National Awards (COVID-19) Investiture Citations (Tamil)


THE MERITORIOUS SERVICE MEDAL (COVID-19)
பாராட்டுப் பணிப் பதக்கம் (கொவிட்-19)


1. மாக் செக் வாய் கென்னத்
முன்னாள் இயக்குநர், மருத்துவச் சேவைகள்,
சுகாதார அமைச்சு

சுகாதாரப் பராமரிப்புத் தயார்நிலை ஊழியர் அணி

புகழுரை

அரசாங்கத்தின் தலைமை மருத்துவ ஆலோசகராக, பேராசிரியர் மாக் செக் வாய் கென்னத் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் சீரிய ஆலோசனை வழங்கினார். பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டங்களில் நம்பகமான, நன்கு அறிமுகமான ஒருவராக அவர் விளங்கினார். அவரது நிபுணத்துவத் திறனும் நிலை தடுமாறாத, நிதானமான இயல்பும் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்து, அரசாங்கம் கிருமிப்பரவலைக் கையாளும் முறையில் நம்பிக்கையை வலுப்படுத்தியது.

மருத்துவச் சேவைகள் இயக்குநராக, பேராசிரியர் மாக் கொவிட்-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். அதோடு, கிருமிப்பரவலைக் கையாளுவதற்கான சிங்கப்பூரின் பொதுச் சுகாதார உத்திமுறைகளை வகுப்பதற்கும் சுகாதார அமைச்சின் அவசரகாலப் பணிக்குழுவை உடன் இணைந்து வழிநடத்தினார். தேசிய தடுப்பூசித் திட்டம், மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் அளிக்கப்பட்ட மருத்துவ நடைமுறையும் செயலாக்க வழிகாட்டுதலும், பொதுமக்களுக்கான சுகாதார நடைமுறைகள் ஆகியவை அவற்றுள் அடங்கும். ஆக முக்கியமாக, சுகாதாரப் பராமரிப்பு வசதிகள், துணை வசதிகள் ஆகியவற்றின் விரிவாக்கத்தை பேராசிரியர் மாக் மேற்பார்வையிட்டார்.

கொவிட்-19 கிருமிப்பரவலை சிங்கப்பூர் வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கு ஆற்றிய அளப்பரியப் பங்களிப்புகளின் பேரில், பேராசிரியர் மாக் செக் வாய் கென்னத் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் (கொவிட்-19) வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL (COVID-19)
பாராட்டுப் பணிப் பதக்கம் (கொவிட்-19)


2. பாங் கின் கியோங்
நிரந்தரச் செயலாளர்,
உள்துறை அமைச்சு

தலைவர்,
உள்நாட்டு நெருக்கடிநிலை நிர்வாகக் குழு

புகழுரை

உள்நாட்டு நெருக்கடிநிலை நிர்வாகக் குழுவின் தலைவராக, திரு பாங் கின் கியோங் கொவிட்-19 நெருக்கடிநிலையைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டை வழிநடத்தினார். அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழுவின் அரசியல் தலைமைத்துவத்திற்கும் ஒட்டுமொத்த அரசாங்கச் சேவைக்கும் அவர் உறுதுணையாக விளங்கினார். சிரமமான சூழலிலும்கூட, அவருடைய தலைமைத்துவம் கனிவாக மிளிர்ந்தது. கிருமிப்பரவலுக்கான ஒட்டுமொத்தச் சமுதாய அளவிலான நடவடிக்கைகளைச் செயல்படுத்த, அவர் பொதுத் துறையில் பல்வேறு அமைப்புகளை ஒன்றுதிரட்டியதுடன், தனியார், மக்கள் துறைகளைச் சேர்ந்த பங்காளிகளையும் உடன் இணைத்துக்கொண்டார்.

பொதுச் சேவைத் துறையால், நெருக்கடிநிலையில் தேசமாக எதிர்நோக்கவிருந்த பற்பல சவால்களை முன்கூட்டியே கணித்து, சிக்கல்கள் நிரம்பிய மிரட்டல்களைத் துரிதமாக எதிர்கொண்டு, கிருமிப்பரவலின் வெவ்வேறு கட்டங்களுக்கான செயல்திட்டங்களை வகுத்து, கொவிட்-19 கிருமிப்பரவலின் எதிர்பாராத் திருப்பங்கள் பலவற்றைத் திறம்படக் கையாண்டதற்குத் திரு பாங்கின் ஊக்கமளிக்கும் தலைமைத்துவம் ஒரு முக்கிய காரணம்.

சிங்கப்பூர், கொவிட்-19 கிருமிப்பரவலை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புகளின் பேரில், திரு பாங் கின் கியோங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் (கொவிட்-19) வழங்கப்படுகிறது.


THE MERITORIOUS SERVICE MEDAL (COVID-19)
பாராட்டுப் பணிப் பதக்கம் (கொவிட்-19)


3. டான் சொங் மெங்
தலைவர்,
சமூகப் பராமரிப்பு வசதிகள் பணிக்குழு,
தெமாசெக் கொவிட்-19 பணிக்குழு

குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி,
PSA அனைத்துலக நிறுவனம்

புகழுரை

PSA அனைத்துலக நிறுவனத்தின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாக, திரு டான் சொங் மெங் கொவிட்-19 கிருமிப்பரவலால் உலகிலும் உள்நாட்டிலும் ஏற்பட்ட பற்பல இடையூறுகளைச் சிங்கப்பூரின் விநியோகத் தொடர்கள் எதிர்கொள்ள உறுதிசெய்வதில் முக்கியப் பங்காற்றினார்.

