2021 National Day Awards Investiture Citations (Tamil)
THE ORDER OF NILA UTAMA (WITH DISTINCTION)
நீல உத்தம விருது (தனிச்சிறப்புடன்)
1. திரு பீட்டர் சியா லிம் ஹுவாட்
தலைவர், ஹுவாட் டி.பி.எஸ் வங்கிக் குழுமம் & டி.பி.எஸ் வங்கி
தலைவர், லசால் கலைக் கல்லூரி
தலைவர், தேசிய சம்பள மன்றம்
தலைவர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
உறுப்பினர், அதிபர் ஆலோசகர் மன்றம்
புகழுரை
திரு பீட்டர் சியா லிம் ஹுவாட், தேசிய சம்பள மன்றம், டி.பி.எஸ் வங்கிக் குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லசால் கலைக் கல்லூரி ஆகியவற்றின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். அவர் அதிபர் ஆலோசகர் மன்றத்தில் உறுப்பினராகவும், அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இயக்குநராகவும் இருந்து வருகிறார். முன்னதாக, அவர் சிங்கப்பூர்ச் சுகாதாரச் சேவைகளின் (சிங்ஹெல்த்) தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
2009-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை, திரு சியா, சிங்ஹெல்த் குழுமத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது அவர், சிங்ஹெல்த் குழுமத்தின் சேவைகள் பெரிதளவில் விரிவாக்கம் கண்டதை மேற்பார்வையிட்டார். அவரது மேற்பார்வையின்கீழ், சிங்ஹெல்த் குழுமம் மருத்துவக் கல்வி நிலையமாகவும், வட்டாரச் சுகாதாரக் கட்டமைப்பாகவும் மேம்பாடு கண்டது. இதனால், சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான, எளிதில் கிடைக்கக்கூடிய, தரமான சுகாதாரப் பராமரிப்பு கிடைக்கப்பெற்றது.
2015-ஆம் ஆண்டு முதல், திரு சியாவின் தலைமைத்துவத்தின்கீழ் இயங்கிவரும் தேசிய சம்பள மன்றம், உற்பத்தித் திறன் அடிப்படையிலான சம்பள அதிகரிப்பு, நீக்குப்போக்கான சம்பள அமைப்புமுறை, குறைந்த வருமான ஊழியர்களின் மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுத்தது. அதோடு, கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது, தொழில்கள் நிலைத்திருக்கவும், வேலைகள் பாதுகாக்கப்படவும், முதலாளிகளுக்கு மிக முக்கியமான வழிகாட்டுதலை மன்றம் வழங்கியது.
டி.பி.எஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மின்னிலக்கப் புத்தாக்கத்திற்கு உருமாறியதையும் திரு சியா மேற்பார்வையிட்டார். அதன்மூலம், டி.பி.எஸ், “உலகின் ஆகச் சிறந்த வங்கி” என்ற பெயரைப் பெற்றது. அவரது தலைமைத்துவத்தின்கீழ், லசால் கலைக் கல்லூரி, கலைகளுக்கான உயர்கல்வி நிலையமாக அனைத்துலக அளவில் நன்மதிப்பு பெற்று திகழ்கிறது.
திரு சியா, தொழில் சார்ந்த தமது நுண்ணறிவையும், ஆற்றல்களையும், பொது, தனியார் துறைகளில் தாம் ஆற்றிய பல்வேறு பணிகளில் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய சம்பள மன்றம், அதிபர் ஆலோசகர் மன்றம், அரசாங்க முதலீட்டு நிறுவனம் ஆகியவற்றோடு, சுகாதாரப் பராமரிப்பு, நிதி, விமானத் துறை, கல்வி எனப் பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய மிகச் சிறப்பான பங்களிப்புகளின் பேரில், திரு பீட்டர் சியா லிம் ஹுவாட் அவர்களுக்கு நீல உத்தம விருது (தனிச்சிறப்புடன்) வழங்கப்படுகிறது.
THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது
2. திரு. பென்னி லிம் சியாங் ஹோ
தலைவர், தேசிய பூங்காக் கழகம்
புகழுரை
திரு. பென்னி லிம், பொதுச் சேவையில் சிறப்புமிக்க வாழ்க்கைத்தொழிலைக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் அவர் முக்கியத் தலைமைத்துவப் பதவிகளை வகித்துள்ளார். ஆனால், அவர் வகித்த பதவிகளின் பட்டியலை மட்டும் கொண்டு அவர் சிங்கப்பூருக்கு ஆற்றிய அளப்பரிய பங்கினை அளந்து ஆராய இயலாது. அவரின் நடைமுறைகேற்ற மதிநுட்பம், தனித்துவம் வாய்ந்த அணுகுமுறை, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வுகாணும் திறமை ஆகியவை பல கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் செறிவூட்டி, எண்ணிலடங்கா பொதுச் சேவை ஊழியர்களின் வாழ்க்கைக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளன.
தம் வாழ்க்கைத்தொழிலின் பெரும் பகுதியை உள்துறைக் குழுவில் கழித்த திரு லிம், பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் காவல்துறையில் சேர்ந்தார். ஒரு கான்ஸ்டபலாக (Constable) வேலையைத் தொடங்கி, பின்னர் படிப்படியாக உயர்ந்து, உள்துறை அமைச்சில் நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இத்தகைய முன்னேற்றம் மிகுந்த ஒற்றைப் பாதையை திரு. லிம் அவர்களுக்கு முன்னரோ பின்னரோ எவரும் பின்பற்றியதில்லை. அவர், மேலும் வலுவான ஒருமித்த உள்துறைக் குழுவை வளர்க்கத் துணைபுரிந்தார்; உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தை நிறுவினார்; சமய மறுவாழ்வுக் குழு, எஸ்ஜி பாதுகாப்புத் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்த சமூக ஈடுபாட்டுத் திட்டம் போன்ற பயங்கரவாத்திற்கு எதிரான திட்டங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். சமூகத் தலைவர்களுடன் அயராது பணியாற்றிய அவர், சமயங்களுக்கு இடையிலான திட்டங்களை முனைப்புடன் ஆதரித்தார். செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்புக்கான திறனாற்றல்களையும் சமுதாய மீள்திறனையும் மேம்படுத்துவதில் அவர் பெரும் பங்கு வகித்தார்.
பிரதமர் அலுவலகத்தில், பொதுமக்களை ஈடுபடுத்தும் “நமது சிங்கப்பூர்க் கலந்துரையாடல்” போன்ற முயற்சிகளையும் தேசிய பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் திட்டங்களையும் திரு லிம் வழிநடத்தினார். தேசிய வளர்ச்சி அமைச்சில், துடிப்புமிக்க வாழ்க்கை சூழல்களை உருவாக்கும் பணியில், இணக்கம் மிகுந்த சமூகங்களை உருவாக்குவதிலும், குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதிலும் அமைச்சு கவனம் செலுத்துவதை அவர் உறுதிசெய்தார். பொதுச் சேவையிலிருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர், 2018-இல் அவர் தேசிய பூங்காக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு சிங்கப்பூரை “இயற்கையில் நகரமாக” உருமாற்றும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் பணியை அவர் தொடர்கிறார்.
சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் திரு லிம் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பின் பேரில், அவருக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.
THE DISTINGUISHED SERVICE ORDER
சிறப்புப் பணி விருது
3. திரு ரிச்சர்ட் மெக்னஸ்
தலைவர், பொதுப் போக்குவரத்து மன்றம்
புகழுரை
திரு ரிச்சர்ட் மெக்னஸ், சிங்கப்பூர்ச் சட்டத்துறையில் தனிச்சிறப்புமிக்க வாழ்க்கைத்தொழிலைக் கொண்டு, தலைமை மாவட்ட நீதிபதியாகப் பணி ஓய்வு பெற்றார். அதற்கு முன்னரும் பின்னரும், அவர் பொதுச் சேவைக்குப் பலதரப்பட்ட வழிகளில் குறிப்பிடத்தக்க சேவையாற்றியுள்ளார்.
