளித்துவத்தை வலுப்படுத்தியதுடன், அவர் வெளிநாட்டு ஊழல் தடுப்பு அமைப்புகளுடனும் ஒத்துழைப்பை வளர்த்துக்கொண்டார். அவரது தலைமைத்துவத்தின்கீழ், சிங்கப்பூரின் ஊழல் நிலவரம் கட்டுக்குள் இருந்துள்ளது; சிங்கப்பூர் அனைத்துலக அரங்கில் தமது ஊழல் தடுப்பு முயற்சிகளுக்காக நன்மதிப்பைப் பெற்றுள்ளது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)


22. திரு கொக் பிங் சூன்
முன்னாள் தலைமை நிர்வாகி,
அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு

புகழுரை

சிங்கப்பூரின் ‘அறிவார்ந்த தேசம்’ தொடர்பிலான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முக்கியப் பொறியல் அமைப்பாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்குவதில் திரு கொக் பிங் சூன் முக்கியப் பங்காற்றியுள்ளார். மின்னிலக்க அரசாங்கத்திற்கான வரைவுத்திட்டத்தின் அமலாக்கத்தை அவர் வழிநடத்தினார். மேலும், சிங்கப்பூர் அரசாங்கத்திற்கான தொழில்நுட்ப மென்பொருள்கள், உள்கட்டமைப்புகள் (Singapore Government Tech Stack), மேகக் கணிமச் சேவை வழங்குநர்களுடனான அரசாங்கப் பங்காளித்துவம் (Government Commercial Cloud), அரசாங்க இணையப்பாதுகாப்புச் செயல்பாட்டு நிலையம், கொவிட்-19 பெருந்தொற்றுச் சமயத்தில் வெளிவந்த மின்னிலக்கத் தீர்வுகள் (எ.கா. TraceTogether, SafeEntry) போன்ற முக்கியத் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்திற்கும் அறிவார்ந்த கட்டமைப்புகளுக்கும் தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சிகளைத் திரு கொக் வழிநடத்தினார். அவருடைய தலைமைத்துவத்தின்கீழ் அரசாங்க மின்னிலக்கச் சேவைகள் குறித்த குடிமக்கள், தொழில்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் திருப்திநிலை கணிசமாக முன்னேறியது.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை)


23. வைஸ் அட்மிரல் ஆரோன் பெங் யாவ் செங்
தற்காப்புப் படைத் தலைவர்,
சிங்கப்பூர் ஆயுதப்படை

புகழுரை

கடற்படைத் தலைவராக, வைஸ் அட்மிரல் ஆரோன் பெங் யாவ் செங் நமது கடற்படையின் உத்திபூர்வ மறுவடிவமைப்பை வழிநடத்தி, அதன் செயல்பாட்டுத் திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்தினார்; அதன் அடையாளத்தையும் விழுமியங்களையும் வலுப்படுத்தினார். கொவிட்-19 பெருந்தொற்றின்போது, சிங்கப்பூரின் முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதைகளும் தொடர்புகளும் தொடர்ந்து பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ளப்படவேண்டி, வைஸ் அட்மிரல் பெங் கடற்படையை வழிநடத்தினார். பன்னாட்டுத் தளங்கள், தொழில் நிபுணத்துவப் பரிமாற்றங்கள், கடற்படைப் பயிற்சிகள் ஆகியவற்றின்மூலம் பல பங்காளி நாடுகளுடன் தற்காப்பு உறவுகளையும் ஒத்துழைப்புகளையும் அவர் வலுப்படுத்தினார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை)


24. மேஜர் ஜெனரல் டேவிட் நியோ சின் வீ
ராணுவத் தலைவர்,
சிங்கப்பூர் ராணுவம்

புகழுரை

ராணுவத் தலைவராக மேஜர் ஜெனரல் டேவிட் நியோ சின் வீ, ராணுவத்தை உயரிய செயல்பாட்டு நிலையில் கட்டிக்காத்து, அதன் திறனாற்றல்களை விரிவுபடுத்தியுள்ளார். மேலும், மற்ற அரசாங்க அமைப்புகளுடன் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த கணினிக் கட்டமைப்புத் தகவல் பறிமாற்றத்தையும் அவர் மேம்படுத்தியுள்ளார். மேஜர் ஜெனரல் நியோ, ராணுவம் 2040 உருமாற்ற முயற்சிகளையும் தலைமையேற்று வழிநடத்தினார். சேவைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் ராணுவம் 2040 கைகொடுத்தது. கூட்டுச் செயல்பாட்டுத் துறையின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்த மேஜர் ஜெனரல் நியோ, தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பு முயற்சிகளுக்கு ஆயுதப்படையின் ஆதரவை உறுதிப்படுத்தினார். அதேவேளையில், சிங்கப்பூர் ஆயுதப்படையின் பயிற்சிகளும் செயல்பாடும் சீராக நடைபெறுவதை அவர் உறுதிசெய்தார்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (பதக்கப் பட்டை)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (படைத்துறை)


புகழுரை

கொள்கை உருவாக்கத்திற்கும் அமலாக்கத்திற்கும் இடையிலான தொடர்பு, அரசு நிர்வாகத்தில் மிக முக்கியமான கூறு. பொதுச் சேவைத் துறையில் உள்ள நடுத்தர மேலாளர்கள், கொள்கைகளைச் செயல்வடிவம் பெறச் செய்து, கிடைக்கப்பெறும் கருத்துகளைப் பயன்மிக்க பரிந்துரைகளாய் முன்வைக்கின்றனர். விடாமுயற்சி, கற்பனைத்திறன், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுடன் செயல்பட்டு, தன்னிகரற்ற சாதனைகள் நிகழ்த்திய அத்தகையோர், இன்று, பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) வழங்கப்பெற்றுக் கெளரவிக்கப்படுகின்றனர்.


THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (பதக்கப் பட்டை)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்)



THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (படைத்துறை)


புகழுரை

மிகச் சிறந்த அரசாங்கக் கொள்கைகள்கூட பிறழலாம் – அவற்றை அமல்படுத்தும் அரசு அதிகாரிகள் இடரும்போது. பயமோ பாரபட்சமோ இன்றி, தங்களால் இயன்ற மிகச் சிறந்த சேவையை நொடிதோறும் வழங்கிவரும், அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த பொதுச் சேவை ஊழியர்கள், இன்று, பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) வழங்கப்பெற்றுக் கெளரவிக்கப்படுகின்றனர்.

TOP