விநியோகத் தொடர்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதை உறுதிசெய்ய, PSA நிறுவனத்தின் சரக்கு நடைமுறைகளை அவர் சீரமைத்தார். அதோடு, கிருமிப்பரவல் தொடங்கிய காலக்கட்டத்தில் பல்வேறு அவசரகால மருத்துவ வசதிகள் அமைக்கப்படுவதையும் அவர் வழிநடத்தினார். சாங்கி எக்ஸ்போவில் அமைக்கப்பட்ட சமூகப் பராமரிப்பு வசதி, தஞ்சோங் பகார் முனையத்தில் அமைக்கப்பட்ட மிதக்கும் தங்குமிடக் கப்பல்கள் போன்றவை அவற்றுள் அடங்கும். அதிமுக்கியத் துறைகளுக்குத் தேவைப்படும் குடிபெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வந்து சேர்வதற்கு PSA நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் வழிநடத்தினார்.

மேலும் வலிமை பெற்று மீண்டெழுவதற்கான பணிக்குழுவின் இணைத் தலைவராக தேசிய வளர்ச்சி அமைச்சர் திரு டெஸ்மண்ட் லீ அவர்களுடன் இணைந்து பங்காற்றினார், திரு டான். கொவிட்-19 கிருமிப்பரவலால் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை அடையாளம் கண்டு, சிங்கப்பூரின் பொருளியலும் சமுதாயமும் மீண்டெழும் பொருட்டு, சிங்கப்பூரை ஆயத்தப்படுத்துவதற்காக இந்தப் பணிக்குழு அமைக்கப்பட்டது.

கிருமிப்பரவலைச் சமாளிப்பதற்கான பல நிலைகளில், சிங்கப்பூரின் நடவடிக்கைகளுக்கு ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளின் பேரில், திரு டான் சொங் மெங் அவர்களுக்குப் பாராட்டுப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது (கொவிட்-19).


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


4. ஜனதாஸ் தேவன்
முன்னாள் தலைமை அரசாங்கத் தொடர்பு அதிகாரி,
தொடர்பு, தகவல் அமைச்சு

மூத்த ஆலோசகர் (அரசாங்கத் தொடர்பு),
தொடர்பு, தகவல் அமைச்சு

துணைச் செயலாளர்,
பிரதமர் அலுவலகம்

புகழுரை

திரு ஜனதாஸ் தேவன் கொவிட்-19 பெருந்தொற்றின்போது அரசாங்கத்தின் ஒட்டுமொத்தத் தகவல் தொடர்புகளையும் வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றினார். தொடர்பு, தகவல் அமைச்சின் தகவல் குழுவினர், சூழ்நிலைக்கு ஏற்ப உரிய காலத்தில் பல்வேறு ஊடகத் தளங்களின் வாயிலாகப் பல்வேறு மொழிகளில் தகவல்களை வெளியிட இவர் வழிகாட்டினார். கிருமிப்பரவல் காலக்கட்டத்தில் பொதுமக்கள் தகுந்த முறையில் நடந்துகொள்ளத் தூண்டுவதற்கு இது துணைபுரிந்தது. நெருக்கடிநிலையிலும் தக்க சமயத்தில் வெளிப்படையான முறையில் தகவல்கள் வெளியிடப்பட்டதால் அரசாங்கத்தின் கொவிட்-19 நடவடிக்கைகள்மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை கூடியது.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


5. சீட் உய் லிம்
முன்னாள் தளபதி,
கூட்டுப் பணிக்குழு (உறுதிப்பாடு),
சிங்கப்பூர் ஆயுதப்படை

தளபதி,
மின்னிலக்கத் தற்காப்புத் தளபத்தியம்,
சிங்கப்பூர் ஆயுதப்படை

புகழுரை

பிரிகேடியர் ஜெனரல் சீட் உய் லிம் கூட்டுப் பணிக்குழுவைத் (உறுதிப்பாடு) திறம்பட வழிநடத்தினார். தற்காப்பு அமைச்சு / சிங்கப்பூர் ஆயுதப்படை, உள்துறைக் குழு, சுகாதார அமைச்சு, மனிதவள அமைச்சு, இதர பொது அமைப்புகள் ஆகியவற்றின் அதிகாரிகள் அங்கம் வகித்த இந்தப் பணிக்குழு, குடிபெயர்ந்த ஊழியர்களைப் பெருந்தொற்றின்போது பாதுகாப்பாக வைத்திருக்க இன்றியமையாத பங்காற்றியது. பிரிகேடியர் ஜெனரல் சீட்டின் குழுக்கள், குடிபெயர்ந்த ஊழியர்கள் தங்கியிருந்த விடுதிகளின் நிலவரத்தை ஆராய்ந்து, உடனடியாக வளங்களைத் திரட்டி, பாதிக்கப்பட்ட 100,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அத்தியாவசியமான சுகாதாரப் பராமரிப்புடன் இதர சேவைகளும் ஆதரவும் வழங்கின.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


6. தினே‌ஷ் வாசு தா‌ஷ்
குழு இயக்குநர் (நெருக்கடிநிலை உத்தி, செயலாக்கங்கள்),
சுகாதார அமைச்சு