திரு மெக்னஸ், தெமாசெக் கேர்ஸ் அமைப்பை நிறுவிய தலைவர்; தெமாசெக் அறநிறுவனத்தின் துணைத் தலைவர். இப்பொறுப்புகளின் வாயிலாக, 62,000-க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அவர் வழிநடத்தியுள்ளார்; சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடையக்கூடிய கொவிட் சார்ந்த திட்டங்களையும் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
பொதுப் போக்குவரத்து மன்றத்தின் தலைவராக, 2016-ஆம் ஆண்டில் மன்றத்தின் மறுசீரமைப்பை திரு மெக்னஸ் வழிநடத்தினார். அவர், கட்டண நிர்ணயிப்புக்கான முறைமைகள் குறித்த முக்கிய மறுஆய்வை வழிநடத்தினார்; பொதுப் போக்குவரத்துச் சலுகைத் திட்டங்களையும் விரிவுபடுத்தினார். மேலும் பரிவுமிக்க பயணச் சூழலை ஊக்குவிக்கும் பல அமைப்புகளுக்கு இடையிலான குழுவிற்கும் அவர் தலைமை வகிக்கிறார்.
திரு மெக்னஸ் உயிரியல் சார்ந்த நன்னெறிக் கோட்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவிற்குத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். மேலும், ஆசியான் நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான மனித உரிமை குறித்த ஆணையத்திற்கான சிங்கப்பூரின் முதல் பிரதிநிதியாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், யுனெஸ்கோ (UNESCO) அனைத்துலக உயிரியல்-நன்னெறிக் கோட்பாடுகளுக்கான ஆய்வுக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் சிங்கப்பூரராகவும் திரு மெக்னஸ் திகழ்கிறார்.
சூதாட்டக் கூடக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முதல் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு மெக்னஸ், ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களின் மதிப்பீட்டுக் குழுவில் தொடர்ந்து சேவையாற்றுகிறார். பொதுக் காப்பாளர் வாரியக் குழுவின் முதல் தலைவராகவும், 2009-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை பொதுச் சேவை ஆணைய உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
2018-ஆம் ஆண்டில் நடந்த சிங்ஹெல்த் இணையவெளித் தாக்குதல் தொடர்பிலான விசாரணைக் குழுவின் தலைவராகவும் திரு மெக்னஸ் திறம்பட செயலாற்றினார். இணையவெளித் தாக்குதல்களுக்கு எதிராகச் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் மீள்திறன் வலுப்படுத்தப்படுவதற்கான பரிந்துரைகளையும் அவர் தலைமையிலான குழு முன்வைத்தது.
சிங்கப்பூருக்கு அவர் ஆற்றிய விரிவான, பன்முகத்தன்மை வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு ரிச்சர்ட் மெக்னஸ் அவர்களுக்குச் சிறப்புப் பணி விருது வழங்கப்படுகிறது.
THE MERITORIOUS SERVICE MEDAL
பாராட்டுப் பணிப் பதக்கம்
4. திருமதி சாந்தா பாஸ்கர்
கலை இயக்குநர், பாஸ்கர் கலைக் கழகம்
புகழுரை
திருமதி சாந்தா பாஸ்கர் மிகவும் மதிக்கப்படும் ஒரு நடனக் கலைஞர். நீண்டகாலமாகப் பாஸ்கர் கலைக் கழகத்தின் கலை இயக்குநராகச் செயல்பட்டு வரும் இவர், நிருத்யாலயா கவின் கழகத்தின் ஆலோசகராகவும் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலைகள் நிலையத்தின் இந்திய நடனத்திற்கான உறைவிட நடன அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். திருமதி பாஸ்கர் தமது படைப்புகளில் பல்வேறு கலாசார அம்சங்களைப் பயன்படுத்துவதற்காக நன்கு அறியப்படுவார். நமது நாட்டின் கலை மரபுடைமையை வளப்படுத்துவதற்கு அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
திருமதி பாஸ்கருக்குக் கலாசாரப் பதக்க விருதும் (1990) பொதுப் பணிச் சிறப்புப் பதக்கமும் வழங்கப்படுள்ளன. அண்மையில், சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றத்தின் சிங்கப்பூருக்கான தலைசிறந்த சாதனையாளர் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார். தற்போது, தேசிய மரபுடைமைக் கழகத்தின் தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமை விருதுக்கான குழு உறுப்பினராக திருமதி பாஸ்கர் விளங்குகிறார்.