புகழுரை

திரு தினே‌ஷ் வாசு தா‌ஷ், பெருந்தொற்றின் பல்வேறு கட்டங்களின்போது அனைத்து மருத்துவமல்லாத கொவிட்-19 நோயாளி நிர்வாக நடைமுறைகளின் செயலாக்கங்களையும் வழிநடத்தினார். தொடர்புத் தடங்களைக் கண்டறிதல் முதல் தடைக்காப்பு ஆணை, பரிசோதனை, தனிமைப்படுத்தல், வீட்டிலிருந்து குணமடைதல் வரை முக்கிய அம்சங்கள் அனைத்தையும் மேற்பார்வையிட்டார். தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தார். தொலைமருத்துவச் சேவையை வழக்கப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு புத்தாக்கத் தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தவும் இவர் உதவினார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


7. ஃ பொங் கொக் யொங்
குழுமத் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி,
மருத்துவம், மருந்தகச் சேவைகள்,
சிங்கப்பூர்ச் சுகாதாரச் சேவைகள்

புகழுரை

பேராசிரியர் ஃபொங் கொக் யொங், கொவிட்-19ஐ ஒடுக்க முன்னிலையில் இருந்து சிங்ஹெல்த் போராடிக்கொண்டிருந்த அதே வேளையில், சிங்ஹெல்த்தின் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருத்துவக் கவனிப்பு தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்தார். சுகாதார அமைச்சின் சமூகப் பராமரிப்பு வசதிகளுக்கான மருத்துவக் கழகத் தலைவராகவும், சுகாதார அறிவியல் ஆணையத்தின் மருத்துவ ஆலோசனைக் குழுத் தலைவராகவும், பல்வேறு அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட கொவிட்-19 மருத்துவ ஆளுமை, கொள்கை முனைப்புகளை இவர் வழிநடத்தினார். நோயாளிகளின் பராமரிப்பிலும் ஊழியரின் பாதுகாப்பிலும் உயர் தரங்களை நிலைநாட்ட, மருத்துவ நடைமுறைகளையும் புத்தாக்கங்களையும் வகுத்தார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


8. ஐவி இங் சுவீ லியன்
குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி,
சிங்கப்பூர் சுகாதாரச் சேவைகள்

புகழுரை

பேராசிரியர் ஐவி இங், சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சிங்ஹெல்த் நோய்ப்பரவல் பணிக்குழுவின் தலைவராகவும், பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் சிங்ஹெல்த்தின் உத்திகள், கொள்கைகள், நடைமுறைகள் அனைத்தையும் வகுப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் அளித்தார். அவர் சிங்ஹெல்த் மருத்துவ நிலையங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊக்கம் கொடுத்து ஒன்றுதிரட்டினார். அரசாங்கத்தின் கொவிட்-19 முயற்சிகளுக்கு ஆதரவளிக்க, சிங்ஹெல்த்தின் மருத்துவ, செயலாக்க, மனிதவள, உள்கட்டமைப்பு வளங்களை ஒருங்கிணைத்தார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


9. லியோ யீ-சின்
நிர்வாக இயக்குநர்,
தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம்,
தேசிய சுகாதாரப் பராமரிப்பு குழு

புகழுரை

பேராசிரியர் லியோ யீ-சின், தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் சீரிய தலைமைத்துவப் பணியாற்றினார். சிங்கப்பூரின் கொவிட்-19 நிர்வாகத்தில் இந்நிலையம் முன்னிலை வகித்தது. கிருமிப்பரவலின்போது சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பதற்காக, ஆதார அடிப்படையிலான கொள்கைத் தீர்மானங்களை எடுக்க சுகாதார அமைச்சுக்கு இந்நிலையம் உதவியது. மருத்துவ, பொதுச் சுகாதார, ஆய்வு, பயிற்சிக் குழுக்களுக்கு இடையில் வலுவான ஒத்துழைப்பை இவர் உறுதிசெய்தார். நோயைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்த கொவிட்-19 ஆய்வுப் பணிக்குழுவுக்கு இவர் தலைமையேற்றிருந்தார். சிகிச்சைகளையும் தடுப்புமருந்துகளையும் உருவாக்குவதில் இப்பணிக்குழு முக்கியப் பங்காற்றியது.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


10. ஓங் கியன் சுங் பெஞ்சமின்
தலைவர்,
சுகாதார அறிவியல் ஆணையம்

கொவிட்-19 பெருந்தொற்றுக்கான சுகாதார அமைச்சின் மூத்த ஆலோசகர்

மூத்த துணைத் தலைவர், (சுகாதாரக் கல்வி, வளங்கள்),
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்

மூத்த மருத்துவ நிபுணர்,
நரம்பியல் மருத்துவப் பிரிவு,
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை,
தேசியப் பல்கலைக்கழக சுகாதார செயல்முறை

புகழுரை

பேராசிரியர் ஓங் கியன் சுங் பெஞ்சமின், சுகாதார அமைச்சின் கொவிட்-19 தலைமைத்துவக் குழுவில் முக்கிய உறுப்பினராக அங்கம் வகித்தார். கொவிட்-19 தடுப்பூசி குறித்த நிபுணர் குழுவுக்கு இவர் தலைமையேற்றிருந்தார். சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசி, கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசித் திட்டங்களுக்கான பரிந்துரைகளை இந்தக் குழு தயாரித்தது. இதர கொவிட்-19 திட்டமிடல் குழுக்களிலும் முன்னணி வல்லுநராக இவர் முக்கியப் பங்காற்றினார். பரிசோதனை, தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள், முதியோரின் பாதுகாப்பு, பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள், வெளியேற்ற உத்திகள் ஆகியவற்றை ஆராய்ந்த குழுக்களும் அதில் அடங்கும்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