கலைகளில் பல கலாசாரக் கூறுகளை வெளிப்படுத்துவதை மிகுதியாக ஆதரித்து, ஒரு கலைஞராகவும் கல்வியாளராகவும் சிங்கப்பூரில் இந்திய நடனத்திற்குத் தன்னிகரற்ற வகையில் பங்காற்றியதன் பேரில், திருமதி பாஸ்கருக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.
THE MERITORIOUS SERVICE MEDAL (MILITARY)
பாராட்டுப் பணிப் பதக்கம் (இராணுவம்)
5. லெப்டினண்ட் ஜெனரல் மெல்வின் ஓங் சு கியாட், PPA(E), PPA(P), PBS
தற்காப்புப் படைத் தலைவர்
சிங்கப்பூர் ஆயுதப்படை
புகழுரை
லெப்டினண்ட் ஜெனரல் மெல்வின் ஓங் சு கியாட் தமது இராணுவப் பணிக்காலம் முழுவதும் ஒரு முன்மாதிரித் தலைவராகத் திகழ்ந்துள்ளார். தற்காப்புப் படைத் தலைவராக, சிங்கப்பூர் ஆயுதப் படை உயரிய செயல்பாட்டு நிலையை அடையும் பொருட்டு, அதனை வழிநடத்தினார். அவரது தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூரின் அரசுரிமையைப் பாதுகாக்க பல்வேறு பாதுகாப்புப் பயிற்சிகளை இடைவிடாமல் நடத்தியது; சிங்கப்பூரின் தற்காப்பு ஆற்றல்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் தொழில்நுட்ப மேம்பாடுகளையும் மேற்கொண்டது. சிங்கப்பூர் ஆயுதப்படை புதிய, மேம்பட்ட போர்முறை உத்திகளையும், மனிதவளங்களை மேலும் செயல்திறன் மிக்க வகையில் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் உரிய முறைமைகளையும், நீடித்த நிலைத்தன்மைமிக்க வளர்ச்சியையும் பின்பற்றும் வேளையில், அதன் உருமாற்றத்திற்கான உத்திமுறைகளை லெப்டினண்ட் ஜெனரல் ஓங் முறையாக வகுத்திட்டார். வெளிநாட்டு இராணுவங்களுடன் நல்ல தற்காப்பு உறவுகளை வளர்ப்பதிலும், சிங்கப்பூர் ஆயுதப்படையின் அனைத்துலக நிலையை உயர்த்துவதிலும், அதனை மதிக்கத்தக்க தற்காப்புப் பங்காளியாக வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் நிலைநாட்டுவதிலும் லெப்டினண்ட் ஜெனரல் ஓங் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
THE PUBLIC SERVICE STAR (BAR)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை)
THE PUBLIC SERVICE STAR
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம்
புகழுரை
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (பதக்கப் பட்டை), பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் ஆகியன, சக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பங்களித்தவர்களுக்கு வழங்கப்பெறுகின்றன. அவர்கள் தங்கள் சமூகத்தின்மீது பரிவு கொண்டு, தங்கள் பொதுச் சேவையின்வழி சிங்கப்பூரை மேலும் மேம்பட்டதொரு சமுதாயமாக உருமாற்றத் துணைபுரிந்துள்ளனர்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (பதக்கப் பட்டை)
6. திரு கிளேரன்ஸ் இயோ கெக் லியோங்
மூத்த ஆலோசகர் (சிறப்புப் பணிகள்)
உள்துறை அமைச்சு
புகழுரை
திரு கிளேரன்ஸ் இயோ 41 ஆண்டுகள் அரசாங்கச் சேவையில் பணியாற்றியுள்ளார். அவற்றில் 31 ஆண்டுகள், அவர் உள்துறை அமைச்சில் இருந்தார். குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் ஆணையராகப் பணியாற்றிய அவர், அந்த அமைப்பின் உருமாற்றப் பணிகளுக்கு வித்திட்டார். எல்லைப் பாதுகாப்பு, பயணிகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றுக்குப் புத்தாக்கமிக்க தொழில்நுட்பத் தீர்வுகளையும், குடிநுழைவு வசதிகளுக்கு விண்ணப்பிக்க, பொதுமக்களுக்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடிய மின்னியல் தளங்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். உள்துறைக் குழுப் பயிற்சிக் கழகத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றிய அவர், அதனை உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான முன்னணிப் பயிற்சிக் கழகமாக உருமாற்றத் துணைபுரிந்தார்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (பதக்கப் பட்டை)