11. ஃபிலிப் டான் எங் சியோங்
முன்னாள் தலைவர்,
சமூக உண்டியல்

புகழுரை

சமூக உண்டியலின் முன்னாள் தலைவரான திரு ஃபிலிப் டான் எங் சியோங் பெருந்தொற்றின்போது சமூகச் சேவைகளுக்கு உதவிபுரிய நன்கொடையாளர்களையும் பங்காளிகளையும் ஒன்றுதிரட்டினார். இவரது தலைமையில் சமூக உண்டியல் 2020ல் சாதனை அளவாக $87 மில்லியன் திரட்டியது. இதில் $31 மில்லியன் கொவிட் சார்ந்த தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டது. 90க்கும் மேற்பட்ட சமூகச் சேவை அமைப்புகளின் தொழில்கள் நீடிப்பதற்கு ஆதரவளித்த இன்விக்டஸ் நிதியும் கொவிட்-19ஆல் பாதிப்படைந்த 42,000க்கும் மேற்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், முன்னிலை ஊழியர்கள் ஆகியோருக்கு ஆதரவளித்த துணிவு நிதியும் இதில் அடங்கும்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


12. டான் சோர் சுவான்
தலைமைச் சுகாதார அறிவியலாளர்,
சுகாதார அமைச்சு

நிர்வாக இயக்குநர்,
சுகாதார அமைச்சின் சுகாதாரப் பராமரிப்பு உருமாற்ற அலுவலகம்

புகழுரை

பேராசிரியர் டான் சோர் சுவான், சுகாதார அமைச்சின் தலைமைச் சுகாதார அறிவியலாளர் என்ற முறையில், தேசிய ஆய்வுகளை ஒருங்கிணைத்தார். அவை பெருந்தொற்றின்போது செயல்படுத்தப்பட்ட பொதுச் சுகாதாரக் கொள்கைகளை விவரித்தன. நோய்ப்பரவலின் இயல்பு, நோய்ப்பரவல் முறை, நோய்த் தொற்றினாலும் தடுப்பூசியாலும் கிடைக்கும் நோயெதிர்ப்புச் சக்தி, கிருமிப் பரிசோதனைக் கருவிகளின் விரைவான உருவாக்கம், சிகிச்சைகள் மற்றும் தடுப்பு மருந்துகளின் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட பலவற்றிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கிருமியின் இயல்பைப் புரிந்துகொள்ளவும், அதனை ஒடுக்கவும், மேம்பட்ட பரிசோதனைகள், தடுப்பூசிகள், சிகிச்சைகள் ஆகியவற்றை அடையாளம் காணவும் ஆய்வுத் திட்டப்பணிகளை அவர் ஒருங்கிணைத்தார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


13. டான் ஹீ டெக்
தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி,
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா பிரைவெட் லிமிடெட்

புகழுரை

திரு டான் ஹீ டெக், சிங்கப்பூர் எக்ஸ்போவில் முதல்முறையாக சமூகப் பராமரிப்பு வசதி ஒன்றை நடத்தவும் நிர்வகிக்கவும் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் குழுவை வழிநடத்தினார். தங்கும் விடுதிகளில் கிடுகிடுவென அதிகரித்துவந்த கிருமிப்பரவலைச் சமாளிக்கவும் மருத்துவமனைகளில் அளவுக்கதிக நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் பராமரிப்பு வசதியின் கொள்ளளவு வேகமாக அதிகரிக்கப்படவேண்டிய அவசியம் எழுந்தது. கிருமிப்பரவலின் ஆக மோசமான அந்நிலையை சிங்கப்பூர் சமாளிப்பதற்கு இவரது முன்னோக்கும் தலைமைத்துவமும் கைகொடுத்தன. இதுபோன்ற மற்ற வசதிகளின் நிர்வாகத்திற்கும் இவரது பணி ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


14. வெர்னன் லீ ஜியன் மிங்
மூத்த இயக்குநர் (தொற்றுநோய்ப் பிரிவு),
சுகாதார அமைச்சு

புகழுரை

பேராசிரியர் வெர்னன் லீ ஜியன் மிங், பெருந்தொற்றுக் காலக்கட்டம் முழுவதும் அமைச்சரவை, அமைச்சர்நிலைப் பணிக்குழு, பல்வேறு அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றுக்கு முக்கிய ஆலோசகராக வலுவான ஆதரவளித்தார். சிங்கப்பூரின் கொவிட்-19 கிருமிப்பரவல் கட்டுப்பாட்டு முறையில் இவர் முக்கியப் பங்காற்றினார். நோயாளிகளை நிர்வகிக்கும் நடைமுறைகள், தொடர்புத் தடங்களைக் கண்டறியும் வழிமுறைகள், தடைக்காப்பு முறைகள், சமூகப் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள், தடுப்பூசி அடிப்படையிலான மாறுபட்ட பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் ஆகியவை இதில் அடங்கும். இவர் பல்வேறு துறைகளின் மறுதிறப்பு, பாதுகாப்பான நிர்வாகம் ஆகியவற்றின் தொடர்பில் அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


15. வோங் ஹியாங் ஃபைன்
முன்னாள் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி,
சர்பானா ஜூரோங் கன்சல்டன்ட்ஸ் பிரைவெட் லிமிடெட்