7. திரு ஓங் சொங் டீ
முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் (நிதி மேற்பார்வை)
சிங்கப்பூர் நாணய ஆணையம்
புகழுரை
திரு ஓங் சொங் டீ, சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் வலுவான கடப்பாட்டையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். துணை நிர்வாக இயக்குநராக, அவர் ஆணையத்தின் பல்வேறு முக்கியப் பணிகளை மேற்பார்வையிட்டார். ஆணையத்தின் நிதியிருப்புத் தொகுப்பின் நிர்வாகம், நிதிக் கொள்கைகளின் செயல்பாடு, நிதித் துறையின் மேம்பாடு ஆகியவற்றை அவர் மேற்பார்வையிட்டார். சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிதி மேற்பார்வை பிரிவுக்கும் அவர் தலைமை வகித்தார். மின்னிலக்க வங்கி உரிமங்களின் அறிமுகத்தை அவர் மேற்பார்வையிட்டார். மேலும், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், இணையப் பாதுகாப்பு, கட்டணச் சேவைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய அபாயங்களின் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அவர் துணை நின்றார். அனைத்துலகக் கட்டுப்பாட்டுக் கருத்தரங்குகள் பலவற்றிலும் அவர் துடிப்புமிக்க வகையில் பங்காற்றினார்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
8. திருவாட்டி டேஃபனி ஹொங் ஃபான் சின்
தலைமை இயக்குநர்
அனைத்துலக விவகாரப் பிரிவு
அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம்
புகழுரை
அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் அனைத்துலக விவகாரப் பிரிவின் தலைமை இயக்குநராக, திருவாட்டி டேஃபனி ஹொங் வெளிநாடுகளுடனான சிங்கப்பூரின் உறவுமுறை சார்ந்த முக்கியமான சட்ட விவகாரங்களுக்குக் கணிசமான வகையில் பங்காற்றியுள்ளார். சிங்கப்பூருக்கு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துலகச் சட்ட விவகாரங்கள் பலவற்றில் ஆலோசனை வழங்கியுள்ள அவர், பெட்ரா பிராங்கா உள்ளிட்ட முக்கியமான அனைத்துலகப் பேச்சுவார்த்தைகளிலும் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணும் முனைப்புகளிலும் உறுதுணையாக இருந்துள்ளார். அனைத்துலகச் சட்டத்தில் வளர்ந்துவரும் பிரிவுகளில் ஆற்றலைப் பெருக்குவதுடன், அடுத்த தலைமுறை அனைத்துலக வழக்குரைஞர்களை உருவாக்குவதிலும் அவர் முனைப்பு காட்டியுள்ளார்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
9. திரு சாந்தா மரியா கெவின் ஜான்
இயக்குநர்
தற்காப்பு அமைச்சு
புகழுரை
திரு கெவின் சாந்தா மரியாவின் தன்னிகரற்ற தலைமைத்துவம், தற்காப்பு அமைச்சின் உருமாற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் முக்கியப் பங்காற்றியுள்ளது. செயல்பாடுகள், திட்டமிடுதல், இடர் நிர்வாகம், கொள்கை உருவாக்கம், மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளை அடிப்படை முறைமைகளில் வலுப்படுத்தும் வகையில் வழிநடத்தி வந்துள்ளார். தற்காப்பு அமைச்சு தமது இலக்கை செயல்திறம் வாய்ந்த முறையில் நிறைவேற்ற உறுதிசெய்யும் வகையில் அமையப்பெற்ற அவரது பங்களிப்புகளின் பேரில், திரு கெவின் சாந்தா மரியாவிற்குப் பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) வழங்கப்படுகிறது.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
10. பேராசிரியர் சொங் தாவ் சொங்
தலைவர்
சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம்
கல்வி அமைச்சு
புகழுரை
பேராசிரியர் சொங் தாவ் சொங் சிங்கப்பூரின் உயர்கல்வி, ஆய்வு நிலையங்களை நிர்மாணிப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஏப்ரல் 2018 முதல் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அவர், முன்னதாக 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையில், அப்பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராகத் திகழ்ந்து வந்தார். அவரது வலுவான தலைமைத்துவத்தின்கீழ், சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் 12 ஆண்டுக்குள் அனைத்துலக அளவில் நன்மதிப்புடைய பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
11. பேராசிரியர் ஃபொங் கொக் யொங்
குழுமத் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி
மருத்துவ & நோயாளி பராமரிப்புச் சேவைகள்
சிங்கப்பூர்ச் சுகாதாரச் சேவைகள்
மூத்த ஆலோசகர், முடக்குயியல் & தடுப்பாற்றலியல்
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை
சுகாதார அமைச்சு
புகழுரை
சிங்கப்பூர்ச் சுகாதாரச் சேவைகளின் (சிங்ஹெல்த்) குழுமத் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாக, பேராசிரியர் ஃபொங், சிங்ஹெல்த் நிறுவனத்தையும் சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரப் பராமரிப்பையும் மேலும் உயரிய நிலைக்குக் கொண்டுசெல்வதில் முன்மாதிரியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவராகவும் கல்வியாளராகவும் போற்றப்படும் அவரது சாதனைகள், நோயாளிப் பராமரிப்பு உத்திகள், நடைமுறைகள் ஆகியவை தொட்டு பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் கொள்ளளவையும் பராமரிப்பு ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவது வரை உள்ளடக்கும். கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில், சமூகப் பராமரிப்பு வசதிகளின் செயல்பாட்டை மேற்பார்வையிட்ட அவர், தடுப்பூசிகள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவதற்கான மதிப்பீட்டிற்கும் பங்களித்தார். சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புக்கு அவர் ஆற்றிய உன்னதப் பங்களிப்புகளின் பேரில், பேராசிரியர் ஃபொங் கொக் யொங் அவர்களுக்கு ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) வழங்கப்படுகிறது.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
12. திரு ராஜ குமார் தம்பி ராஜா
மூத்த ஆலோசகர் (அனைத்துலகப் பிரிவு)
உள்துறை அமைச்சு
புகழுரை
திரு ராஜ குமார், 36 ஆண்டு உள்துறை அமைச்சில் சேவையாற்றியுள்ளார். சிங்கப்பூர்க் காவல்துறையின் துணை ஆணையராகப் பதவி வகித்த அவர், சிங்கப்பூர்க் காவல்துறை இன்று அதிகளவில் நன்மதிப்பு பெற்றிருப்பதற்குத் துணைபுரிந்தார். சூதாட்டக் கூடக் கட்டுப்பாட்டு ஆணையத்தை நிறுவிய அவர், அதன் முதல் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். உள்துறை அமைச்சின் துணைச் செயலாளராக, அமைச்சின் அனைத்துலகக் கட்டமைப்புகளை வலுப்படுத்திய அவர், எல்லை தாண்டிய குற்றச்செயல்கள், போதைப்பொருட்கள் முதலான பிற விவகாரங்களில் சிங்கப்பூரின் அக்கறைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், உள்துறை அமைச்சின் அனைத்துலகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தினார்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
13. திரு ஹேரி சியா
துணைத் தலைமை நிர்வாகி (செயல்பாடுகள்)
தலைவர் / தலைமை நிர்வாகி அலுவலகம்
பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூரின் தேசிய தண்ணீர் அமைப்பு
புகழுரை