புகழுரை

திரு வோங் ஹியாங் ஃபைன், சிங்கப்பூர் எக்ஸ்போவிலும் பிக் பாக்ஸிலும் சமூகப் பராமரிப்பு வசதிகளை அமைத்த குழுவை வழிநடத்தினார். குடிபெயர்ந்த ஊழியர்கள் குறைவாக இருந்த சவால்மிக்கச் சூழலில், விநியோகத் தொடர் இடர்பாடுகள், கால வரம்புகள் ஆகியவற்றுக்கு மத்தியில் குழுவினர் செயல்பட்டனர். அதுவரை இருந்திராத ஒரு வசதியைக் குழுவினர் அமைப்பதற்குத் திரு வோங்கின் அறிவுத்திறன் துணைபுரிந்தது. தங்கும்விடுதிகளில் கிருமிப்பரவலைச் சமாளிப்பதற்கு இந்த வசதி உறுதுணையாக இருந்தது.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


16. இயோ கே குவான்
தலைமை நிர்வாகி,
பல்கலைக்கழகச் சுகாதாரச் செயல்முறை (NUHS)

மூத்த ஆலோசகர்,
இரைப்பைக் குடலியல் கல்லீரல் பிரிவு,
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை
தேசியப் பல்கலைகழகச் சுகாதாரக் கட்டமைப்பு,
சுகாதார அமைச்சு

புகழுரை

பேராசிரியர் இயோ கே குவானின் தலைமைத்துவத்தின்கீழ், பெருந்தொற்றை ஒடுக்குவதற்கான தேசிய முயற்சிகளுக்கு தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரச் செயல்முறை (NUHS) வலுவான ஆதரவு வழங்கியது. நோயாளிகளுக்குப் பராமரிப்பளிக்க, NUHS அதன் சமூகப் பராமரிப்பு வசதிகளின் கொள்ளளவைப் பெருமளவு விரிவுபடுத்தியது. தேசிய கொவிட்-19 பரிசோதனைக் கொள்ளளவையும் NUHS மேம்படுத்தியது. அதோடு, கிருமிப்பரவலின் சிரமங்களை எதிர்கொள்ள, சுகாதாரப் பராமரிப்பளிக்கும் முறையில் புத்தாக்கங்களையும் அறிமுகப்படுத்தியது. தலைமை நிர்வாகி என்ற முறையில், நெருக்கடிகாலம் முழுவதும் ஊழியர்களின் பாதுகாப்பு, சமூகநலன், மனநலன் அனைத்தையும் பேராசிரியர் இயோ உறுதிசெய்தார். மேலும், கொவிட்-19 இயல்புநிலைக்கு மாறுவதற்கும் துணைபுரிந்தார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


17. சிம் வாய் மெங் மார்வின்
ஆணையர்,
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்,
உள்துறை அமைச்சு

புகழுரை

திரு சிம் வாய் மெங், கொவிட்-19 பெருந்தொற்றின்போது குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தை வழிநடத்தி, சிக்கலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் நிர்வகித்தார். குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் சிங்கப்பூருக்குள் கொவிட்-19 வரக்கூடிய அபாயத்தைக் குறைக்கும் அதேவேளையில், அத்தியாவசியப் பயணங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களின் தருவிப்புக்கும் துணைபுரியும் சிக்கலான பணியை மேற்கொண்டிருந்தது. பொதுச் சுகாதாரத்தைக் காப்பதற்காக, முக்கியமான பல்வேறு கொவிட்-19 நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதிலும் திரு சிம் அரும்பங்காற்றினார். வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு, பாதுகாப்பான பயண அலுவலகம் போன்ற நாடளாவிய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


18. டீ சொங் ஃபுய் சாம்
முன்னாள் மாற்றுச் செயலாளர்,
உள்நாட்டு நெருக்கடிநிலை நிர்வாகக் குழு,

முன்னாள் மூத்த இயக்குநர்,
கூட்டுச் செயலாக்கக் குழு,
உள்துறை அமைச்சு

இயக்குநர்,
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு,
உள்துறை அமைச்சு

புகழுரை

திரு டீ சொங் ஃபுய் சாம் HCEG குழுவுக்கும் அமைச்சர்நிலைப் பணிக்குழுவுக்கும் ஆதரவளிக்க, உள்நாட்டு நெருக்கடிநிலை நிர்வாகக் குழு (HCEG) செயலவையைத் திறம்பட வழிநடத்தினார். கொவிட்-19 பெருந்தொற்றின் தொடர்பில் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் நடவடிக்கையையும் ஒருங்கிணைப்பதில் செயலவை முக்கியப் பங்காற்றியது. பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து திட்டமிட்டு கொவிட்-19 கொள்கைகளின் அமலாக்கத்தைக் கண்காணிப்பதும், செயலாக்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதும் இதில் அடங்கும். எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டிக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் உறுதுணையாக விளங்கினார் திரு டீ.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


19. பேட்ரிக் ஆங் பெங் கூன்
நிர்வாகப் பங்காளி,
ராஜா அண்ட் டான் சிங்கப்பூர் எல்எல்பி

புகழுரை

திரு பேட்ரிக் ஆங் பெங் கூன் சமூகத்தின் நலனில் அளப்பரிய அக்கறை கொண்டவர். சிங்கப்பூரின் கொவிட்-19 போராட்டத்திற்குப் பெரும்பங்காற்றிய முக்கிய சட்டத்துறைத் திட்டங்களை இவர் வழிநடத்தினார். முன்மாதிரிகள் இல்லாத சட்டங்களை வகுப்பதற்கு இவர் மதிப்புமிக்க நிபுணத்துவ வழிகாட்டுதல் வழங்கினார். கிருமிப்பரவலால் பாதிப்படைந்த தொழில்களுக்கும் தனிநபர்களுக்கும் நிவாரணம் வழங்கிய வாடகை நிவாரணக் கட்டமைப்பும் இதில் அடங்கும்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