திரு ஹேரி சியா, சிங்கப்பூரின் நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளுக்குப் பெருமளவில் பங்களித்துள்ளார். துணைத் தலைமை நிர்வாகியாக (செயல்பாடுகள்), பொதுப் பயனீட்டுக் கழகத்தின் செயல்பாட்டுத் திறனையும் செயலாற்றலையும் உறுதிசெய்யும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளார். NEWater எனப்படும் புதுநீரை அறிமுகப்படுத்திய முன்னோடித் தலைவர்களில் திரு சியாவும் ஒருவர். அதன்பொருட்டு, நீர்த் தொழில்நுட்பம் சார்ந்த கழகத்தின் தொடர் ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளை வழிநடத்தினார், திரு சியா. புதுநீர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் வர்த்தகமயமாக்குவதற்கும், அவர் தொழில்துறை சார்ந்தவர்களைத் துடிப்புடன் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
14. திரு லீ சுவான் தெக்
நிரந்தரச் செயலாளர் (மேம்பாடு)
வர்த்தக, தொழில்துறை அமைச்சு
புகழுரை
வர்த்தக, தொழில்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளராக (மேம்பாடு), புதிய பொருளாதார நடவடிக்கைகள், சிங்கப்பூரில் உள்ள தொழில்நிறுவனங்கள், சுற்றுப்பயணத் துறை, பயனீட்டுத் துறை, போட்டித்தன்மை – பயனீட்டாளர் சார்ந்த விவகாரங்கள் ஆகியவற்றை திரு லீ சுவான் தெக் மேற்பார்வையிடுகிறார். அனைத்துலக வர்த்தக அரங்கில், சிங்கப்பூர் நிறுவனங்களுக்கான புதிய சந்தைகளைக் கண்டறிவதில் அவர் கவனம் செலுத்திவருகிறார். முன்னதாக, போக்குவரத்து அமைச்சின் துணைச் செயலாளராகப் (நிலம் & நிறுவனம்) பொறுப்பு வகித்த திரு லீ, பொதுப் பேருந்து – இரயில் துறையின் மறுசீரமைப்புக்குத் தலைமை தாங்கினார்; சிங்கப்பூரில் ஓட்டுநரில்லா வாகனங்களின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை வழிநடத்தினார்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
15. திருவாட்டி ஒங் தூன் ஹுய்
துணைச் செயலாளர் (தலைமைத்துவம்)
பொதுச் சேவைப் பிரிவு
தலைவர்
அரசாங்கச் சேவைப் பயிற்சிக் கழகம்
புகழுரை
பொதுச் சேவைப் பிரிவின் துணைச் செயலாளராகவும் (தலைமைத்துவம்), அரசாங்கச் சேவைப் பயிற்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பு வகிக்கும் திருவாட்டி ஒங் தூன் ஹுய், பொதுச் சேவைப் பிரிவு, அரசாங்கச் சேவைப் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் உருமாற்றத்தை வழிநடத்துவதில் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். அரசாங்கச் சேவையில் தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்துவதற்கும் தலைமைத்துவத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் அவர் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளார். அரசாங்கச் சேவைப் பயிற்சிக் கழகத்தில், அரசாங்க அதிகாரிகளின் ஆற்றல்களை ஆழப்படுத்தி, அவர்களை எதிர்காலத்திற்கு ஆயத்தப்படுத்தும் திட்டங்களையும் திருவாட்டி ஓங் முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்)
16. திரு சான் சியாவ் ஹோ
துணைத் தலைமை நிர்வாகி
அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகம்
அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு
புகழுரை