20. சு‌ஷில் நாயர்
துணைத் தலைமை நிர்வாக அதிகாரி,
ட்ரூ அண்ட் நேப்பியர் எல்எல்சி

புகழுரை

திரு சு‌ஷில் நாயர், கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தின்போது சமூக நலன்மீது சீரிய அக்கறை காட்டினார். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசரகாலச் சட்டங்களை வகுப்பதற்கு மதிப்புமிக்க வழிகாட்டுதலும் யோசனைகளும் அளித்தார். ஒப்பந்தப்படி பொறுப்புகளை நிறைவேற்றுவதிலிருந்து தற்காலிக விலக்கு வழங்குதல், வாடகை நிவாரணக் கட்டமைப்பு போன்ற சட்டங்கள் இதில் அடங்கும். இவை அனைத்தும் தொழில்களை நிலைப்படுத்தி, வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க உதவின.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


21. சாம் ஹுய் ஃபொங்
துணைத் தலைமைச் செயலாளர்,
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்

புகழுரை

திருவாட்டி சாம் ஹுய் ஃபொங், கொவிட்-19 பெருந்தொற்றின்போது, புதிய வேலையிட நடைமுறைகளின் தொடர்பில் மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்ட தமது குழுவை வழிநடத்தினார். தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் வழங்கி, முத்தரப்புக் கொள்கைகள் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நியாயமாக இருப்பதை உறுதிசெய்தார். இந்தக் கொள்கைகளுக்கு அடித்தள ஆதரவை இவர் திரட்டினார். இதன்வழி, தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு, தொழில் நிலைத்தன்மையையும் வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய முடிந்தது.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


22. சிம் கிம் குவான்
நிர்வாக இயக்குநர்,
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம்

புகழுரை

திரு சிம் கிம் குவான், கொவிட்-19 பெருந்தொற்றின்போது, பல புதிய வேலையிட நடைமுறைகளின் தொடர்பில் மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து பணியாற்றிய சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனக் குழுவை வழிநடத்தினார். முதலாளிகளின் மனிதவள அக்கறைகளுக்கு முத்தரப்புக் கொள்கைகள் தீர்வு காண்பதை இவர் உறுதிசெய்தார். அதோடு, முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஒத்துழைப்பை ஊக்குவித்தார். முத்தரப்புக் கொள்கைகளுக்கு முதலாளிகளின் ஆதரவைத் திரட்ட இவரது தலைமைத்துவம் துணைபுரிந்தது. இதன்வழி, முதலாளிகளும் தொழிலாளர்களும் பெருந்தொற்றின்போது இணைந்து செயல்பட்டு வாழ்வாதாரத்தைக் கட்டிக்காக்க முடிந்தது.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


23. அனிதா ஃபாம் சியூ பிங்
தலைவர்,
தேசிய சமூகச் சேவை மன்றம்

புகழுரை

திருவாட்டி அனிதா ஃபாம் சியூ பிங் பெருந்தொற்றின்போது சமூகச் சேவைகள் துறைக்கு ஆதரவளிப்பதற்காக தேசிய சமூகச் சேவை மன்றம் மேற்கொண்ட முயற்சிகளை வழிநடத்தினார். இன்விக்டஸ் நிதியை இவர் தொடங்கிவைத்தார். அந்த நிதி 90க்கும் மேற்பட்ட சமூகச் சேவை அமைப்புகள் தொழிலைத் தொடர்வதற்கு வழிவகுத்தது. அதே வேளையில், உதவி தேவைப்படுவோருக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காகத் தங்களது தொழில் முறைகளையும் மாற்றியமைக்க முடிந்தது. பெருந்தொற்றுக்குப் பிந்திய சிங்கப்பூரில் சமூகச் சேவைத்துறையின் மீள்திறனை வலுப்படுத்துவதற்காக, கொவிட்-19க்குப் பிந்திய பணிக்குழுவையும் திருவாட்டி ஃபாம் வழிநடத்தினார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


24. ஃபிலிப் டான் எங் சியோங்
முன்னாள் தலைவர்,
சமூக உண்டியல்

புகழுரை

சமூக உண்டியலின் முன்னாள் தலைவரான திரு ஃபிலிப் டான் எங் சியோங் பெருந்தொற்றின்போது சமூகச் சேவைகளுக்கு உதவிபுரிய நன்கொடையாளர்களையும் பங்காளிகளையும் ஒன்றுதிரட்டினார். இவரது தலைமையில் சமூக உண்டியல் 2020ல் சாதனை அளவாக $87 மில்லியன் திரட்டியது. இதில் $31 மில்லியன் கொவிட் சார்ந்த தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டது. 90க்கும் மேற்பட்ட சமூகச் சேவை அமைப்புகளின் தொழில்கள் நீடிப்பதற்கு ஆதரவளித்த இன்விக்டஸ் நிதியும் கொவிட்-19ஆல் பாதிப்படைந்த 42,000க்கும் மேற்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், முன்னிலை ஊழியர்கள் ஆகியோருக்கு ஆதரவளித்த துணிவு நிதியும் இதில் அடங்கும்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


25. டாக்டர் சையத் ஃபிடா பின் இஸ்மாயில் அல்சகோஃப்
கூட்டுத் தலைவர்,
நிறுவன மேம்பாட்டுக் குழு (சிங்கப்பூர்)
தலைவர், உயிர் அறிவியல்,
தெமாசெக் இன்டர்நே‌ஷனல் பிரைவெட் லிமிடெட்

புகழுரை

டாக்டர் சையத் ஃபிடா பின் இஸ்மாயில் அல்சகோஃப், தெமாசெக்கின் உயிர் அறிவியல் பிரிவுத் தலைவராகவும் நிறுவன மேம்பாட்டுக் குழுவின் கூட்டுத் தலைவராகவும், கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்திற்கு உறுதுணையாகத் தெமாசெக்கின் திட்டங்களை ஒருங்கிணைத்தார். பொது, தனியார், மக்கள் துறைகளில் முக்கியப் பங்காளிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டு, பரிசோதனை செய்தல், நோயறிதல், கட்டுப்படுத்துதல், தொடர்புத் தடங்களைக் கண்டறிதல், பராமரிப்பும் சிகிச்சையும் அளித்தல், பாதுகாத்தல், தடுத்தல், துணைபுரிதல் போன்றவற்றில் தெமாசெக் மேற்கொண்ட முயற்சிகள் நம் சமூகத்திற்கு உதவியாக இருப்பதை உறுதிசெய்தார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


26. லீ சியாவ் ஹியாங்
தலைமை நிர்வாக அதிகாரி,
சாங்கி விமான நிலையக் குழுமம்

புகழுரை

திரு லீ சியாவ் ஹியாங், கொவிட்-19ஐ சமாளிக்க விமான நிலையம் முழுமைக்குமான பல்வேறு முயற்சிகளை வழிநடத்தினார். பெருந்தொற்றால் விமானத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இவரது தலைமைத்துவத்தின்கீழ், சாங்கி விமான நிலையக் குழுமம் விமான நிலையச் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் மாற்றியமைத்து, பொதுச் சுகாதார, எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்டுவந்தது. விமான நிலையச் சமூகத்தோடும் தொழிற்சங்கங்களோடும் இவர் கொண்டிருந்த வலுவான பங்காளித்துவம், ஆதரவு திரட்டுவதற்குப் பெரிதும் உதவியதோடு, அத்தியாவசிய விமானச் சேவைகளுக்கும் பயணத்திற்கும் விமான நிலையம் தொடர்ந்து திறந்திருப்பதையும் உறுதி செய்தது.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


27. லியூ கியா எங் மேரி
பொதுச் செயலாளர்,
சிங்கப்பூர்க் கடல்துறை அதிகாரிகள் தொழிற்சங்கம்

தலைவர்,
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்

புகழுரை

திருவாட்டி லியூ கியா எங் மேரி கொவிட்-19 கொள்கைகளுக்குத் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, தடைக்காப்பு வசதிகளின் தணிக்கை, கப்பல் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போன்ற கப்பல்துறை முத்தரப்புக் கூட்டணி மீள்திறன் நிதிப் பணிக்குழுவின் முயற்சிகளுக்கு இவர் ஆதரவு திரட்டினார். கப்பல் பணியாளர்களின் தடைக்காப்பு ஏற்பாடுகளுக்குத் தொழில்துறையின் ஆதரவைத் திரட்ட, அனைத்துலகப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம், அனைத்துலகக் கடல்துறை முதலாளிகள் மன்றம் போன்ற அனைத்துலக அமைப்புகளையும் இவர் ஈடுபடுத்தினார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


28. யாங் யுவென் டிசிர், கேரலின்
தலைவர்,
சிங்கப்பூர் கப்பல்துறை முத்தரப்புக் கூட்டணி மீள்திறன் நிதிப் பணிக்குழு

தலைவர்,
சிங்கப்பூர் கப்பல்துறை சங்கம்

புகழுரை

திருவாட்டி யாங் யுவென் டிசிர், கேரலின் கப்பல்துறை முத்தரப்புக் கூட்டணி மீள்திறன் நிதிப் பணிக்குழுவுக்குத் தலைமையேற்றுக் கப்பல் பணியாளர் மாற்றத்தில் சீரிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க நாடுகளுக்கு உதவினார். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த, சிங்கப்பூர்க் கப்பல்துறைச் சங்கத்தையும் தொழில்துறை வளங்களையும் இவர் பயன்படுத்தினார். தடைக்காப்பு வசதிகளின் தணிக்கை, கப்பல் பணியாளர் மாற்றத்திற்கான நடைமுறைகள், கப்பல் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போன்றவை இதில் அடங்கும். இக்கட்டான கிருமிப்பரவல் காலக்கட்டத்தில் உலகளாவிய கப்பல்துறைச் சமூகத்தின் ஒரு தலைவராக சிங்கப்பூர் அங்கீகாரம் பெறுவதற்கு இவரது தலைமைத்துவம் துணைநின்றது.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


29. திரு சாமுவெல் நாக் ட்சியன்
முன்னாள் தலைவர்,
சிங்கப்பூர் வங்கிகள் சங்கம்

புகழுரை

சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் தலைவராக 2019 முதல் 2021 வரை பொறுப்பேற்றிருந்த திரசாமுவெல் நாக் ட்சியன் அரசாங்க, நிதித் தொழில்துறையின் நிவாரண நடவடிக்கைகளுக்கு வலுவான ஆதரவளிக்கும் வகையில் சங்கத்தை வழிநடத்தினார். கொவிட்-19 பெருந்தொற்றின்போது தனிமனிதர்கள், தொழில்களின் நிதிச் சிரமங்களைத் தணிப்பதற்கு இந்நடவடிக்கைகள் உதவின.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