அரசாங்கத் தலைமை மின்னிலக்கத் தொழில்நுட்ப அதிகாரியாகத் திகழும் திரு சான் சியாவ் ஹோ, அரசாங்கத்தின் தகவல்தொடர்புத் தொழில்நுட்பம், அறிவார்ந்த கட்டமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை வழிநடத்துகிறார். அதே வேளையில், அவர் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றுகிறார். மின்னிலக்கத் தொழில்நுட்பத்தில், பொதுத் துறையின் ஆற்றல்களை மறுநிர்மாணம் செய்வதற்கு அவர் துணைபுரிந்தார். அதன்மூலம், கொவிட்-19 சூழலில் உடனடி பதில்கள் கிடைக்கப்பெறவல்ல, குடிமக்களை மையமாகக் கொண்ட மின்னிலக்கச் சேவைகள் உருவாகியுள்ளன. உலகளவில் மின்னிலக்கமயமாதல் சார்ந்த அறிவாற்றல் அரசாங்கங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ளப்படுவதை முன்னிறுத்தி, அறிவார்ந்த தலைமைத்துவத்தையும் திரு சான் வெளிப்படுத்தினார்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (GOLD) (MILITARY)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (தங்கம்) (படைத்துறை)
17. மேஜர் ஜெனரல் கோ சி ஹாவ், PPA(G)
இராணுவத் தலைவர்
சிங்கப்பூர் ஆயுதப்படை
புகழுரை
மேஜர் ஜெனரல் கோ சி ஹாவ், சிங்கப்பூர் ஆயுதப் படையில் தமது பணிக்காலம் முழுவதும் முன்மாதிரியான தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தியுள்ளார். இராணுவத் தலைவராக, விரிவான செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், இராணுவப் படையின் திறனாற்றலை வலுப்படுத்தினார். மேலும், அடுத்த தலைமுறைக்கான இராணுவத்தின் உருமாற்றத் திட்டங்களை மேம்படுத்தும் முயற்சிகளையும் அவர் முன்னெடுத்துச் சென்றார். கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் இராணுவத்தின் ஆதரவை வழிநடத்தினார், மேஜர் ஜெனரல் கோ. அத்துடன், வெளிநாட்டு இராணுவத் தற்காப்புப் பங்காளிகளுடன் நல்ல தற்காப்பு உறவுகளைப் பேணிவளர்த்து, சிங்கப்பூர் ஆயுதப்படையின் நிலைப்பாட்டை இவ்வட்டாரத்திலும் அனைத்துலக அரங்கிலும் உயர்த்தினார்.THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (பதக்கப் பட்டை)
THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி)
THE PUBLIC ADMINISTRATION MEDAL (SILVER) (MILITARY)
ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) (படைத்துறை)
புகழுரை
பொது ஆட்சித்துறையில், கொள்கை உருவாக்கத்திற்கும் அமலாக்கத்திற்கும் இடையில் உள்ள முக்கியத் தொடர்பாக வீற்றிருப்பவர்கள், பொதுமக்களின் கண்களுக்குப் புலனாகாத நடுத்தர மேலாளர்கள். அவர்களின் தன்முனைப்பாற்றலும் அர்ப்பணிப்பு உணர்வும், அரசாங்க அமைப்புகளின் இலக்குகளை ஈடேற்றவும் ஆக உயரிய தரநிலைகளிலான பொதுச் சேவையை வழங்கவும் அரசு அதிகாரிகளை ஊக்குவிக்கின்றன. இத்தகுப் பணிகளைத் தனிச்சிறப்புடன் ஆற்றிய செயல்வீரர்கள், பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெள்ளி) வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர்.
THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (BAR)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (பதக்கப் பட்டை)
THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE)
பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்)
THE PUBLIC ADMINISTRATION MEDAL (BRONZE) (MILITARY)
ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) (படைத்துறை)
புகழுரை
அரசாங்கக் கொள்கைகள் எதுவாயினும், செயல்திறன்மிக்க முறையில் அமலாக்கம் காணும்போதே வாகை சூடுகின்றன. சமுதாயக் களங்களில் அத்தகுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் திறனாற்றலும் துணிவாற்றலும் கொண்டு அதிகாரிகள் செயல்படவேண்டும். அமலாக்கத்தில் நீக்குப்போக்கான அணுகுமுறையையும் புரிந்துணர்வு மிகுந்த வெளிப்பாட்டையும் கொண்டு, உன்னதமான தரநிலைகளில் எவ்விதத் தட்டுப்பாடுமின்றி அவர்கள் செயல்படவேண்டும். இத்தகு அதிகாரிகள் தாங்கள் ஆற்றிய சேவைகளின் பேரில், பொது ஆட்சித்துறைப் பதக்கம் (வெண்கலம்) வழங்கப்பெற்று கெளரவிக்கப்படுகின்றனர்.