30. சொங் வீ சியோங்
புரவலர்,
சுவா சூ காங் குடிமக்கள் ஆலோசனைக் குழு

புகழுரை

திரு சொங் வீ சியோங், பெருந்தொற்றின்போது சுவா சூ காங்கில் இருந்த சந்தைகளில் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கு வியாபாரிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டார். சந்தைக் கடைகளைத் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றுவதில் இவர் முக்கியப் பங்காற்றினார். இதனால் வாடிக்கையாளர்களும் கடைக்காரர்களும் பாதுகாப்பாக இருந்ததோடு வியாபாரமும் தடங்கலின்றித் தொடர்ந்தது. சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் போன்ற திட்டங்களுக்காக மின் கட்டணமுறைகளைப் பயன்படுத்தும்படி வியாபாரிகளுக்கு இவர் ஊக்கமளித்தார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


31. சுவா கியன் மெங், JP
தலைவர்,
பொத்தோங் பாசிர் குடிமக்கள் ஆலோசனைக் குழு

புகழுரை

திரு சுவா கியன் மெங், 2002 முதல் பொத்தோங் பாசிர் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைவராகச் சேவையாற்றுகிறார். கொவிட்-19 பெருந்தொற்றின்போது குடியிருப்பாளர்களுக்கு இவர் பல்வேறு வழிகளில் உதவினார். மூத்தோரின் வீடு தேடிச்சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவித்தல், தடைக்காப்பு ஆணையின்கீழ் வீட்டிலிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு மளிகைப் பொருட்களை எடுத்துச்சென்று கொடுத்தல், குடியிருப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் உடல்நிலை, மனநிலை பற்றிக் கேட்டறிதல் ஆகியவை இதில் அடங்கும்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


32. கென்னி சிம் மொங் கியாங்
தலைவர்,
புக்கிட் தீமா குடிமக்கள் ஆலோசனைக் குழு

புகழுரை

டாக்டர் கென்னி சிம் மொங் கியாங், ஆழ்ந்த அனுபவம் பெற்ற அடித்தளத் தலைவர். இவர் பெருந்தொற்றின்போது, சமூகத்திற்கு ஆதரவும் பராமரிப்பும் வழங்கப் பல முக்கிய திட்டங்களை வழிநடத்தினார். எளிதில் பாதிப்படையக்கூடிய குடியிருப்பாளர்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோருக்கு உணவு, பராமரிப்புப் பைகள், கை சுத்திகரிப்பான்கள், முகக்கவசங்கள் ஆகியவற்றை விநியோகிக்கும் திட்டமும் இதில் அடங்கும். உதவி தேவைப்பட்ட மூத்தோருக்கு மனமுவந்து உதவி வழங்கினார். குடும்ப உறுப்பினர்கள் இல்லாத முதியோரின் இறுதிச் சடங்கிற்கும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


33. குவா போ கெங், டோன்
புரவலர்,
கெம்பாங்கான்-சாய் சீ குடிமக்கள் ஆலோசனைக் குழு

புகழுரை

திரு குவா போ கெங், டோன், 2005 முதல் அடித்தளத் தலைவராகச் சமூகத்திற்கு சேவையாற்றி வருகிறார். கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதில் இவர் உதவினார். கெம்பாங்கான்-சாய் சீ வட்டாரத்திலும் மற்ற வட்டாரங்களிலும் கொவிட்-19ஆல் பாதிப்படைந்த 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பராமரிப்புப் பைகளை வாடிக்கையாக விநியோகம் செய்வதில் இவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


34. டான் மெங், JP
கௌரவத் தலைவர்,
நீ சூன் ஈஸ்ட் குடிமக்கள் ஆலோசனைக் குழு

புகழுரை

திரு டான் மெங், பல ஆண்டுகளாக அடித்தளத் தலைவராகச் சேவையாற்றி வருகிறார். கொவிட்-19 பெருந்தொற்றின்போது, நீ சூன் ஈஸ்ட் குடியிருப்பாளர்களுக்காக தேசிய, வட்டாரத் திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தினார். எளிதில் பாதிப்படையக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசியமான சுகாதாரப் பராமரிப்புப் பொருட்களை விநியோகித்தல், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் 163 அடுக்குமாடிக் கட்டடங்களின் மின்தூக்கிகளில் ஆறு மாத காலத்திற்குக் கை சுத்திகரிப்பான்களை வழங்குதல், மூத்தோரின் வீடு தேடிச்சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவித்தல், வேலைகளை இழந்தவர்களுக்கு உரிய நேரத்தில் நிதி உதவி வழங்குதல் ஆகியவை அந்தத் திட்டங்களில் அடங்கும்.


THE PUBLIC SERVICE STAR (COVID-19)
பொதுப் பணிச் சிறப்புப் பதக்கம் (கொவிட்-19)


35. டோ கொக் வீ
தலைவர்,
டெக் கீ சமூக மன்ற நிர்வாகக் குழு

புகழுரை

திரு டோ கொக் வீ, டெக் கீ பராமரிப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர். கொவிட்-19 பெருந்தொற்றின்போது குடியிருப்பாளர்களின் நலனை உறுதிசெய்ய டெக் கீ தொகுதிப்பிரிவு மேற்கொண்ட முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றினார். வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடிக் கட்டடங்களின் மின்தூக்கிகளில் கை சுத்திகரிப்பான்களை வழங்கும் திட்டத்தையும் வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்தோருக்கு உணவு விநியோகிக்கும் நடவடிக்கையையும் இவர் வழிநடத்தினார். குடியிருப்பாளர்களிடையில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை வளர்க்கவும், கொவிட்-19 நிலவரம் பற்றி உடனுக்குடன் தகவல் அளிக்கவும் சம்பந்தப்பட்டவர்களுடன் இவர் அணுக்கமாகச் செயல்பட்டார்.


TOP